மகாப் பெரியவர்களுடைய பாதங்களில் நான் சமர்ப்பிக்கும் சிறுகாணிக்கையாக, ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதாக, எண்ணிக் கொண்டு என்னை இந்தப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டேன்.
மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை முதலில் விரிவாக உருவாக்கியுள்ள பெருமை ஸ்ரீ.எஸ்.சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவர்களையே சாரும், பூர்வாசிரமத்தில் ஸ்ரீ ஆஞ்சனேயர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஸ்ரீ அனந்தானேந்திர சரஸ்வதி சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டிருந்த நாட் குறிப்பும், ஸ்ரீ காமகோடி பிரதீபத்தில் பிரசுரமாகி இருந்த விஷயங்களும், அதைத் தொகுத்து அளிக்க உதவியது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள், மகாப் பெரியவர்களிடம் பெரும் பக்தியும் மரியாதையும் கொண்டிருந்த அவர்கள் இதை ஒரு தவமாகவே செய்திருக்கிறார்கள். ஸ்ரீ மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கையை 1957ம் ஆண்டு வரையில் இந்த நூல் சுமார் 150 பக்கங்களில் விரிவாக வருணிக்கிறது. குறிப்பாக அவர்கள் நிகழ்த்திய புனிதமான விஜய யாத்திரையை மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறது.
ஓரளவு – இதை ஒட்டியும், அனுபவங்களையும், நேரில் தரிசித்தும், ஆசிகளைப் பெற்றும் உணர்ந்ததையும் வைத்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஸ்ரீ.டி.எம்.பி. மகாதேவன் அவர்கள், மகாசுவாமிகளின் அறுபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி 'ஸ்ரீகாஞ்சி முனிவர்’ (Sage of Kanchi) என்ற நூலை எழுதியிருக்கிறார். இது சுமார் 1963-ம் ஆண்டு வரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ ஆசாரிய சுவாமிகளின் உபந்நியாசங்களை, 1960-ம் ஆண்டு வரை மூன்று பாகங்களாகக் கலைமகள் காரியாலயம் தொகுத்து வெளியிட்டுள்ளது.
அதற்குப் பிறகு இன்று வரையில் நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுப்பது எப்படி? "கல்கி" இதழ்களிலும் தீபாவளி மலர்களிலும் மகா பெரியவர்களுடைய அமுத மொழிகளும், சிறு குறிப்புகளும் நிறைய வெளி வந்துள்ளன. 1976 முதல் 1992 வரை வெளிவந்த, ஸ்ரீரா. கணபதி தொகுத்துள்ள "தெய்வத்தின் குரல்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, ஐந்து அரிய தொகுப்புகளில் மகா பெரியவர்களுடைய உபதேசங்களும், கருத்துக்களும் சில நிகழ்ச்சிகளின் குறிப்புகளும் கூடக் கிடைக்கின்றன. கடந்த பதினோரு ஆண்டுகளாக இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவே சேவை செய்து வரும் 'ஞானபூமி’ மாத இதழில் வெளி வந்துள்ளன.
மகா பெரியவர்களுடைய வாழ்க்கையை ஒரு நூலாக எழுதுகிறோம் என்ற உணர்வே எனக்கு மாபெரும் எழுத்து பயத்தை அளித்தது. என்னை ஆசீர்வதித்து இப்பணியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் ஈடுபடுத்தி இருக்கிறார் என்ற நினைப்பே என் முயற்சிக்கு இணையிலாத ஊக்கத்தைக் கொடுத்தது.
ஏறத்தாழ நூறு நாட்களில், சுமார் நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த ஸ்ரீ மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை, சுமார் முந்நூற்றைம்பது பக்கங்களில் எழுதி முடிக்கும் முயற்சியில் முனைத்தேன். அதில் நான் ஓரளவேனும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது, முழுக்க முழுக்க நான் ஒவ்வொரு நாளும் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டது மகா பெரியவர்களின் அருளாசிதான், அவர்களுக்காக, அவர்களுடைய பொற்பாதங்களில் பணிந்து நான் மேற்கொள்ளும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் அருளாணையை நிறைவேற்றுகிறோம் என்ற உணர்வு, இருளையும், மருளையும் நீக்கி எனக்குத் துணை செய்தது.
ஸ்ரீ மகா பெரியவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளைத் தொடர்ச்சியாக 1993-ம் ஆண்டு வரை சேர்த்துத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள முதல் நூல் என்ற வகையில், இது எதிர்கால இளைய தலைமுறையினருக்கும், மகா பெரியவர்களின் பக்தர்களாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் மக்கள் பலருக்கும் புனித விஷயங்களை அளிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
புஜ்ய ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்களின் பாவன சரணங்களில் இந்தச் சிறுகாணிக்கையைச் சமர்ப்பிப்பதை, அவர்களுடைய நூறாவது ஆண்டு விழா தொடங்கும் தருணத்தில் இதை ஒரு வாய்ப்பாகப் பெற்றதை, அவர்களே உள்ளம் கனிந்து எனக்கு அருளிய ஆசியாக எண்ணிக் கண்ணீர்ப் பூக்களை உதிர்த்துத் தலை வணங்குகிறேன். - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now