Home / eBooks / Jodi Sera Aasai
Jodi Sera Aasai eBook Online

Jodi Sera Aasai (ஜோடி சேர ஆசை)

About Jodi Sera Aasai :

ஓர் இலக்கியப் படைப்பாளிக்குப் படைப்பாற்றல், இயற்கையிலேயே அமைகிறது. பின்னர், கூர்ந்து கவனித்தல், சிந்தித்தல், கற்பனை வானில் சிறகு விரித்துப் பறத்தல் முதலிய சில குணைக் கருவிகளால் அவ்வாற்றல் மெருகேற்றப்படுகிறது. ஒரு பின்னணியை அடையாளங் கண்டபின், அதற்குத் தொடர்புள்ள (உண்மையான அல்லது கற்பனைப்) பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம், அப்பாத்திரங்களோடு தன்னையும், (படிப்பவர்களையும்) ஐக்கியப்படுத்தும் வகையில், அசாதாரணமான சில திருப்பங்களோடு, அக்கருவை வளர்த்து, நிகழ்வுக்கேற்ற சொற்கோவைகளால் இயல்பாக வெளிப்படுத்துவது ஆகிய திறமைகள் அவர்களோடு இரண்டற ஒன்றியவையே எனலாம்.

‘இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்...’ என்று நன்னூலாசிரியர் ஒரு சூத்திரத்தில் கூறுவார். இலக்கியம் பயின்றவர்க்கு இலக்கணம் எளிதில் கைவரும். இலக்கணப் புலமை பெற்று இலக்கியத்தில் கைவைக்கும் போது, அப்படைப்பின் உயிரோட்டம் பாதிக்கப்படலாம்! (யாப்பருங்கலக் காரிகை கற்றுக் கவிபாடுவது) கடினமான பாதை என்பது சான்றோரே வெளியிட்ட கருத்தாகும் ஒரு கவிதையின் வெளிப்பாடு உணர்வுகளின் உந்துதலால் இயல்பாகவே நிகழ வேண்டும்! இது சிறுகதை நவீனம் முதலிய துறைகட்கும் பொருந்தும். ஒருவித மனவெழுச்சியே ஒரு படைப்பாளியின் விளைபொருளாகப் பரிணமிக்கிறது. அத்தகைய படைப்புகளே சிறந்தவையாகவும், வாசகர்களால் கொண்டாடப் படுவனவாகவும் இருக்கும்!

அவ்வகையில், திரு பாமாகோபாலன், திருமதி வேதா கோபாலன் ஆகிய இல்வாழ்விலும், இலக்கியப் படைப்புப் பயணத்திலும் இணைந்த ‘இவ்விரட்டை எழுத்தாளர்களின்’ சாதனைகள் பாராட்டுக்கு உரியவை.

இனிய நண்பர் திரு. பாமா கோபாலன் அவர்கள் சென்னை அ.ம.சமணக் கல்லூரியில் இளநிலை அறிவியில் பயில, எனக்கு ஓராண்டுக்குப் பின் சேர்ந்தார்கள். அப்பொழுது தான் (1960ல்) அறிமுகமானார்கள். அவர்களுக்கு இப்படைப்புத் துறையில் வித்திட்டு, ஊக்குவித்தவர் தமிழறிஞர் பேராசிரியர் நாரண துரைக்கண்ணனார் ஆவார். அவர்களே இவரது முதல் சிறுகதையைத் தனது ‘பிரசண்ட் விகடன்’ இதழில் வெளியிட்டு, இவரை மேன்மேலும் எழுதுமாறு வாழ்த்தினார்கள். பின்னர், காலப்போக்கில், இவர், தமிழுலகில் வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும், சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

ஏறத்தாழ 750க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒன்பது புதினங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சிறப்பு மலர்களிலும் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் புதினம் மாலைமதியில், 1980ல் வெளியிடப்பட்டது. சிறு நாடகங்களும் எழுதியுள்ளார். (தவிர, 1000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேட்டிக் கட்டுரைகளும் வரைந்ததுண்டு.)

நல்ல தமிழறிவோடு கூடிய நகைச்சுவை உணர்வும், கற்பனைத் திறனும் இவரை நாடறியச் செய்துள்ளன. பல முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்களால் பாராட்டப்பட்டவர்.

பழகுவதற்கு எளிய இனிய நண்பர். கூட்டங்களில் கூடத் தன்னைச் சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளாத அடக்கமும், அமைதியும் இவருடன் பிறப்புகளாகும்.

திருமதி வேதாகோபாலன் திறமைகளைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது 1980க்கு பின்னர்தான். செம்புலப்பெயல்நீர் போலக் கணவர்க்கு இன்றுவரை ஒத்துழைப்பு நல்கிக் கடமையாற்றி வருகிறார். கல்லூரி நாட்களிலேயே தமிழ் ஆர்வத்தினால் தனக்கென ஓரிடம் பிடித்த இவர், இன்று படைப்பாற்றலில் சிறந்து விளங்குகிறார். சுமார் 800க்கு மேற்பட்ட சிறுகதைகள், 25 குறும் புதினங்கள் தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகைகளில் இதுவரை வெளிவந்துள்ளன. கலைமகள், ஆனந்த விகடன், அமுத சுரபி முதலிய பத்திரிகைகளின் போட்டிகளிலும் பரிசு வென்றவர். 23 ஆம் அகவையில் முதல் புதினம் படைத்தவர்.

தம்பதியர் இருவருமே, குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், உணர்ச்சிக் கதைகள், அதிர்ச்சிக் கதைகள் முதலிய ஏராளமான சிறுகதை வகைகள் எல்லாவற்றிலும் தம் எழுத்தாற்றலால் பாராட்டப்பட்டவர்கள். வேதியியல் துறையில் பயின்ற தம் கணவர், புதிய மூலக்கூறுகளைப் படைப்பது போன்று எவ்வாறு இலக்கியத் துறையில் செயல்படுகிறாரோ அது போன்றே, கல்லூரியில் ‘வரலாறு’ பயின்ற இவரும், எழுத்துத் துறையில் வரலாறு படைத்து வருகிறார். மொழிபெயர்ப்பு, ஜோதிடம் முதலிய வேறு சில புலங்களிலும் சிறந்து விளங்குகிறார். இல்லத்துக் கடமைகட்கே முதலிடம் தரும் இவர், எழுத்துலகிலும் முத்திரை பதித்துள்ளது, இவரது அயராத உழைப்பிற்கும் ஆற்றலுக்கும் சான்றாகும்.

முனைவர் சீ. சுந்தரம்

About Vedha Gopalan :

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books