இந்த நாவலில் இடம் பெற்றுள்ள ப்ரியா போன்ற ஒரு பெண்ணையும் அவளுடைய குடும்பத்தினர்களையும் நான் ராமேஸ்வரத்தில் சந்தித்தேன். தாங்கவொண்ணா பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு அந்த புண்ணிய பூமியில் 'திலஹோமம்' என்று ஒன்று செய்வார்கள். அவர்களும் அதற்காகத்தான் வந்திருந்தார்கள். அந்நாள்வரை.. அப்படி ஒரு நோய்... உடல் பிரச்சனை இருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் அந்த சின்னப் பெண் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். கொஞ்ச நாட்கள் அந்தப் பெண்ணும் என் மகளும் நட்புடன் பழகி வந்தார்கள்… பின் அந்த நட்பு விட்டுப் போய் விட்டது.
ராஜசேகர் மணிமேகலையும் நிஜத்தில் உலவும் மனிதர்கள்... மணிமேகலை போன்ற, பூமா தேவிக்கு நிகரான ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.
மீனாட்சியும் முழுவதும் கற்பனை பாத்திரமில்லை… குழந்தை பைத்தியம் என்று ஊராரால் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி என் பிறந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பேசுவாள்... செய்வாள்.. சாலையில் போகும் குழந்தைகளைப் பிடித்து சாதம் ஊட்டுவாள். பலகாரங்கள் கொடுப்பாள், தலை பின்னி விடுவாள். நான் குழந்தையாக இருந்த போது.. அவள் என்னையும் பிடித்துக் கொண்டு விடுவாள். அவள் நினைவாகவே மீனாட்சி உருவானாள்.
சந்தியாவும் நிஜம்.. அவளின் ஆஞ்சநேயர் பக்தி நிஜம். ஸ்ரீ வெங்கடேச பட்டாச்சார்யர் எழுப்பியுள்ள 32-36 அடி உயரமுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை எல்லோருமே திருவள்ளூரில் தரிசித்து வரலாம். ஆனால் அந்த ஆலயம் எழுப்பப்படுவதற்குள் அவரின் காலம் முடிந்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அம்பாள் உபாசகியான எனக்கு மேலும் பல வல்லமைகள் கைகூட... சர்வவல்லமை பொருந்திய ஸ்ரீ ஆஞ்சநேயரை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தி மந்த்ர... யந்த்ர உபதேசமும் செய்தார். அன்றிலிருந்து இன்று வரை பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டும் கடந்து கொண்டும் வருகிறேன். அந்த மகானுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நாவலின் மூலம் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
நாவலைப் படியுங்கள்... படித்துவிட்டு நிறை குறைகளை மனம் திறந்து சொல்லுங்கள். நாம் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டேயிருப்போம்.
நன்றி கலந்த வணக்கங்கள்.
என்றும் உங்கள்
ஸ்நேகமுள்ள சியாமளா
(டாக்டர் சியாமனா)
சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.
Rent Now