எல்லவத்திற்குமே ஒரு காரண காரியம் இருக்கும். ஆங்கில நாளிதழின் பணிகளில் ஈடுபட்டு, பிரஷர் குக்கரின் உள்ளே இருந்த நான், அவ்வப்போது தமிழில் புதினங்களை எழுதி, எனது பிரஷரை ரிலீஸ் செய்வேன். இதுவரை பதினைந்து நாவல்களை எழுதி இருக்கிறேன். எனது புதினங்களை வானதி பதிப்பகம், தி ஹிந்து பதிப்பகம், ஸ்ரீ பதிப்பகம் ஆகியவை வெளியிட்டிருப்பினும், புஸ்தகாவில் இப்போதுதான் நான் காலடி எடுத்து வைக்கிறேன்.
கொரோனா கோர தாண்டவமாடி அனைவரையும் வீடு சிறையில் வைக்க, பொழுது போகாமல், முகநூல்களில் முக்கியமான கொலை வழக்குகளை பற்றி எழுதி வந்தேன். அப்போது ஒரு முகநூல் நண்பர், கொரோனா சமயத்தில் கொலைக்கதைகள் எதற்கு ? உங்கள் அப்பாவை போன்று நகைச்சுவை விஷயங்களை எழுதுங்களேன். குறிப்பாக காதலிக்க நேரமில்லை உருவான கதையை பற்றி கூறுங்களேன். பொழுது போகும் '' என்று லட்சுமி நாராயணன் என்பவர் வேண்டியிருந்தார். விளையாட்டாகத்தான் காதலிக்க நேரமில்லை உருவான கதையை எழுத துவங்கினீன். அது பெரும் ஆதரவும், வரவேற்றும் பெற்று, இன்று புஸ்தகாவில் இடம் பெற்று விட்டது.
காதலிக்க நேரமில்லை உருவான விதம், காரணம், அனைத்தையுமே, நகைச்சுவை மற்றும் ஸ்வாரஸ்ய சம்பவங்களாக விவரித்திருக்கிறேன். எனது தந்தை இந்த படத்தின் வசனகர்த்தா சித்ராலயா கோபு அவர்கள், எனது பால்யத்திலிருந்தே எனக்கு விவரித்த சம்பவங்கள், இயக்குனர் ஸ்ரீதர், சி வி ராஜேந்திரன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு ஆகியோருடன் பேசும் பொது அவர்கள் தெரிவித்த சுவையான சம்பவங்கள், அனைத்தையும் திரட்டி காதலிக்க நேரமில்லை உருவான கதையை கூறியிருக்கிறேன்.
ஒரு மாலை பொழுதில் பீச்சுக்கு காற்று வாங்க சென்ற ஸ்ரீதரும்-கோபுவும் எப்படி ஒரு காலத்தால் அழிக்கமுடியாத காவியத்தை உருவாக்கினார்கள்.- என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.
கொரோனா, பொருளாதார சீர்குலைவு போன்ற பிரச்சனைகளை மறந்து சற்று நேரம் சிரிக்க, ரசிக்க, உதவும், இந்த கதை.
இதனை இ- புத்தகமாக வெளியிடும் புஸ்தகாவுக்கு எனது நன்றிகள்.
- காலச்சக்கரம் நரசிம்மா
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்
Rent Now