Home / eBooks / Kaala Pravaham
Kaala Pravaham eBook Online

Kaala Pravaham (காலப் பிரவாஹம்)

About Kaala Pravaham :

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்து போன இந்தக் காலகட்டத்தில், உறவுகளின் உன்னதத்தைப் பற்றிப் பேசும் கதை காலப்பிரவாகம். எத்தனையோ விதமான மாற்றங்களைக் காலப்பிரவாகம் ஏற்படுத்தலாம். நாகரிகங்கள் மாறலாம், பழக்க வழக்கங்கள் மாறலாம், அறிவியல் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், மாறாத குடும்ப உறவுகளுக்கிடையிலான அன்பைக் கதையின் கருவாக்கி, எழுத்து ஏணியின் அடுத்த படிக்கட்டில் கால்பதிக்கிறார்கள் இந்த இரட்டை எழுத்தாளர்கள். பால்ய விவாகத்தில் குடும்ப வாழ்வைத் தொடங்கி, ஒரு மகவு பிறந்ததும் கைம்பெண் கோலம் பூண்டாலும், தளராத மனதுடன் ஆலமரமாய்க் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் மூன்று தலைமுறைக்கு மூத்தவரான ரங்கம் பாட்டியைச் சுற்றிக் கதை பயணிக்கிறது. அவரோடு சேர்ந்து, அந்தக் கால கட்டச் சமுதாயப் பெண்களின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.

எத்தனை விதமான துன்பங்கள் வந்தலும் தளராமல் குடும்ப முன்னேற்றத்திற்காகப் போராடும் பெண்கள், பழமைவாதத்திலிருந்து வெளிவந்து புரட்சிகர எண்ணங்களை விதைக்கிறார்கள். அதை எளிமையான எழுத்து நடையால், நெகிழ வைக்கும் உறவுகளின் பின்னணியோடு சொல்லியியிருக்கிறார்கள்.

ஒரு சில மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே துணிந்து எடுக்கக்கூடிய கதைக்களம் இது. கதை மாந்தர்களின் பெயர்கள் உட்பட ஆச்சாரமான, பழைமையில் ஊறிய, அந்தக்கால கட்டத்தில், இந்தச்சமுதாயத்தில் இருந்த கோட்பாடுகள் தொடங்கி அங்கு பிறந்த பெண்மகவுகளின் நிலை, குழந்தை மணமும், மனமும் மாறா வயதில் மணம் செய்து, அவசரக்கோலம் அள்ளித்தெளித்தாற்போல, புதுப்பெண் கோலம் பூண்டு போன மகவு கைம்பெண் கோலம் கொண்டு, வந்த வழியே திரும்புவது கொடுமை. அதுவும் சாபக்கேடாகப் பல குடும்பங்களில் நாம் கண்ட காட்சிகளை அச்சில் வார்த்து அளித்துள்ளார்கள் எதிர்காலப் புகழேணியில் ஏறக் காத்திருக்கும் இவ்விரட்டை எழுத்தாளர்கள்.

கதை முழுதும் பேச்சுவார்த்தை, சமுதாயப் பேச்சு வழக்கோடு சுருதி விலகாத நாதம் போல, அன்றும் இன்றும் கதையின்நாயகியான ரங்கம் பாட்டியோடு பயணித்திருக்கிறது இந்தக் காலப் பிரவாகம். வர்த்தக ரீதியிலான பல நாவல்களுக்கு மத்தியில், கால ஓட்டத்தில் அடித்துச் செல்லாது நின்று நிலைக்க வாழ்த்துகிறோம்.

அன்புடன்

பாரதி கண்ணம்மா – சென்னை

வசந்தி சில்வெஸ்டா - தூத்துக்குடி.

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review