கோவையிலிருந்து மைசூர் செல்லும் இரவு நேரப் பேருந்து வழியில், நடு ராத்திரியில் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக ஏதோவொரு ஊரின் சிறிய டீக்கடையில் நிற்கிறது.
பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த இளம் எழுத்தாளன் சீனிவாசன் தேநீர் அருந்தி விட்டு, சிறுநீர் கழிப்பதற்காக அந்த டீக்கடையின் பின்புறம் இருட்டான இடத்திலிருந்த புதரை நோக்கிச் செல்கிறான். அங்கே புதருக்குப் பின்னால் ஒரு பாழும் கிணறு இருப்பதை அறியாமல் “சர…சர”வென்று சறுக்கி அதனுள் விழுகிறான். அவன் பின்னாலேயே வந்த அவனது பக்கத்து இருக்கைக்காரன், அதைக் கண்டும் காணாமல் சென்று விடுகிறான். பேருந்தில் நடத்துனர் “எல்லோரும் வந்தாச்சா?” என்று பொத்தாம் பொதுவாய்க் கேட்க, “ம்…வந்தாச்சு” என்று பொய்யும் சொல்கிறான் அவன்.
மைசூரில் பேருந்திலிருந்து இறக்கும் தான் ஏற்கனவே குறி வைத்திருந்தபடி சீனிவாசனின் பேக்கையும் எடுத்துக் கொண்டு இறங்குகிறான். வீட்டிற்குச் சென்று ஆவலோடு அதைத் திறந்து பார்க்க, உள்ளே சீனிவாசனின் கையெழுத்தில் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், தொடர்கதைகள்.
ஆரம்பத்தில் அவற்றைக் குப்பையாய் எண்ணியவன் போகப் போக அதன் மதிப்பை உணர்ந்து தானே எழுதியதாக பத்திரிக்கைகளில் பிரசுரித்து பேரும் புகழும் அடைகிறான்.
அப்போது கிணற்றிலிருந்து வெளிப்பட்ட பூதமாய், சீனிவாசனின் காதலி மூலம் அவனுக்குப் பிரச்சினை வருகின்றது.
மீதியைக் கதையில் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now