Home / eBooks / Kaatrodu Odiyavan!
Kaatrodu Odiyavan! eBook Online

Kaatrodu Odiyavan! (காற்றோடு ஓடியவன்!)

About Kaatrodu Odiyavan! :

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அவசியமா? இந்த சர்ச்சை எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் குற்றமும் தண்டனையும் நீண்டு கொண்டே தானிருக்கின்றன. இந்த சங்கிலித் தொடர் எங்கேதான் முடியும்?

மேலை நாடுகளில் இது பற்றி சர்ச்சைகள் நடந்தன. ஜெர்மனி, இத்தாலி, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட மரண தண்டனையை ஐம்பது ஆண்டுகளாக விவாதித்து, அதை ரத்து செய்வதென்று முடிவு எடுத்திருக்கின்றன. எடுத்து விட்டது.

மகாத்மா காந்தி கூட கொலை செய்யக் கூடிய அளவு ஒரு மனிதன் மனதில் ஏற்படக் கூடிய கசப்பையும், வெறுப்பையும் போக்கி ஒரு நல்ல பிரஜையாக்க வேண்டுமென்கிறார்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்று அலைகிற நாம், மனிதனுக்கு அடிப்படையான ஆன்மீக அறிவை வளர்க்க நம் அரசியல் தலைவர்கள் மறந்து விட்டார்கள். மறந்து விட்டார்கள் என்பதை விட மறுத்தும் விட்டார்கள் என்பதுதான் உண்மை. அரசியலில் ஆன்மீகம் என்பது ஒரு காந்திஜி, ஒரு ராஜாஜியுடன் போய் விட்டது. இந்த இருபெரும் தேசியத் தலைவர்கள்தான் அரசியலோடு ஆன்மீகமும் அவசியம் என்று வாழ்நாள் பூராவும் கூறியும், எழுதியும் வந்ததோடு வாழ்ந்தும் காட்டினார்கள்.

நல்லவர் புடைசூழ வரவேண்டிய அரசியல்வாதிக்குப் பின்னால் இன்று ரெளடிகள், தாதாக்கள் பாதுகாப்புக்கு வருகிறார்கள். காந்திஜியைச் சுற்றி சேவாதளத் தொண்டர்கள் தான் வருவார்கள். ராஜாஜியைச் சுற்றி சுதந்திர சிந்தனையாளர்களும், அறிஞர் பெருமக்களும்தான் வருவார்கள். காந்திஜியிடம் 'ஹேராம்' என்கிற தாரகமந்திரமும், ராஜாஜியிடம் வலிமை மிக்க பேனாவும் ஆயுதம்.

ஆன்மீக உணர்வுடன் வாழ்ந்த நமக்கு, முந்தைய தலைமுறை மக்களையும், அரசியல் பித்து பிடித்து அலையும் இன்றைய தலைமுறை மக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். இன்றைய சூழ்நிலைக்கு மரணதண்டனை சரியாகவே படும். வன்முறைக்கு வன்முறைதான் என்ற கலாச்சாரத்தை விதைக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரை மரணதண்டனையும் இருந்தேயாக வேண்டுமென்றுதான் விஷயம் தெரிந்தவர்கள் வாதிக்கிறார்கள்.

ஒரு நாவலுக்கு அழுத்தமான கதை (Fiction) தேவைப்படுகிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு இந்த அடிப்படை அதிகமாகவே இருந்தது. எல்லா கதை சொல்லிகளிடமும் இது இருந்திருக்கிறது. அவர்களும் இந்த 'சுவாரஸ்யம்' என்ற உத்திகளை வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். இதை சுவாரஸ்யமான கதை என்று ஒதுக்கி விட முடியாது. ஒரு 350, 400 பக்கங்களுக்கு மேல் நாவலைச் சொல்லி செல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் கதை, கொஞ்சம் சமூக ஈடுபாடு என்று இந்த சங்கிலித்தொடரை இணைப்பதுதான் கதாசிரியரின் கற்பனை சாமர்த்தியம்.

சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக ஒருவன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவனை ஆன்மீகவாதி ஒருவன் தடுத்து நிறுத்தி மனிதனாக்குகிறான். இன்றைய யதார்த்த வாழ்க்கை என்பதே தீவிரமான சம்பவங்களுடன் கலந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாவலில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அங்கங்கே கோடிட்டுக் காட்டி விட்டேன். முழுக்கதையை முன்னுரையிலே சொல்லி விடுவது அத்தனை சிலாக்கியமான காரியமல்ல. சொல்லி விடவும் கூடாது. படியுங்கள்... சுவையுங்கள்.

அன்புடன், மகரிஷி

About Maharishi :

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Rent Now
Write A Review

Same Author Books