Home / eBooks / Kaatrodu Sila Kanavugal
Kaatrodu Sila Kanavugal eBook Online

Kaatrodu Sila Kanavugal (காற்றோடு சில கனவுகள்)

About Kaatrodu Sila Kanavugal :

ஒரு காலகட்டத்தில் சிறுகதை எழுதுவது என் லட்சியமாக இருந்தது. நிறைய படிப்பேன்... சிறுகதைகளில் இடம்பெறும் வர்ணனைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஒரு சாதாரண விஷயத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்று வியந்து போவேன்... ஒவ்வொரு எழுத்தாளருக்குள்ளும் எத்தனை விதவிதமான எழுத்துக்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று ஆச்சர்யப்பட்டுப் போவேன். எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? என்ற வித்தை தெரியாமல் கொஞ்சகாலங்கள்... ஆசைகளுடன் மட்டுமே போராடிக் கொண்டிருந்தேன்... சிறுகதைகள் படிக்கப் பிடித்ததாலோ என்னமோ... என்னை சந்திக்க வரும் நபர்களின் வளவளா பேச்சுக்களையும் ஆவலுடன் கேட்பேன். என் பொறுமையான கேட்கும் குணம் அவர்களுக்கும் ரொம்ப பிடித்துப் போய்விட்டது... இப்படி கேட்டுக்கொண்டே இருக்கின்ற விஷயங்கள்... உள்ளுக்குள் கருவாய்... கதையாய்... எழுத்தாய் பரிமளிக்க ஆரம்பித்தன... என் காகித எழுத்துக்கள் பிரபல வாரப் பத்திரிகைகளின் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்ட போது... என் வாழ்க்கை மிகவும் பரபரப்பானது... என்னை மக்கள் தேடி வந்தார்கள். நிறைய விஷயப் பங்கீடுகள் சாத்தியமாயிற்று. வாழ்க்கைப் பிரச்சனைகள்கூட பரிமாறிக் கொள்ளப்பட்டது. சில தீர்வுகளை யோசிக்க ஆரம்பித்தேன். அவற்றை நடைமுறையில் சாத்தியப் படுத்துவது அவ்வளவு சுலபமாகவில்லை... ஆனால் காகிதத்தில் எளிமையாக இருந்தது. அதுவே மனபாரம் குறைத்தது... எனக்கு மட்டுமல்ல... என்னிடம் தங்கள் பிரச்சனைகளை சொன்னவர்கள்கூட... அவர்களையே கதாபாத்திரங்களாக்கி, புதுத் தீர்வு சொன்னபோது சந்தோஷமாகப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு சாதாரண எழுத்தாளியாகிய என் சிறுகதையின் பாத்திரங்களாக அவர்கள் இடம்பெற்றதையே சந்தோஷமாக அனுபவித்தார்கள்... இப்படித்தான்... என் சிறுகதைகள் சிலரின் மனங்களிலும்... சில தமிழ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று எனக்கு சந்தோஷத்தை தந்து கொண்டிருக்கிறது. இரண்டு குறுநாவல்களும் இரண்டு நாவல்களும் கூட பிரசுரத்தார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அழகாக வெளிவந்துவிட்டன. அடுத்து எப்போது நாவல் தரப்போகிறீர்கள் என்று தொலைபேசியில் கேட்டு என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் வெளியீட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கே சொல்வது... பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... எப்போதாவதுதான் எழுதுகிறேன்... எழுதுவதையே வியாபாரமாகச் செய்யவில்லை... எனக்குள் ஏதாவது விதை விழுந்தால் மட்டுமே முளைக்க ஆரம்பிக்கிறது...

பல வாரப் பத்திரிகைகளில் இடம்பெற்ற இச்சிறுகதைகள் உங்களுக்குப் பிடித்தால் எனக்கு சந்தோஷமே... வணக்கம்... வாசகர்களே...

எப்பொழுதும் உங்கள்
ஸ்நேகமுள்ள ஷ்யாமா

About Dr. Shyama Swaminathan :

சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.

Rent Now
Write A Review

Same Author Books