உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு, இரண்டும் புணர்ந்த உயிர்மெய் எழுத்தென்ப இருநூற்றுப் பதினாறு. ஆகத்தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தாறு. ஆயுத எழுத்தும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு. இன்று வழக்கொழிந்து வருகிற ஆயுத எழுத்து ஒரு அத்து மீறலா? அது குறிலா, நெடிலா, ஒற்றா, உயிரா, உயிர்மெய்யா என்பதில் எனக்கின்று தெளிவில்லை. ‘ங’ப்போல் வளைக்க ஆயுத எழுத்தான ‘ஃ’க்கு தன் சொந்தக் குடும்பத்தைச் சார்ந்த வேறு எழுத்துக்களும் கிடையாது.
அதனாலென்ன? கம்பன் சொற்களில், ஆயுத எழுத்து, ‘கூட்டு ஒருவனை வேண்டாக் கொற்றவன்.’ ஆயுத எழுத்து கலந்து வரும் சொற்கள் மிகக் குறைவு தமிழில். சொல்லிப் பாருங்கள் - அஃது, இஃது, எஃகு, பஃறுளியாறு...
ஆனால் ‘ஃ’ எனும் எழுத்தின் ஒலியை வேறொரு எழுத்து தரவும் இயலாது. அது தானே நில்லாது, மொழி முதலிலும் ஈற்றிலும் வாராது. என்றாலும் அதற்கு மாற்று இல்லை. ஆனால் ஆயுத எழுத்தை மொழியில் இருந்து எடுத்து விடலாம் என்றனர் சிலர். ‘ங’வின் சுற்றத்திலும் ‘ஞ’வின் சுற்றத்திலும் பல எழுத்துகளைக் குறைத்து விடலாம் என்றனர். நாம் தூக்கிச் சுமக்கிறோமா? அது பாட்டுக்கு சிவனே என்று ஒரு ஓரமாய்க் கிடந்துவிட்டுப் போகட்டும் என்றனர் பெருந்தன்மையாய்ச் சிலர்.
நான், எனது எழுத்தையும் ஒரு ஆயுத எழுத்தாகவே கருதினேன். அவ்வாறு கருதி, மன சமாதானம் இழந்தகாலை, எழுத்தை ஆயுதமாக மாற்றிக்கொள்ள எனது கட்டுரைகள் உதவின.
சமீபத்தில் அசோகமித்திரன், ‘த சன்டே இந்தியன்’ இதழில் எழுதிய கட்டுரையில், கட்டுரை எழுத நிர்ப்பந்தப்பட்டு, நாஞ்சில் நாடன் எனும் நாவலாசிரியனைத் தொலைத்தோம் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. புத்தாயிரத்தில் எனக்கோர் புதிய நாவல் கிடையாது. யோசித்துப் பார்க்க வருத்தமாகவும் இருக்கிறது.
இன்னொரு பள்ளி, ஏதுனக்கு இயல்பாக வருகிறதோ அதை முனைந்து செய் என்கிறது. அதையும் தள்ளிவிடுவதற்கு இல்லை. மேலும், ‘சும்மா கத கித எளுதிக்கிட்டு கெடப்பவன்’ எனும் இலக்கிய, திறனாய்வு மதிப்பீடுகளை எனது கட்டுரைகள் மாற்றி உள்ளன. எனது கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன என்பதும் அறிவேன். இஃதோர் லாப நட்டக் கணக்கல்ல. நாவல் எழுதும் முயற்சியையும் நான் இன்னும் கைவிட்டு விடவில்லை.
எந்த வடிவத்திலேனும் எனது பங்களிப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு இருப்பது முக்கியமானது என்று கருதுகிறேன்.
எனவே, ‘காவலன் காவான் எனின்’ எனும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. எல்லாம் கடந்த ஈராண்டுகளில் எழுதப்பட்ட புதிய கட்டுரைகள்.
எனது கருத்துகளோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. எனது வேலையும் அத்துடன் முடிந்ததாகக் கொள்ளலாம். சமூகத்துக்கான தேர்ந்த கருத்துகளை தீர்த்துச் சொல்கிறவர்களைத்தான் நாம் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் அழைக்கிறோம். ஆனால் அவர்களுடைய முதல் தகுதி, விருப்பு வெறுப்பு அற்றவராக இருக்க வேண்டும் என்பது.
எனவே வாசியுங்கள், யோசியுங்கள்.
- நாஞ்சில் நாடன்
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி பகுதி, வீரநாயணமங்கலம் சிற்றூரில் பிறப்பு. நெல், தென்னை, வாழை சூழ்ந்து, மேற்கில் பழையாறு, வடக்கில் தேரேகால் ஊர் எல்லை. இயற்பெயர் சுப்பிரமணியம். பெற்றோர் கணபதியாபிள்ளை, சரஸ்வதிஅம்மாள். பிறந்தநாள் 31.12.1947
பிழைப்பு தேடி பம்பாய் பயணம் செய்து, பம்பாய் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக் கூலியாகச் சில காலம். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தர், பண்டகக் காப்பாளர், தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து விற்பனைப் பிரிவின் மேலாளராக இந்தியா முழுக்கப் பயணம். 1939ல் கோவைக் கிளைக்கு மேலாளராக மாற்றம் பெற்று 2005 ல் ஓய்வு தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் பக்கமிருக்கும் நவ்சாரி என்னும் நகரைச் சார்ந்த தொழில்நிறுவனம் ஒன்றுக்கு தமிழ்நாட்டுப்பிரதிநிதியாகப் பணிபுரிகிறார்.
1977ல் வெளியான தலைகீழ் விகிதங்கள் எனும் முதல் நாவல் பரவலான கவனிப்புப் பெற்று பத்து பதிப்புகள் வந்து, 20,000 படிகள் விற்றுத்தீர்ந்துள்ளது.தங்கர்பச்சான் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, சொல்ல மறந்த கதை எனும் பெயரில் திரைப்படம் ஆயிற்று.
என்பிலதனை வெயில் காயும் (1979), மாமிசப் படைப்பு (1981), மிதவை (1986), சதுரங்கக் குதிரை (993), எட்டுத்திக்கும் மதயானை (1998) என்பன பிறநாவல்கள், பல பதிப்புக்கள் கண்டவை. இவற்றுள் எட்டுத்திக்கும் மதயானை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது, Against All Odds (2009) எனும் தலைப்பில்.
இவர் எழுதியது இன்றுவரை 127 சிறுகதைகள், தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(1981), வாக்குப் பொறுக்கிகள் (1985), உப்பு(1990), பேய்க்கொட்டு (1994), பிராந்து (2002), நாஞ்சில் நாடன் கதைகள் (2004), சூடிய பூ சூடற்க (2007), கான்சாகிப் (2010), முத்துக்கள் பத்து (2007), நாஞ்சில் நாடன் சிறுகதைகள் (2011), சாலப்பரிந்து (2012) கொங்குதேர் வாழ்க்கை (2013) இவரது சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு கவிதைத் தொகுப்புகள். மண்ணுள்ளிப் பாம்பு (2001), பச்சை நாயகி (2010).
கடந்த பத்துஆண்டுகளாக, கட்டுரை இலக்கியத்துக்கு இவர் பங்களிப்பு சிறப்பானது. திருப்புமுனை எனக் கருதப்படுபவை. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003), நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003), நதியின் பிழையன்றுநறும்புனல் இன்மை (2006), காவலன்காவான் எனின் (2008), திகம்பரம் (2010), பனுவல் போற்றுதும் (2001), கம்பனின் அம்பறாத்துணி (2013), சிற்றிலக்கியங்கள் (2013), எப்படிப் பாடுவேனோ (2014) என்பன கட்டுரைத் தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - காலம் நிகழ்த்திய மாற்றங்கள் எனும் முதல் நூல், இன வரைவியல் எழுத்துக்கு தமிழில் முன்னோடி. காய்தல் உவத்தல் அற்ற கள ஆய்வு தீதும் நன்றும் எனும் தலைப்பில் 2008-2009 காலகட்டத்தில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைத் தொடர் பெருத்த வாசக கவனிப்பைப் பெற்று, நூலாகி பல பதிப்புகள் கண்டது. தமிழ் பயிற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இவரது நாவல்கள் பாடமாக இருந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
Rent Now