பயணக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் அமைப்பையும் வகுத்துக் கொண்டவர் மணியன். அவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளை உடனிருந்து அமைக்க, நான் அவருக்கு உதவியாகச் சுமார் இருபது ஆண்டுகாலம் பணியாற்றி இருக்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் அவரிடம் “ஞான பூமிக்காக நீங்கள் ஏன் ஓர் ஆன்மிகப் பயணக் கட்டுரைத் தொடரை எழுதக் கூடாது?” என்று கேட்ட போது, “தாராளமாக எழுதலாம் - நீங்கள் என்னுடன் சேர்ந்து எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதானால்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதற்கு ஒப்புக்கொண்டதன் பலனாக உருவானதுதான் “பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள்” என்ற கட்டுரைத் தொடர். தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை, காவேரிக்கரை ஓரமாக அமைந்துள்ள ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றன.
அதைத் தொடர்ந்து அதேபோல் இன்னொரு புனிதப் பயணக்கட்டுரைத் தொடரை எழுதக் காத்துக் கொண்டிருந்தோம். உடுப்பிக்கு நாங்கள் போயிருந்த போது ஸ்ரீ பேஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேசதீர்த்தரைத் தரிசித்தோம். அப்போது சுவாமிகள் மணியனிடம் “ஒன்று கவனித்தீர்களா? நமது பாரததேசத்தில் கிழக்குப் புறம் பூராவும் ஸ்ரீராமருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாகத் திகழ்கின்றன. அதேபோல மேற்குப் புறம் பூராவும் ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாக அமைந்துள்ளன. கிழக்கே ராமர் - மேற்கே கிருஷ்ணர். இதை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதுங்களேன்!” என்றார். இந்தக் கருத்தை ஏற்றுத்தான், மணியனும் நானும் துவாரகையிலிருந்து கடலோரமாக, பூரி வரையில் அமைந்துள்ள புண்ணியத் தலங்களை - துவாரகா நாதரில் தொடங்கி ஜகன்னாதர் வரை- விவரித்து “கடலோரக் கோயில்கள்” என்ற கட்டுரைத் தொடரை “ஞானபூமி” யில் எழுதினோம்.
வாசகர்களிடம் அதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, புனித கங்கையின் ஓரமாக அமைந்துள்ள ஆலயங்களையும் ஆசிரமங்களையும் பற்றி ஒரு புனிதப் பயணத் தொடர் எழுத விரும்பினார் மணியன். ஆனால் அந்தக் கனவு நிறைவேறாமலே போய் விட்டது.
இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் கொண்டு, அதற்காகவே “ஞானபூமி” யை உருவாக்கி வளர்த்தவர் ஆசிரியர் மணியன். இந்த நூலை அவருடைய நினைவுக்குரிய அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன்.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now