Lakshmi Subramaniam
"கடவுள் எங்கே இருக்கிறார்?" இன்று பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனால் இதை அன்றே பிரகலாதனிடம் இரணியன் கேட்டதாகப் புராணம் கூறுகிறது. “அவர் எங்கும் இருக்கிறார்!" என்று பதில் சொன்னான் பிரகலாதன். அதுவே உண்மையும் ஆயிற்று.
“தினமும் நீங்கள் தேவியைத் தரிசிக்கிறீர்கள். என்னால் அன்னையை பார்க்க முடியுமா? பேசமுடியுமா?" என்று கேட்டார் விவேகானந்தர். பகவான் இராம கிருஷ்ணர் அதற்கு வழிகாட்டினார். அன்னை எந்நேரமும் தனக்குத் துணை இருப்பதை உணர்ந்தார் விவேகானந்தர்.
“கடவுளை நாம் தரிசிக்க வெளியில் தேடி அலைய வேண்டியதில்லை. அவரை நாம் தமக்குள்ளேயே பார்க்கலாம், நமது உடம்பே ஓர் ஆலயம், ஆண்டவன் அதில் கொலு இருக்கிறார்," என்று கூறுகிறார்கள் ஞானிகள்.
இது மகான்கள் வாழ்ந்த யோகபூமி; தியாகபூமி: வேத பூமி. அவர்கள் தமது உணர்வின் மூலமாகவும், மக்களுக்குச் செய்யும் தொண்டின் வழியாகவும், இறையருளால் கிடைத்த ஞானத்தின் மூலமாகவும் பக்தி உணர்வைப் பரப்பி இருக்கிறார்கள். அப்படி மனப்பக்குவம் பெற அவர்கள் தம்மை வெவ்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பரீட்சையில் தேர்ச்சி படைத்து மதிப்பைப் பெற நாம் சோதனைக்கு உட்பட்டாக வேண்டும். இறைவன் நம்மை அப்படித் தேர்ந்தெடுக்க நாமும் அவருடைய சோதனைகளை ஏற்றாக வேண்டும். அப்படிப் பல சோதனைகளைச் சந்தித்துப் பக்குவம் பெற்ற பக்தர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.
தெருக்கூத்துகளில் இதை நன்றாக எடுத்துக் காட்டுகிறார்கள். முதலில் மத்தளங்கள் அடித்துப் பேரிரைச்சல் கிளப்பி "கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று பலமாகக் கத்திச் சிலர் பாடுவார்கள். ஆனால் கிருஷ்ணவேஷம் தரித்தவன் தன் பாட்டுக்குத் திரைக்குப்பின் ஏதோ பேசிக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் கவனியாமல் இருப்பான். பிறகு இரைச்சல் எல்லாம் நின்று போய், நாரதர் வீணையை மீட்டி மெல்லிய குரலில் "கிருஷ்ணா! வா!" என்பார். உடனே கண்ணன் துள்ளி எழுந்து அரங்கமேடையில் வந்து நிற்பான்.
பகவான் இராமகிருஷ்ணர் இப்படி ஒரு கதையைக் கூறுகிறார். ஜடிலன் என்று ஒரு பையன் இருந்தான். அவன் தன்னந்தனியனாகக் காட்டு வழியே பள்ளிக்கூடத்துக்குப் போவது வழக்கம். தனியாக அவன் மட்டும் போக, பயமாகவே இருந்தது. அதனால் அவன் தன்னுடைய தாயைக் கூடவே வரும்படி அழைத்தான். "குழந்தாய்! எனக்கு வேலை இருக்கிறது. என்னால் உன்னுடன் வர முடியாது. உனக்குப் பயம் ஏற்படும்போது “கிருஷ்ணா! எனக்குத் துணையாக வா!” என்று சத்தம் போட்டுக் கூப்பிடு. அவர் உனக்குத் துணை வருவார்!" என்றாள் தாய்.
பையனுக்குக் கிருஷ்ணன் யார் என்பது தெரியவில்லை. ஆகவே அவன் "கிருஷ்ணன் என்பது யார் அம்மா?" என்று கேட்டான். தாய் அவனுக்கு "கிருஷ்ணன் உன் அண்ணன்," என்று பதில் சொன்னாள். அதன் பிறகு காட்டுவழியே செல்லும்போதெல்லாம் ஜடிலன் பயம் ஏற்படும் போது "கிருஷ்ணா! எனக்குத் துணையாக வா!" என்று கூப்பிடுவது வழக்கம். நிச்சயமாகக் கிருஷ்ணன் தனக்குத் துணையாக வருவார் என்ற திடமான நம்பிக்கை. அவனுக்கு இருந்தது.
குழந்தையின் நம்பிக்கை பொய்த்துப் போய்விடக் கூடாது என்பதற்காகக் கிருஷ்ண பகவான், அவன் அப்படிக் கூப்பிடும் போதெல்லாம், ஒரு சிறுவனின் வடிவில் வந்தார். அவர் ஜடிலனிடம் "தம்பி! இதோ நான் உன் அண்ணா கிருஷ்ணன் வந்திருக்கிறேன். நீ ஏன் பயப்படுகிறாய்?” என்னுடன் வா. நான் உன்னைப் பள்ளிக் கூடத்துக்குக் கொண்டுபோய் விடுகிறேன்!" என் சொல்லி, பள்ளிக்கூடம் வரையில் துணையாக வந்து, மறைந்து போனார்.
குழந்தை இதைத் தாயிடம் சொன்னபோது அவள் நம்பவில்லை. தான் சொன்னது பொய் என்பதை நினைக்க அவளுக்கே வெட்கமாக இருந்தது. குழந்தை சொல்வது மெய்தானா என்று சோதிக்கவும் எண்ணினாள். அதற்காகக் குழந்தையுடன் அவளும் போனாள். குழந்தை போனான்; கண்ணனை அழைத்தான். அவன் குழந்தைக்குத் துணை வந்தான். ஆனால் அது தாயின் கண்களுக்குத் தெரியவில்லை.
"உண்மையாகவே பகவத் தரிசனம் பெற முடியும். நாம் எப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதுபோலவே கடவுளைக் கண்டு நாம் பேச முடியும். ஆனால் அதற்கு ஜடிலனைப் போன்ற அசையாத நம்பிக்கை நமக்குத் தேவை!” என்று கூறுகிறார் ஸ்ரீ இராம கிருஷ்ணர்.
இந்தக் கதைகளில் வரும், இறைவனை தரிசித்த இந்தப் பெரியோர்கள், அவரது அருளுக்கு ஏங்கிக் குழந்தையைப் போல நம்பிப் பழகியவர்கள். அவர்களுடைய கதைகளைப் படிக்கும் நாமும், அதைப்போல அசைக்க முடியாத நம்பிக்கையைக் கடவுளிடம் வைக்க வேண்டும். நம்முடைய எண்ணத்திலும் செயலிலும் அந்த உறுதி இருந்தால் தான் குழந்தைகளுக்கு நாம் சொல்லுவதை ஏற்கும் நம்பிக்கை வரும்.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.