கோயில்களில் தெய்வங்களுக்குத் திருமண உத்ஸவங்கள் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறோம், பங்கேற்றிருக்கிறோம். நமக்கு பிறவி கொடுத்து, நம் வாழ்க்கையில் நற்சம்பவங்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த தெய்வத்தை நாம் நம்மில் ஒருவராகவே பாவித்து நமக்கு ஏற்படும் நல்லனவற்றை எல்லாம் அந்தக் கடவுளுக்கும் ஏற்படுத்தி மகிழ்ந்து, நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அப்படி நன்றி தெரிவிக்கும் முறைகளில் ஒன்றுதான் கோயில்களில் நாம் நடத்தி வைக்கும் தெய்வத் திருமணங்கள். மனித சம்பிரதாயம் போலவே எல்லா நடைமுறைகளையும் மேற்கொண்டு நடத்தப்படும் இந்த தெய்வத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தரும் அது தம் வீட்டுத் திருமணமாகவே அனுசரித்து சந்தோஷப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
புராணங்களில், மனித வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தெய்வீகக் காதலும் திருமணமும் நடைபெற்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அப்படி அந்த நிகழ்ச்சிகளை விவரிப்பதன் முக்கிய நோக்கமே, இறைவனிடம் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுவதுதான்; காதலாகிக் கசிந்து நம் பக்தியை இறைவனிடம் நாம் சமர்ப்பிக்கும் பண்பை விளக்குவதுதான். இறைவனிடம் நம்மையே அடையாளம் காணும் சந்தோஷம்தான், இறைவனுக்கு நாம் செய்யும் அர்ச்சனை, நைவேத்யம், கொண்டாட்டம், திருமண உத்ஸவம் எல்லாம்.
தெய்வங்களின் திருமணங்களையும் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே நாம் பார்க்கும் முயற்சிதான், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கடவுளர் கல்யாணங்கள் பற்றிய புத்தகம்.
- பிரபு சங்கர்
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now