கவிதை காலத்தின் கண்ணாடி என்பர். சிறந்த கவிதை வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணமாகத் திகழ்கிறது. வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. மனித இயல்புகளையும், மனிதர்களின் உணர்வுகளையும் எதிரொலிக்கிறது. தனிமனித வாழ்க்கையைச் சுட்டுவதோடு எவ்வாறு வாழவேண்டும், வாழக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. கவிதை காலத்தையும், சமூகத்தையும் வெளிப்படுத்துகிறது. மொழிக்கு வனப்பும் வளமும் சேர்க்கிறது.
இந்தநூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் என் கண்முன்னே நடந்து நிகழ்ச்சிகளின் பதிவுகள். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருந்தால் அந்தநாடு உயர்வும், வளமும் பெற்றுத் திகழும். வாழும் மக்களும் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள். ஆட்சியாளர்களே அரக்கர்களாக அமைந்துவிட்டால் நாடே சுடுகாடாக மாறிவிடும். மக்களும் நற்பண்புகளை எல்லாம் துறந்துவிட்டுத் தன்னலம் உள்ளவர்களாக, ஏமாற்றுக்காரர்களாக மாறிவிடுவார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் போக்குகளே கவிதைகளாக இந்தநூலில் இடம்பெற்றுள்ளன. அதிகாரத்திலும் ஆணவப்போக்கிலும் மேலோங்கிய ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியதால் நிகழ்ந்த அவலங்கள் கவிதைகளின் கருப்பொருளாயின. நிகழ்ந்த அவலங்களையெல்லாம் அகற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எவ்வாறு பாடுபட்டார், எத்தகைய நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் என்பதை விளக்குவதே இந்தக் கவிதை நூலின் நோக்கமாகும்.
புறப்பாடல்கள், அக்கால அரசர்களின் ஆட்சித்திறன், கொடைத்தன்மையை எக்காலத்திற்கும் எடுத்துக்கூறும் சாட்சிகளாக நிற்பதைப் போல ஐந்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி மேன்மையை இந்நூலின் கவிதைகள் வருங்கால சந்ததியர்க்கு எடுத்தியம்பும்.
வருங்காலத்தில் தமிழக வரலாற்றை எழுதுபவர்களுக்கு அகச்சான்றுகளாக இந்நூலின் கவிதைகள் முன்நிற்கும். விடுதலை பெற்ற இந்தியாவில் 1950 முதல் 2005 வரையிலான தமிழகத்து அரசியலை நிகழ்வுகளை, ஆட்சிமாற்றங்களை, ஆட்சி செய்ததலைவர்களை, ஆட்சியாளர்கள் செயல்படுத்திய நலத்திட்டங்களை இந்நூலிலுள்ள கவிதைகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தமது ஓயா பணிகளுக்கிடையிலேயும், எனக்காக நேரத்தை ஒதுக்கி இந்நூலிலுள்ள கவிதைகளையெல்லாம் முழுமையாகப் படித்து அணிந்துரை நல்கிய கவிவேந்தர் கா.வேழவேந்தனார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் பெரும்பான்மையான கவிதைகள் முரசொலி நாளேட்டில் வெளிவந்தவை. என் கவிதைகளை வெளியிட்ட முரசொலி நாளேட்டிற்கும், ஆசிரியர் உயர் திரு. எஸ். செல்வம் அவர்களுக்கும், துணையாசிரியர் திரு. சக்திவேல் அவர்களுக்கும் என் அகம்மகிழ் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புள்ள, கருமலைத்தமிழாழன்
கருமலைத்தமிழாழன் கிருட்டிணகிரியில் உள்ள கருமலை என்ற ஊரில் 16.07.1951ல் பிறந்தவர். இவர் புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மீதும் தனது ஊர்ப்பற்றின் மீதும் கொண்ட மிகுந்த காதலால் தனது இயற்பெயரான கி.நரேந்திரன் என்பதனை மறந்து இன்று கருமலைத்தமிழாழன் என்று அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் தமது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார்.
கருமலைத்தமிழாழன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியும் தமிழாசிரியர் பணியும் செய்துள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக சீரும் சிறப்போடும் பணியாற்றியுள்ளார்.
குயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், புன்னகை, காவியப்பாவை, தினத்தந்தி, தமிழ் இலெமுரியா, தினகரன், தினமணி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை 22 கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன.
பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலமாக 1.பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் 2.ஒட்டக்கூத்தர் 3.கவிதைச் செல்வர் 4.தமிழ்மாமணி 5.பாவேந்தர் நெறி செம்மல் 6.தமிழ் இலக்கியமாமணி 7.இலக்கியச்செம்மல் 8.இலக்குவனார் விருது 9.ஈரோடு தமிழன்பனார் விருது 10. வெண்பா வேந்தர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
Rent Now