Home / eBooks / Kamadenuvin Mutham
Kamadenuvin Mutham eBook Online

Kamadenuvin Mutham (காமதேணுவின் முத்தம்)

About Kamadenuvin Mutham :

நண்பர்களே...

வணக்கம்!

‘காலச்சக்கரம்’ நரசிம்மாவாகிய எனது அடுத்த படைப்பு, ‘காமதேனுவின் முத்தம்’ இதோ உங்கள் கையில்! எனது புதினங்களை நீங்கள் முன்பே படித்திருந்தாலும், இந்தப் புதிய நாவல் சற்றே வித்தியாசமானது. வழக்கமாக, சரித்திரம்+மர்மம், ஆன்மீகம்+மர்மம், அரசியல்+மர்மம், குடும்பம்+மர்மம் என்று புதினங்களைப் புனைந்து வரும் நான், பெண்களால் நடத்தப்படும் இந்த கதைக்கு, பெண்களை மிகவும் ஈர்க்கும், காதலை, காதல்+மர்மம் என்கிற எனது வழக்கமான பார்முலாவுடன் கையாண்டிருக்கிறேன்.

ஆங்கில இலக்கியத்தின் பின்பாக ஓடிக் கொண்டிருந்த என்னை, என் தாய் நாவலாசிரியர் கமலா சடகோபன்தான் தமிழ் இலக்கியத்தின் பால் திருப்பினார். ஆங்கில மாதவியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த நான், தமிழ் கண்ணகியை நாடி வந்தேன். ஆங்கில நீரையும், தமிழ்ப் பாலையும் பிரித்துப் பருகும் அன்ன பறவையாக இருந்தவன், தமிழுக்கு மட்டும்

தொண்டாற்றும் காலத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

என் தந்தை சித்ராலயா கோபு பல வெற்றி திரைப்படங்களை எழுதியவர். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா, துவங்கி பாட்டி சொல்லைத் தட்டாதே வரை பல நகைச்சுவை விருந்துகளை அளித்தவர். எனக்கும் ஒரு கட்டத்தில் திரைப்பட மோகம் வந்தது. ஆனால், என் அம்மாவின் அனுமதி கிடைக்கவில்லை. எனவே சின்னத் திரையில், கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, வித்யா போன்ற தொடர்களை எழுதினேன். ஆயினும், திருப்தி கிட்டவில்லை. சோர்ந்து போய் இருந்த என்னை, என் அம்மாதான் ஊக்குவித்து, காலச்சக்கரம் என்கிற அரசியல் மர்ம நாவலை எழுத தூண்டினார். இதுவே எனது முதல் நாவல்! தொடர்ந்து ரங்கராட்டினம் என்கிற ஆன்மீக மர்மம், சங்கதாரா, பஞ்சநாராயணக் கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல் மற்றும் அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். காமதேனுவின் முத்தம் எனது எட்டாவது நாவல்.

புராண கால மிருகங்களான யாளி, காமதேனு, புருஷா மிருகம், அம்சபட்சி போன்றவை என்னைப் பெரிதும் கவர்ந்தவை. குறிப்பாக, நவராத்திரி கொலுவில், அழகிய பெண் முகத்துடனும், பசுமாட்டின் உடலுடனும், மயிற்தோகையுடனும் காணப்படும் காமதேனு பொம்மையைக் காணும் போதெல்லாம் என்னுள் ஒருவித பரவசம் பரவும். பெண்மையின் கம்பீரத்தை முகத்திலும், கோமாதாவின் தாராளத்தை உடலிலும், மயிலின் அழகைத் தோகையிலும் கொண்டுள்ள காமதேனுவை போன்றே ஒவ்வொரு பெண்ணும், தனது சுற்றத்தை வாழ வைக்கிறாள் என்பதுதான் புராணங்களின் செய்தி. காமதேனுவை பற்றிப் பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.

நான் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரியும், ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் சின்னத்திலும் காமதேனு காணப்படுவதால், ஒருவேளை எனக்கு அதன் மீது ஒருவித பற்று ஏற்பட்டதோ என்னவோ! இந்த நாவலின் முக்கியப் பாத்திரமே காமதேனுதான்.

நம்மைச் சுற்றி பரவியுள்ள தெய்வீகம், அவ்வப்போது நமக்குச் சூசகமாகத் தகவல்களைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான், அதனைப் புரிந்து கொள்ளத் தவறி வருகிறோம். இந்த நாவலில், தெய்வீகம் சற்று வெளிப்படையாகவே தனது சூசக தகவல்களைத் தெரிவித்து வர, அதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது ஒரு குடும்பம். ஒரு கட்டத்தில், அவர்கள் அந்தப் பலன்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பேராசையில் தவறு செய்கின்றனர். காமேஷ் என்கிற வாலிபனுக்கு, தேனுகா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் தோன்றிவிட, அவர்களது முதல் முத்தம் பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது. தெய்வீகம் அவர்களது காதலுக்கு எதிராக இருக்கிறது. மனித சக்தி, தெய்வீக சக்தி ஆகியவற்றைக் கடந்து அவர்களது காதல் நிறைவேறியதா? தொடர்ந்து படியுங்கள். ஆயிரம் நாவல்களை எழுதி நூலகத் தட்டுகளில் தூசி படிந்து கிடைப்பதைவிட, நான்கு நாவல்களை எழுதினாலும், அவை அடுத்த தலைமுறையினரின் கரங்களில் தவழ வேண்டும் என்று விரும்புகிறேன். செய்தித்தாள் பணியில் இருப்பதால் வருடத்திற்கு ஒன்றிரண்டு நாவல்களுடன் நிறுத்திவிடுகிறேன். ஓய்வுக்குப் பிறகே நிறைய எழுத திட்டமிட்டுள்ளேன். எனக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் வாசகர்களுக்கும் நன்றி.

- ‘காலச்சக்கரம்’ நரசிம்மா.

About Kalachakram Narasimha :

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

Rent Now
Write A Review

Same Author Books