Home / eBooks / Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam
Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam eBook Online

Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam (கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்)

About Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam :

சென்னை கம்பன் கழகம் 1975–இல் நிறுவப் பெற்றது. திரு. ஏவி. மெய்யப்பன் அவர்கள் 12.08.1979 அன்று இயற்கை அடைந்தமை வரையில், கழகத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார்கள்.

சினிமாத்துறையில் பெரும் பெயர் பெற்றிருந்த அவர்கள், கம்பன் கழகத்தோடு தொடர்பு கொண்டதிலிருந்து கழகத்தின் வளர்ச்சியிலும், கம்பனுடைய கவி நயத்தைப் பருகுவதிலும், முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாம் தலைவராக இருந்த ஏவி.எம். அறக்கட்டளையினுடைய ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கம்பன் விழா நிரந்தரமாக நடைபெறுவதற்கு வழி வகுத்ததோடு, கழகத்திற்கு அவ்வப்போது தேவையான உதவிகள் அனைத்தையும் நிறைந்த உள்ளத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் செய்து வந்தார்கள். அன்னாருடைய மறைவுக்குப்பின், அமரர் ஏவி.எம். அவர்களின் குடும்பத்தினர், அதே ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டி வருகிறார்கள். அமரர் ஏவி.எம். அவர்களுடைய நினைவில், ஆண்டுதோறும் கம்பனைப்பற்றிச் சென்னைக் கம்பன் கழகத்தின் ஆதரவில், ஒரு நினைவுச் சொற்பொழிவு நடக்க வேண்டுமென்று விரும்பி அதற்காக ஆவன செய்வதற்கு முன் வந்தார்கள். அந்தத் திட்டத்தின்படி அமரர் ஏவி.எம். அவர்களின் இவ்வாண்டின் (பதினோராம் ஆண்டைய) நினைவுச் சொற்பொழிவு 1994–ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 28–ஆம் நாள் ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. சொற்பொழிவைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் “கம்பன் கண்ட ஆட்சியில்-அரசியல், சமூகம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள். இந்தியன் வங்கித் தலைவர் திரு. எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள். இந்த நினைவுச் சொற்பொழிவின் நூல் வடிவமே இது. இந்தச் சொற்பொழிவினை ஏற்பாடு செய்து, அதனைக் கம்பன் கழகத்தின் மூலம் நிறைவேற்றிய ஏவி.எம். குடும்பத்தார்க்கு எங்கள் மனம் கனிந்த நன்றி.

கம்பன் கழகத்தார்

About Kundrakudi Adigalar :

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.

பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தார். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள். அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972 இல் சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".

பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.

Rent Now
Write A Review

Same Author Books