இருபத்தேழு வயதில் இலக்கிய உலகின் இமயத்தை எட்டிப்பிடிக்க முயல்கின்ற 'சாதனை இளஞ்சுடரை’ வியந்து வாழ்த்துகிறேன். கவிஞர், ஆய்வாளர், சிறுகதை எழுத்தாளர், இலக்கியச்சாரல் இதழின் ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட பண்பாளர் உமையவரை உளமாரப் பாராட்டுகிறேன். 'இளைஞர்கள் இலக்கியத் துறையை எட்டிப்பார்க்க மறுக்கிறார்களே!’ என்று ஏங்கும் என்னைப் போன்ற முதியோர்கள் மனம் மகிழ விடிவெள்ளியாக உமையவன் தோன்றி இருக்கிறார். இளைஞர் ஒருவர், அவரைப் போன்ற இளைஞர்களுக்கு எதைச் சொன்னாலும் உடனே ஏற்பார்கள். நல்லனவற்றை அவர்களுக்கு சொல்வதற்கு நற்றொண்டு ஆற்றும் உமையவன் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெரும்பேறு.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளும் அறிவோடு பிறக்கின்ற பிள்ளையே பெருஞ் செல்வம் என்கிறார் வள்ளுவர். அவர் வாக்கிற்கேற்ப, இராமசாமியைப் பெற்றெடுத்த பழனிச்சாமியும் சரஸ்வதியும் முன்னோர்களின் நல்வினைப் பயனைப் பெற்றவர்களே! இல்லையெனில் உமையவன் இந்த வயதில் இவ்வாறு உயர்ந்திருக்க முடியாது.
கவிதை நூல்கள் நான்கு, சிறுவர்களுக்கான சிறுகதை நூல்கள் நான்கு. திருத்தல வரலாற்று ஆய்வு நூல்கள் மூன்று என்று எழுதிக் குவித்துள்ள இந்த 'இளம் எழுத்தாளர்' வேளாளர்களின் வேதனையைத் தீர்க்கும் வேலனாக 'ஏர்க்கலப்பை' சமூக அமைப்பின் தலைவராகத் திகழ்கிறார். 'விவசாயப் பாவலர்', 'உழவுக்கவிஞர்' என்ற விருதுகளைப் பெற்றிருக்கும் 'கவிக்கதிர்' உமையவன் கம்பரின் 'ஏர் எழுபது’ நூலுக்கு உரை கண்டதில் வியப்பில்லை.
பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவது அவ்வளவு எளிதான செயல் அன்று. இந்த இளம் வயதில் ஒரு பழைய இலக்கியத்திற்கு உமையவன் உரை எழுதியிருப்பது, அவருடைய பன்னூல் பயிற்சியை வெளிப்படுத்துகிறது. கம்பர், ஏர் எழுபது என்ற நூலை எழுதியிருக்கிறார் என்பதைப் பலரும் அறிந்திருந்தாலும், அந்நூலின் செய்திகளைப் பலர் அறிய எடுத்துச் சொன்னவர்கள் மிகமிகக் குறைவு.
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்வினில் பஞ்சமே இல்லே – நாம் சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே – இந்தத் தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே
என்ற கவிஞர் மருதகாசி அவர்கள் உழவின் சிறப்பை மிக அழகாகக் கூறுவார். கம்பர்,
உழுங்குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே அழுங்குழவிக்கு அன்புடைய தாயே போல் அனைத்துயிர்க்கும் எழுங்குருணைப் பெருக்காராளர்
என்று ஏர் எழுபது நூலில் மிகச்சிறப்பாக வேளாளரைப் புகழ்கின்றார். வள்ளுவர் 'உழவு' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களில் கூறியுள்ள செய்திகளை எழுபது பாடல்களில் கம்பர் விரிவாகக் கூறுகிறார்.
இவற்றையெல்லாம் மிக நன்றாக உணர்ந்த உமையவன் அவர்கள் இந்த நூலுக்கு எழுதியுள்ள உரை மிக மிக அழகு. ஓரளவு தமிழறிவு உள்ளவரும் உழவுத் தொழிலை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் எழுதியுள்ளது சிறப்பு.
நல்லநாள் பார்த்து உழவுத் தொழிலைத் தொடங்குவது முதல், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துக் குறியிடுவது வரை அனைத்து வேலைகளையும் முறையாகக் கூறியுள்ள ஏர் எழுபது நூலின் கருத்துக்கள் மாறுபடாமல் உமையவன் உரை எழுதியுள்ளார். பல உழவுக் கருவிகளுக்கும், படைசால், சேறு செய்தல், பரம்படித்தல், முடி விளம்புதல் போன்ற உழவுத் தொழிலின் பெயர்களுக்கும் உரையாசிரியர் விளக்கம் தந்திருப்பது சிறப்பு.
'ஓதுவார் தொழுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையிலே உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே'
என்று பட்டுக்கோட்டையாரின் வரிகளை இந்த நாட்டு மக்களும், ஆள்வோரும் நன்கு உணர்ந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் மறைந்து கிடந்த ஏர் எழுபது நூலுக்கு உரை எழுதி அந்நூலை உலகோர் அறியுமாறு செய்துள்ள உமையவன் அவர்கள் வாழ்க! வாழ்க! தமிழும் தமிழர்களும் உயர்ந்தோங்க உழைத்து உயர்க! உயர்க!
தமிழறிஞர்
சிலப்பொலி சு. செல்லப்பன்.
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Rent Now