இது என் பார்வை. என் கனவு. என் கனவில் விரிந்த உலகம்.
பள்ளிக்கூட நாட்களில் சினிமா நாயகர்களுக்கு பதிலாக எழுத்தாளர்களை ஆதர்சமாய்க் கொண்டிருந்தேன்.
எழுபதுகளின் இறுதியில் என் சிறுகதைகள் பிரசுரமாகத் துவங்கின. பிறகு குறுநாவல்கள். நாவல்கள்.
நாவல்கள் எழுத்தாளனைப் பிரபலப்படுத்தலாம். சிறுகதைகளின் வீச்சும் வெளிப்பாடும்தான் அவனைச் சரியாக அடையாளம் காட்டும்.
இது என் முதல் சிறுகதைத் தொகுதி.
இந்தக் கனவளவு உலகம் நிஜ உலகத்தின் நீட்சிதான். காலத்தை ஜெயித்து ஞாபக நரம்புகளில் கனவென உறைந்துபோன செல்லுலாய்ட் சிற்பங்கள்.
- எஸ். குமார்
நான் எஸ்.குமார்.
31/12/76 தினமணிகதிரில் துவங்கி 245 சிறுகதைகள், 10 குறு நாவல்கள், 37 நாவல்கள் பல்வேறு இதழ்களில் வெளி வந்துள்ளன.பன்னிரண்டு அச்சுப் புத்தகங்கள் அரசு மற்றும் வாடகை நூல் நிலையங்களில் உள்ளன. இப்பொழுது மின் நூல் வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்.
இலக்கிய வீதி, இலக்கியச் சிந்தனை, தங்கச்சாவி, ஐந்து நிமிடக் கதைப் போட்டி பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். கல்கி, விகடன், ஜனரஞ்சனி போட்டிகளில் போட்டிக் கதைகள் வெளிவந்துள்ளன.
துவக்க நாட்களில் ஓவியம், கவிதையிலும் நாட்டம் இருந்தது. தீபம், கணையாழி, அன்னம் விடு தூது, அலிபாபா, குங்குமம், அமுதசுரபியில் கவிதைகள் அச்சேறியிருக்கின்றன.
திருக்கோயிலூர் தபோவனம் சத்குரு ஞானானந்த ஸ்வாமிகளைப் பற்றிய ஆவணப் பட உருவாக்கத்தில் நண்பர்களோடு இணைந்துப் பணியாற்றியிருக்கிறேன்.
திறனாய்வுக்காக தேவன் அறக்கட்டளை பரிசு பெற்றிருக்கிறேன். படைப்பாற்றலுக்காக இலக்கியவீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறேன்.
தொடர்ந்து சந்திப்போம்.
Rent Now