Home / eBooks / Kanavugal Viriyum
Kanavugal Viriyum eBook Online

Kanavugal Viriyum (கனவுகள் விரியும்)

About Kanavugal Viriyum :

"கவிதை என்பது மொழிக்குள் உலகையும்,
உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக
நுழைத்து விடுவதற்காக முயலும்
தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு"
- கவிஞர் இந்திரன்
(கவிதையின் அரசியல்)

இலக்கியத்தின் பிற வடிவங்களைப் போலவே கவிதையும் ஒரு விசாலமான பார்வை கொண்டது. மரபோ புதுக்கவிதையோ கவிதைகள், பயணிக்கும் தொலைவை வெகு இயல்பாய் நம்மால் கணித்துவிட முடிகிறது. அல்லாமலும் அதன் பரப்பு நிலையை உணர முடிகிறது.

கவிதைகளுக்குள் சிக்கிக் கிடக்கிற வார்த்தைகளில் உலகமே ஒன்றாகி நம்முன் வந்து நிற்பதை நாம் காண்கிறோம். நூறு புத்தகங்கள் படிப்பதாலோ, நூறு கவிதைகள் கேட்பதாலோ உருவாகி விடுவதில்லை கவிதைகள்.

கவிதை என்பது ஒருவித மனநிலை. கவிதை என்பது உயிர்ப்பு. சொற்களால் உருவாகும் கவிதைகள் சமூகத்தில் கருவாகி நிற்பதும், சமயத்தில் எவர்க்கும் பயன்பெறாமல் கருகிப் போவதும் இயல்பான ஓர் நிகழ்வு.

மகாகவி பாரதி தொடங்கி எத்தனையோ கவிஞர்கள் தமிழின் அடையாளத்தை திடமான சிந்தனைகளோடு கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூடுதலாய்ப் பிறமொழிக் கவிதைகளும் தமிழில் சிறந்த பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

கவிதைகளில் உள்ளார்ந்த விசயங்கள் சமூகம் சார்ந்தவைகளாகவோ அகம் சார்ந்த பிரச்சினைகளில் மூழ்கியோ வாசகர்களை நெருங்கிப் பார்க்கிறது. 'வாசகர்களே பல கவிதைகளை எழுதுகிறார்கள்' எனக் கவிஞர்கள் சொல்வது இங்கு நினைவு கூறத்தக்கது.

அகமும் புறமும் சார்ந்த பிரச்சினைகளில் கவிதைகள் உருவாகும் போது சமூக மதிப்பீட்டில் அவற்றின் பயன்பாடு எத்தகையனவாக உள்ளது என்பதே இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். அன்றியும் கவிதைகளை நுகரும் வாசகனும் அவனது எதிர்பார்ப்பும் கவிஞனிடமிருந்து எத்தகைய விசயங்களை கைக்கொள்கிறான், எவற்றை வீசி எறிகிறான் என்பதும் முக்கியம்.

அடிப்படையில் நான் ஒரு கவிஞனா என்றால் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது;

கலைஞன்.

கலையின் பிரமாண்டமான உலகத்தில் ஒரு சின்ன உளியோடு கரடுமுரடான கற்களிலிருந்து கலைகளாக வடிக்கத் துவங்கியிருக்கிற ஒரு எளிய சிற்பி. எனது கலை வெளிப்பாட்டில் எல்லா இடங்களும் வந்து போய்க்கொண்டிருந்தாலும் யதார்த்தம் - சமூக யதார்த்தம் என்பதில் தெளிவுபட இயங்கி வருகிறேன். பின்தங்கிய சமூக அமைப்பில் தலித் மக்களையும் அவர்தம் பிரச்சினைகளைப் போல் பிற ஒடுக்குமுறைகளையும் அவற்றிற்கான சமூக காரணிகளையும் பதிவு செய்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்பதில்லாமல், இதைத்தான் எனது கதைகளைப் போல் கவிதைகளிலும் எழுதவேண்டும் என முடிவு செய்ததின் வெளிப்பாடுதான் இந்தக் கவிதைகள்.

இவற்றில் உன்னதக் கலை, அழகு, நேர்த்தி, ஒழுங்கு... என்பதெல்லாம் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி போலவும் சிலுவையை முதுகில் சுமந்து கொண்டிருப்பது போலவும் அல்லாமல், வட்டாரத்தன்மையோடு, எனக்குத் தெரிந்த எனது மக்கள் மொழியில் இயல்பாய் பதிவு செய்திருக்கிறேன். கவிதைகளில் எனக்கான தொடக்கம் என்பது இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. விழுப்புரத்தில் 'நெம்புகோல்' என்னும் மக்கள் கலை, இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தில் கவிஞர் பழமலயின் முன்னிலையில் நண்பர்கள் பலர் ஒன்று கூடி கவிதைகள் படிப்பதும் விவாதிப்பதும் நடக்கும்.

என்னுடைய கவிதைகள் அறைக்குள்ளும் வீதிமுனைகளிலும் கவியரங்கங்களிலும் எல்லோருடனும் வாசிக்கப்பட்டது. முதல் கவிதை மனஓசையில் அச்சில் வந்தது. சில விமர்சனங்களால் காணாமல் போனது. பல எனது வீடு எரிந்தபோது எரிந்து சாம்பலானது.

வீடு எரிந்தாலும் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது எனக்குள் கவிதை. அதன் தொடர்ச்சியாய் முற்போக்கு அரசியலும் இலக்கியப் புத்தகங்களும் தொடர்ச்சியான ஒரு வர்க்கப் பார்வையைத் தந்து எழுதியவற்றுள் ஒரு அய்ந்தாறு ஆண்டுகளுக்குள்ளான கவிதைகளில் சில மட்டும் 'கனவுகள் விரியும்' என்னும் இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இத்தொகுப்பிற்கு முன்னுரை அளித்த, எங்கள் 'நெம்புகோல்' கவிஞர் பேராசிரியர் த.பழமலய் அவர்கட்கும் எனது கவிதைகளோடு உறவாடியும் அவ்வப்போது வந்தும் போய்க் கொண்டிருக்கிற நண்பர்கள், தோழர்களுக்கும், சிநேகமாய் இருந்து கவிதைகள் பற்றி அவ்வப்போது கருத்துக்கள் சொன்ன மனைவி விசய லட்சுமிக்கும், மற்றும் உங்களுக்கும் நன்றிகள் பல சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

- விழி. பா. இதயவேந்தன்

About Vizhi Pa. Idhayaventhan :

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:

விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.

அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

- பேராசிரியர் பழ மலாய்

Rent Now
Write A Review

Same Author Books