Home / eBooks / Kanna Mango Thinna Asaiya
Kanna Mango Thinna Asaiya eBook Online

Kanna Mango Thinna Asaiya (கண்ணா மேங்கோ தின்ன ஆசையா)

About Kanna Mango Thinna Asaiya :

‘மாம்பழம் வேணுங்கிறவங்க எல்லாம் கை தூக்கலாம்’ என்று குரல் கொடுத்தால், பலர் இரண்டு கைகளையும் உயரத்தூக்கி மகிழ்வார்கள். ‘தோள்பட்டையில் சுளுக்கு. அதான் தூக்க முடியவில்லை’ என்று சிலர் தன்நிலை விளக்கம் அளித்து, மாம்பழத்தின் மீதான ஈர்ப்பை பதிவு செய்தாலும் செய்வார்கள்.

பங்கனபள்ளி, மல்கோவா, அல்ஃபோன்ஸா, கிளி மூக்கு, நீலம் என்று பல சுவையான மாம்பழங்கள் இருப்பதுபோல, வகை வகையான நகைச்சுவைகளும் உண்டு. மாம்பழம் பிடிக்காத சில அபூர்வ பிறவிகளைப்போல, நகைச்சுவை பிடிக்காத சிலர், ‘மகிழ்வித்து மகிழ்’ என்கிற தாரக மந்திரத்தை உள்வாங்காமல், ‘அழுது அழவிடு’ என்று சீரியல்களை நாடுவதைப் பார்த்து, அழுவதா சிரிப்புதா...?

மாம்பழத்தின் உள்ளே கட்டாயம் ஒரு கொட்டை இருக்கும். இருந்தாகணும், நகைச்சுவை எழுதுவது மெத்தக் கடினம் என்பதன் குறியீடுதான் அது. நகைச்சுவை என்னும் பெரிய பலாப்பழத்தைத் தின்று கொட்டை போட்ட பேராசிரியர் கல்கி கூட, நகைச்சுவை எழுதுவது, ‘கொட்டைப் பாக்கைப் பிளந்து, பாதாங்கீர் எடுப்பதற்குச் சமமய்யா’ என்று அனுபவித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஒரு குழந்தையின் விலாவில் கிச்சு கிச்சு செய்தால் சிரிக்கும், பெரியவர்களான அவ்வாறு செய்ய முடியுமா? விளாசுவதற்கு, சுருட்டிய குடையை எடுத்துக் கொள்வார்கள். வார்த்தைகளால் தான் செய்ய வேண்டும். சிரிக்க வைக்க வேண்டும் என்கிற இதயபூர்வமான அந்த ஆசையுடன், அதற்குத் தேவையான வார்த்தைகளின் கோர்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடின உழைப்பும், நகைச்சுவை எழுத்தாளர்களுக்குள் இயற்கையாக இருக்க வேண்டிய கொழுப்பும், இதயம் சார்ந்த நாளங்களை அடைத்துவிடுகின்றது என்றாலும், அதை பைபாஸ் செய்து விட்டு, கடமையைச் செய்வதில் ஒரு பரமசுகம்.

‘கண்ணா! மாம்பழம் தின்ன ஆசையா?’ என்கிற இந்தக் கூடையில் உள்ள மூனு டஜன் மாம்பழங்களும், பிரபலவட்டார ஏடுகளாக சக்கைபோடு போட்டுவரும் இதழ்களில், வாரத்திற்கு ஒன்றாக வெளிவந்த ‘தமாஷா வரிகள்’ கட்டுரைகளின் குவியல் வண்டு புகாதவை. அப்படியே சாப்பிடலாம்.

இப்பழங்களின் விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கண்களில் ஒற்றிக்கொள்ளும் வகையில் ஓவியங்களைத் தீட்டிய நடனம், அம்சமாக அச்சிட்டு வெளியிட்ட அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் கூடை கூடையாக நன்றிகள்.

வாரம்தோறும் வாசித்து என்னைப் பாராட்டிய பல வாசகர்கள். இந்தத் தொகுப்பை வாங்கிப் படித்து மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விப்பார்கள் என்கிற பழமான நம்பிக்கையுடன்,

- ஜே.எஸ். ராகவன்

About J.S. Raghavan :

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

Rent Now
Write A Review

Same Author Books