பத்திரிக்கை ரிப்போர்ட்டரான அனிதா, ஜெயில் கைதிகளில் பெண் கைதிகளைச் சந்தித்து அவர்களிடம் ஒரு நேர் காணல் நிகழ்த்தி அதை தன் பத்திரிக்கையில் வெளியிட வேண்டி ஜெயிலுக்குள் வருகிறாள்.
ஜோதிமணி என்னும் கொலைக் குற்றவாளியை சந்தித்துப் பேசும் போது, ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளியே வருகிறது. “நான் கொலையே செய்யலைங்க...கொலை செய்தது...என் புருஷன்...” என்கிறாள்.
கோர்ட்டில் தான்தான் கொலை செய்ததாய், அவள் ஒப்புக் கொண்டதைக் குறிப்பிட்டுக் கேட்டாள் அனிதா. “நான் உள்ளார வந்திட்டா... எந்தப் பிரச்சினையுமில்லைங்க...என் புருஷன் வந்தா... ரெண்டு பெண் குழந்தைகளையும் வெச்சிட்டு...நான் தனியா பொழைக்க முடியாது பாருங்க?... அதான் ரெண்டு குழந்தைகளையும் அவர் கைல ஒப்படைச்சிட்டு...நான் இங்க வந்திட்டேன்” என்றவள் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறாள்,
“வெளிய இருக்கற என் புருஷன் என் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்?னு தெரியலை...அதைப் போய்ப் பார்த்திட்டு, எனக்கு வந்து தகவல் சொல்ல முடியுங்களா?” அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவள் சொன்ன ஊருக்குச் சென்று அவள் கணவனைப் பார்த்த அனிதா அதிர்ச்சியடைகிறாள்.
அவளை அதிர வைத்தது என்ன? ஜோதி மணியின் கணவர் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கின்றாரா...? போன்ற கேள்விகளுக்கான விடையை நாவலின் அழகான எழுதியுள்ளார் கதாசிரியர். விறுவிறுப்பாகச் செல்லும் இந்த நாவல் நிச்சயம் வாசகர்களைக் கவரும்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now