Karna Parambarai

Kalachakram Narasimha

0

0
eBook
Downloads530 Downloads
TamilTamil
NovelNovel
ThrillerThriller
Page508 pages

About Karna Parambarai

புக்ஸ் இந்தியா - வெளியிட்டுள்ள ‘தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை,' என்கிற களஞ்சியத்தில், முக்கிய சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை குறிப்பு தந்துள்ளனர். கல்கி, புதுமை பித்தன், அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிவசங்கரி வரிசையில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரமித்துப் போய் நின்றுவிட்டேன். என் தாய் உள்பட பெரிய எழுத்தாளர்கள் பலர் இருக்கும் போது, என் பெயர் எதனால் குறிப்பிடப்பட்டது என்று குழம்பினேன். பிறகு என் வாழ்க்கைக் குறிப்பில், நான்கே நாவல்கள் எழுதி, தனக்கென்று ஒரு தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டிருப்பவர் என்று என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. எனது இந்தப் பெருமைக்கு முழு காரணம் இருவர்.

முதலில் எனது தாய் கமலா சடகோபன். எனது தமிழ் ஆர்வத்திற்கு அவரே வித்திட்டவர்.

நான் முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். 1000 நாவல்கள் எழுதி நூலகங்களில் அடுக்கப் பட்டு அவை புழுதி படிந்து கிடப்பதைக் காட்டிலும், நான்கு புத்தகங்கள் எழுதினாலும், அவை வருங்காலத் தலைமுறையினரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எனது பத்திரிகைப் பணியில் மிகவும் பொறுப்பான பதவியை வகித்துக் கொண்டிருப்பதால், என்னால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை மட்டுமே எழுத முடிகிறது. ஆங்கில நீரையும், தமிழ்ப் பாலையும் கலந்து பருகிக் கொண்டிருக்கும் அன்னப்பறவையாக உழல்கிறேன். வெறும் பாலை மட்டுமே குடித்துக்கொண்டு, நீரை உமிழும் காலம் விரைவில் வரும்.

இதோ –

எனது அடுத்த நாவல் – ‘கர்ணபரம்பரை'

இதுவும் ஒரு வித்தியாசமான நாவல்தான். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று கூறுபவர்களை இது ஏமாற்றாது. ஆனால் அப்படிக் கூறுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இந்த நாவலைப் படிக்க உங்களுக்கு நான்கு கைகள் தேவை.

புத்தகத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு கை, பக்கங்களைப் புரட்ட மற்றொரு கை, உங்கள் இரு காதுகளையும் மூடிக்கொள்ள இரு கைகள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது நாவலைப் படித்ததும் உங்களுக்கு விளங்கும்.

நமது தமிழ் மண்ணில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் மனிதர்களின் கால் படாத பகுதிகளும் இருக்கின்றன. உணர்வுகளால் இந்த பிரபஞ்சத்தையே அளந்த பல பெரிய மகான்கள் இங்கே வாசம் செய்துள்ளனர். சிவனாரும் உமையவளும் திருமணம் செய்து கொண்டபோது, பாரம் தாங்காமல் பூமி சரிய, அதை சமன்படுத்த வேண்டி அகத்திய மாமுனிவர் தெற்கே அனுப்பப்படுகிறார். அவர் கால் வைத்த மண் தமிழ் மண். அவரையே பிரமிக்க வைத்த பல விஷயங்கள், அவர் கால் பதித்த வேளையில் நமது தமிழ் மண்ணில் இருந்தன. அவை இப்போதும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எப்போது அந்த இரகசியங்கள் வெளியிடப்படுகின்றதோ, அப்போது அவற்றால் பல ஆபத்துகள் உண்டாகும். செந்தீ, புவி, கால், நீர், விண் என்கிற பஞ்ச பூதங்களையும் சுரண்டி விற்கும் இன்றைய அரசியல்வாதிகள், இந்த இரகசியங்களையும் துஷ்பிரயோகம் செய்தோ அல்லது, நமது எதிரிகளுக்கு விற்றோ பணம் பண்ணக்கூடும் என்பதாலேயே, சில இரகசியங்களை சித்தர்கள் மனிதர்களின் கைக்கு எட்டாவண்ணம் மறைத்து வைத்திருக்கின்றனர்.

அப்படி ஒரு இரகசியம் தான் களவாடப்படுகிறது. அந்த இரகசியத்தை மீட்பதற்கு நடக்கும் போராட்டம் தான், கர்ணபரம்பரை. இந்தக் கதையின் நாயகி, வயது முதிர்ந்த, கண்பார்வை இல்லாத ஒரு பெண் என்பதே ஒரு வியப்பை ஏற்படுத்தும் விஷயம். இந்த நாவலைப் படித்து முடித்தபின், இப்படியும் கூட நடக்குமா? என்று எனக்கு ஃபோன் செய்பவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன்.

"இதுபோல் அல்ல, இதைவிட இன்னும் பல பெரிய மற்றும் அற்புதமான விஷயங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கின்றன. இரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் அந்த மேன்மையான விஷயங்கள், இந்த பிரபஞ்சத்தையே கட்டிப்போட வைக்கும் ஆற்றல் உடையவை. அந்த இரகசியங்கள் மர்மங்களாக இருக்கும் வரை அனைவருக்குமே நல்லது. எப்போது அவற்றை நாம் கையாளுகின்றோமோ, அப்போது நமது அழிவு நிச்சயம்.”

பீடிகையை இத்துடன் நிறுத்தி விடுகிறேன். நீங்கள் கர்ணபரம்பரையைப் படிக்கத் துவங்கலாம்.

அன்புடன்,
'காலச்சக்கரம்' நரசிம்மா
மின்: tanthehindu@gmail.com

About Kalachakram Narasimha:

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

More books by Kalachakram Narasimha

View All
Sangathara
Kalachakram Narasimha
Athimalai Devan - Part 5
Kalachakram Narasimha
Anniya Mannil Sivantha Mann
Kalachakram Narasimha
Athimalai Devan - Part 2
Kalachakram Narasimha
Kamadenuvin Mutham
Kalachakram Narasimha

Books Similar to Karna Parambarai

View All
Konjum Vanjanai!
Rajesh Kumar
Nooru Degree Thendral
Rajesh Kumar
Panakkaranai Kaadhalikathea
Vimala Ramani
Naan Kutravali Illai
Pattukottai Prabakar
Enkitte Mothathey!
Devibala