வாழ்க்கைப் பாதைகள் மாறிய போது எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புதிய சூழ்நிலையை ஒத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை இவர் புரியவைக்கின்றார் (மழைக்குப் பின்னும் பூக்கள்)
இவரின் இலக்கியச் சிந்தனை ஆங்காங்கே கதை மாந்தரின் உணர்வுகளையும், கதையையும் நகர்த்திச் செல்லப் பெரிதும் உதவுகின்றது.
'அன்புமிக்க அதிகாரிக்கு’ கதையில் வர்மன் சமீபத்தில் தான் படித்த ஆர். ராஜகோபாலனின் நீசர்கள் கவிதையைக் கடிதத்தில் எழுதி, அதிகாரியை நீசர் கூட்டத்தில் சேர்க்கின்றான். அவனது உணர்ச்சி வசப்பட்ட நிலையை அக்கவிதை எடுத்துக் காட்டுகின்றது.
காஃப்காவைப் படித்த ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளியைச் 'சிதறல் கதையில் காட்டும் இவர், நனையத் தோன்றுகிறவர்கள் கதையில் மரங்கள் பற்றி ரோல் விகஸின் வரிகளைக் குறிக்கின்றார், சலனம் கதையில் பேராசிரியர் தன் மனத்தை அடக்கப் பட்டினத்தார் பாடலைத் துணைக்கொள்வதாகச் சொல்கின்றார். 'பயணம்' கதையில் மழைத்தாரைகளைப் பார்த்தவன் எண்ணத்தில் பாரதியின் கவிதைவரிகளை நிரப்புகின்றார்: 'திசைகளற்று முகங்களற்று' கதையில் தேவதேவனின் கவிதையைக் கொண்டு வருகின்றார், 'அப்பா' கதையில் பல கவிதைகளைத் தருகின்றார். ஆக்டோபஸ்' கதையில் மறக்க முடியாத கவிதை ஒன்றைப் படைக்கின்றார்.
பாத்திர வார்ப்புத்தான் வாசகர்களை ஈர்க்கும் மாபெரும் சக்தியாகும். இன்பதுன்பங்கள், ஏமாற்றங்கள், அவற்றைத் தாங்கும் மன உறுதிகள், நம்பிக்கைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், நட்பின் இறுக்கங்கள். இறைப் பற்று, அன்பு, அந்நியமாகத் தோன்றல், எரிச்சல், ஆத்திரம் இன்ன பிற உணர்வுகள், முகங்களை அவ்வப்போது மாற்றும் இயல்புகள். இயற்கை விருப்பு, இலக்கிய விருப்பு எனத் தொடரும் மனித உணர்வுகளையும், ஒழுகலாறுகளையும் கொண்டு இவரது பாத்திரங்கள் வார்க்கப் படுகின்றன.
பொருளாதார ஏற்றத்தாழ்வினால் நட்பின் இறுக்கம் இடைவெளிதர அந்நியனாய் உணரும் ஜெயசீலன் (மனது). தன் தம்பியின் தவறுக்காகத் தந்தையை அதிகாரி பழிவாங்கிய கொடுமையை எதிர்க்கும் வர்மன் (அன்பு மிக்க அதிகாரிக்கு), மருத்துவமனையில் படுத்திருக்கும் கணவனுக்கு அவன் நண்பன் பண உதவி புரிவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தழுவும் எம்ஸி (இடைவெளி), தங்கையை முதல் பிரசவத்திற்காகச் சேர்த்துவிட்டு சிறு பருவத்து நினைவுகளில் இதம் கண்டு துக்கத்திலும், ஆனந்தத்திலும் கண்ணீர் விடும் எபி (பிறகு வெளிச்சம் வரும்), காலத்தின் வேகத்தில் இஞ்சினீயர் கனவு நொறுங்கி காண்டிராக்டர் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும் பணிக்குத் தள்ளப்படும் சிறுவன் எபி (பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது), பிறகுக்கு ஆறுதல் கூறத் தெரியாத போதும் தனக்கு ஆறுதல் தாயின் மடியே எனத் தெரிந்து, அவள் மடியில் முகம் பதித்தழும் ஒரு சிறுவன் (ஆறுதல்), தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்காவது அந்த வேலை கிடைக்க வேண்டும் என்றெண்ணும் இளைஞன் யோனா (நாளை பொழுது விடியும்), தனக்கு விருப்பமான செயலைச் செய்யவிடாமல் தடுக்கும் நேயத்தை இயற்கைக்க முடிய சூழ்நிலையால் தன்னுள் பல்வேறு முகங்களை ஒட்ட வைக்கும் ஓர் இளைஞன் (மறுபடியும் ஓர் மறுபடியும்)
பார்வை பேச்சு கடிதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டது காதல் என்பதை உணர்த்தும் எல்ஸி (காதல்), நான் - நீ - அவன் எல்லாமே நான் தான் என்று தவிக்கும் ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளி (சிதறல்), பசுமையோடு இணைத்துக் கொண்ட வாழ்க்கையை வண்ணத்தில் மட்டுமே பசுமையைப் பார்க்க முடியும் சூழலில் இணைத்துக் கொள்ள விரும்பாத ஓர் இயற்கை விரும்பி (நனையத் தோன்றுகிறவர்கள்), மனித நேயத்தைக் கவிதைகளில் காட்டுவதைவிட வாழ்க்கையில் காட்டுவதே அர்த்த முள்ளதென நினைக்கும் கவிஞன் இளங்கோ (நாளையைக் குறித்தான இன்று) , வாழ்க்கையை எளிதாகப் பார்க்கத் தெரியாமல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பொறுமை இழந்து தவிக்கும் ஓர் இளைஞன் (அதுவரை) பிறரது நம்பிக்கையைவிட நினைவுகளே அதிகம் இதம் தருவன என்பதைக் காட்டும் பேச்சிழந்த ஜோ (நிலை), தந்தையைத் தோழனாக எண்ணி
அவர் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் மகன்கள் (கிறிஸ்துமஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அப்பா) , அன்பில் ஊறித்திளைத்து அன்பான முட்டாளாக அசட்டுக் குணத்தாளாக அன்னையை நினைக்கும் மகன்கள் (கிறிஸ்து மஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அறியாதிருந்த முகங்கள்)
மொத்தத்தில் இவரது கதைகள் தனி மனிதன். குடும்பம், சமுதாயம் , எனப் பல்வேறு நிலைகளில் மனித உணர்வுகளைப் படிப்பவர் உள்ளத்தில் ஆழ்தடமாய்ப் பதித்திடும் இயல்பின. இவரின் ஆக்கங்கள் மென்மேலும் தொடர்ந்து சிறந்து, சிறுகதை வரலாற்றில் தனித்ததோர் உயர் இடத்தை இவருக்குத் தேடித் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் நா.இளங்கோவன்
எழுத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் எழுத ஆரம்பித்த பின் இவருக்கு ஏற்பட்ட இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்களின் நட்பும் நிறைய புத்ககங்களும், இவரை நவீன இலக்கியத்தில் வெவ்வேறு அனுபவ விஷயங்களுடன் எழுத்தை தீவிரமாக்கியது. நட்பு, காதல், மனிதம் இவற்றின் அடிப்படை உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனித குமாரர். சக மனித உறவுகள் குறித்த அக்கறையும், இவரின் பெண் பாத்திரங்களும் சற்று வித்தியாசமானவை. வாழ்ந்து கொண்டிருக்கிற மலைப் பிரதேச அநுபவங்களும் அந்த சூழலும் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. ' வெகு ஜன இதழ்கள் மூலமாவே, எழுத்துலகிற்கு அறிமுகமானவர். இலக்கிய இதழ்களிலும் நிறையவே எழுதி வருகிறார். கவிதைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள கார்த்திகா ராஜ்குமார் உதகையிலுள்ள Hindustan Photo Films-ல் Senior Chemist ஆக வேலை.
Rent Now