நாற்றிசைகளிலும் உயிர்கள் பரிமளிக்க நான்முகக் கடவுள் காரணமாக இருப்பதாக புராணங்களில் கூறியுள்ளதைப் போல. எண் திசைகளிலும் விடுதலையுணர்வு என்னும் கனலை கவிதையால் ஊதிப் பெரிதாக்க. தென்திசையில் ஒரு மகாகவி தோன்றினார்.
இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும் அவர் தன் கவித் திறனால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்த சமூகத்தைத் தட்டி எழுப்ப அவர் படைத்தகனல் தெறிக்கும் கவிதைகள் பெரியவை.
நாட்டை ஆண்ட கிழக்கிந்திய வெள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்தபோதும் அச்சமின்றி தன் வாழ்நாள் முழுதும் பத்திரிக்கையாளராக கவிஞராக கட்டுரையாளராக கார்டூனிஸ்ட்டாக விடுதலை வீரராக எனத் தன் திறமையை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த அவரிடமிருந்த மொழிவளமே காரணம். ஏறத்தாழ பதினொரு மொழிகளைக் கற்றது மட்டுமல்ல எல்லா மொழித் தலைவர்களிடமும் அரசியல் வாழ்வில் அச்சமின்றி உரையாடத் துணையாக இருந்தன.
பட்டை தீட்டப்பட்ட வைரத்தை திருப்பும் போது தன் ஒளியை திருப்பும் திசையெல்லாம் வெளிப்படுத்தும். அதைப் போல எண்திசைகளிலும் தன் அக்னிச் சிறகுகளை விரித்துப் பறந்தது இந்த கானக்குயில்!
'பிரமமே யானெனப் பேசுக!' என்று தன் ஞான விதையை மக்கள் மனத்தில் விதைத்து விட்டு, அவ்விதை வளர்ந்து செடியாகி மரமாகி கனி தரும் வேளையில் அதைப் பார்க்க இயலாது மறைந்த ஒரு மகாகவியை அப்போது இருந்த அடிமை சமுதாயம் உணரவில்லை. அந்த மகாகவியின் கனவு நனவாகி நடைமுறையில் வரும் போது மக்கள் விடும் சுதந்திர மூச்சு அந்தக் கவிக்கு நிச்சயம் அஞ்சலியாக அமையும்.
அந்த மகாகவியின் பலபரிமாணங்களை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பின் தோரண வாயிலில் கட்டியம் கூறும் காவலனாக மட்டுமே நான் உங்கள் முன் நிற்கிறேன்.
அவரது ஆளுமையை வாசியுங்கள் ஆத்மார்த்தமாக உங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கள்.
- கே. எஸ். ரமணா
இவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rent Now