நமசிவாய என்கிற பஞ்சாட்சரத்தைப் போற்றிப் பரவசமடைந்தார் மாணிக்க வாசகர்.
நகைச்சுவை என்கிற ஐந்தெழுத்தையும் அவ்வாறே போற்றி அன்றாட வாழ்க்கை தரும் அலுப்பை விரட்டிய நகைச்சுவை எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணினால் பல விரல்கள் மிகுதியாக நிற்கும்.
நகைச்சுவையை உபாசிப்பவர்கள் போற்றப்படுகிறார்களா?
"உங்க கடையிலே இருக்கிற அழுகிய தக்காளி, முட்டை எல்லாவற்றையும் கொடுங்கள்” என்று காய்கறிக் கடையில் ஒருவர் கேட்டாராம்.
“இன்னிக்கு நடக்கப் போற ஷோவிலே பஃபூன் மேலே வீசத்தானே?”
"ஹூஹூம். நான்தான் அந்த பஃபூன்.”
நகைச்சுவை மன்னர் பி. ஜி. வுட்ஹவுஸ் தான் எழுதிய கடிதங்களை ஜன்னல் வழியாக வெளியே போட்டு விடுவாராம். அந்தப் பக்கம் போகிற ஆள்கள் கடிதங்களை பயபக்தியுடன் எடுத்து தபால் பெட்டியில் சேர்த்து விடுவார்களாம்.
சென்னையில் ஓர் இலக்கியக் கூட்டம். கொத்து கொத்தாக அரங்கின் வெளியில் எழுத்தாளர்கள். என்னை ஓர் அறிவுஜீவி கேட்டார்.
“நீங்கள் எழுதுகிறீர்களா?”
"ஆமாம். ஏதோ...”
“சப்ஜெக்ட்?”
“நகைச்சுவை."
மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் இரும்புத் துண்டிலிருந்து விலகிவிடும் எலக்ட்ரோமாக்னெட் போல அவர் என்னிடமிருந்து கழண்டு கொண்டார். பிறகு என் பக்கம் திரும்பவே இல்லை.
காந்தமாக நகைச்சுவை எழுத்துகளால் ஈர்க்கப்படுபவர்கள் மிகச் சிலரே.
நன்றி.
ஜே.எஸ்.ராகவன்
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.
வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..
Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.
தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'
Rent Now