Home / eBooks / Kolaikku Oru Passport
Kolaikku Oru Passport eBook Online

Kolaikku Oru Passport (கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்)

About Kolaikku Oru Passport :

விகடனைவிட குமுதம் வயதில் 23 இளையதாக இருந்தாலும், வெகு வேகமாக விற்பனையில் விகடனை முந்திவிட்டது!

இதற்குக் காரணம் அதன் விறுவிறுப்பு! சுறுசுறுப்பு! விகடன் சிவாஜி என்றால் குமுதம் எம்.ஜிஆர் எனலாம்!

சிவாஜியில் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் வெகுஜனம் விரும்பியது எம்.ஜிஆரைத்தானே!

எம்.ஜி.ஆர் படத்தை பார்க்கும்போது படு சுவாரஸ்யமாக இருக்கும்! உதாரணமாக 'எங்க வீட்டுப் பிள்ளை படம்! படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது! ஆனால் படத்தை பார்த்து முடித்து ஆற அமர யோசித்தால், இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? ஏன் இப்படி காதில் பூ? என்றெல்லாம் நமக்குள் இருக்கும் 'அறிவிஜீவி' காரன் எட்டிப் பார்த்து கேள்வி கேட்பான்!

ஆனாலும் அடுத்த முறை படத்தை ஏதாவது சேனலில் ஒளிபரப்பினால் அந்த அறிவுஜீவிகாரனை விரட்டியடித்து விட்டு படத்தை பார்ப்போம்! அந்த மாதிரி எழுத்துப்பூர்வமான ஓர் 'எங்க வீட்டுப் பிள்ளை’ தான் பாமா கோபாலனின் 'கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்' நாவல்!

23.06.94 வருடம் மாலைமதியில் வந்த நாவல் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ள மெட்ரோ ரயில் எனலாம்! வேகமான, அதே சமயம் சுகமான வசதியான பயணம் மாதிரிதான் இந்த நாவலை படிக்கும் அனுபவமும்! பாமா கோபாலன் ஒரு சைலன்ட் சகலகலா வல்லவர் என்பேன்!

ஆழமான அதே சமயம் தன்னை எளிமையாக காட்டிக்கொள்ளும் ஒரு முதிர்ச்சியான மனிதர்! அவருடைய நகைச்சுவை என்பது பட்டாசு மாதிரி உடனே வெடிக்காது! அடுப்பில் தாளிக்கப் போடும் கடுகைப் போல! கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். எப்போது கொதித்து வெடிக்கும் என்பது தெரியாது! அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டேயிருக்க வேண்டும். சட்டென்று ஒரு ஜோக் வெடிக்கும்! ஆனால் சற்று நின்று யோசித்தால்தான் அந்த நகைச்சுவையின் ஆழமே புரியும்! பழுத்த ஆன்மிகப் பழம் மாதிரி காட்சியளிக்கும் இந்த மனிதருக்குள் ஒரு நகைச்சுவையான 'வாத்ஸாயனன்' ஒளிந்து கொண்டிருப்பதை இந்த நாவல் முழுவதும் பார்க்கலாம்

முரளி - அஞ்சனா! முரளி- கோதை! இளங்கோ-அஞ்சனா! சில்மிஷங்களும், அத்துமீறல்களும் வயதைக் குறைத்து ஜன்னலுக்கு வெளியே இந்த வயதிலும் கண்களை அலைபாய விடுகிறது. திலீபன்-ஜெகன் பாத்திரங்கள் வித்யாசமானவை!

அந்தக் கொலை சம்பவம் ஓர் அற்புதக் கற்பனை! யார் அந்த இளைஞன்? கால் யார் அந்தப் பெண்? ஏன் இந்த இருவரும் அந்த அறையில் கொலை செய்யப் பட்டார்கள்?

புத்தகத்தைப் படித்து முடித்தே ஆக வேண்டும் என்கிற ஆவலை இந்த கேள்வியே தூண்டுகிறது. வழக்கமாக நாவல் எழுதும்போது வலிந்து தங்கள் கற்பனை வளத்தை வர்ணனையில் திணிப்பார்கள். இந்தப் பாசாங்கெல்லாம் பாமா கோபாலனிடம் இல்லை! போகிற போக்கில் அனாயாசமாக அந்த இடத்திற்கு தேவையான அளவோடு இளடை துள்ளலோடு தன் கற்பனையைச் சிதற விடுகிறார்!

முதல் அத்தியாயத்தில் அந்தக் காலை வேளைடை சொல்லும் விதம். 'மணி ஒன்பது அடித்தது. காலை வேளை அவசரம். தண்ணி பிடித்துக் கொள்வதிலிருந்து, ஸ்கூல் போகும் பெண்களின் தலைப் பின்னலில் போராடு தாய்மார்கள், யூனிபார்மில் போகும் சிறுவர்கள், ஸ்கூல் பாட்டு போடலியே என்று சிணுங்குவது. அதே காட்சி விவரிப்பில் ஒரு சிறுமியை முத்தமிட நாயகி அஞ்சனா குனியும் விதத்ன அஞ்சனா தன் உயரத்தை பாதியாகக் குறைத்தாள்.

6வது அத்தியாயத்தில் ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டர் வார்டன் மைத்ரேயி பற்றிய வர்ணனை! 'நாற்பதுக்கு ஐம்பதுக்கும் இடையே ஒரு எண் சொல்லுங்கள். அதுதான் அவள் வயசு. தலையில் கொண்டை, நெற்றியில் எட்டணா சைஸில் குங்குமப் பொட்டு, தங்க ஃபிரேம் மூக்குக் கண்ணாடி, எல்லாரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் கண்கள், அதனாலேயே கணவனை இழந்தவள். இடுப்பில் இரண்டு டயர்கள் உண்டு.

இந்த லாவகமில்லையென்றால் எஸ்.ஏபி. அண்ணாமலை, ரா.கி.ரங்கராஜன், ஜா.ரா.சுந்தரேசன், புனிதன் இந்த நான்கு பேரைத் தவிர வேறு யாரும் ஆசிரியர் இலாக்காவில் கிடையாது என்கிற தன் பல வருட பிடிவாதத்தை எஸ்.ஏ.பி. தளர்த்தி இவரை ஆசிரியர் இலாக்காவில் சேர்த்திருப்பாரா?

எல்லோரும் வெளிநாடு போக முதலில் பாஸ்போர்ட் வாங்கி தாங்கள் போகிற நாட்டின் 'விசா'விற்கு மனுச் செய்வார்கள்.ஆனால் இவருடைய இந்த நாவலோ, 'விசா' வந்த பிறகு 'பாஸ்போர்ட்டுக்கு அனுமதி செய்வது மாதிரி! சுவாரஸ்யத்தை கேள்விப்பட்டு புத்தகம் வாங்கிப் படிக்கிற ரகம் இவரது இந்த நாவல்!

- சுதாங்கன்.

About Bhama Gopalan :

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Rent Now
Write A Review

Same Author Books