Dr. R. Prabakaran
எல்லாக் குழந்தைகளுக்கும் கதை என்றால் வெல்லம்தான். கதை கேட்டல், கதை சொல்லுதல், கதை படித்தால் எல்லாம் பிடிக்கும். அதுவும் வீர தீர சாகச கதைகள் ரொம்பவும் பிடிக்கும். என் சிறு வயதில் எத்தனையோ சாகச கதைகள் படித்திருக்கிறேன், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து புனைந்தும் இருக்கிறேன். ஒவ்வொன்றிலும் வழக்கமாக ஒரு அரசிளங்குமரன் இருப்பான், பலவிதமான சிக்கல்களை சந்தித்து, தன மதியாலும் வீரத்தாலும் வென்று, அரசிளங்குமரியை இன்னல்களினின்று விடுவிப்பான், தன்னுடைய இழந்த நாட்டை மீட்பான்.
இந்த கதைகளை கேட்கும் போது பலவிதமான கேள்விகள் மனதில் எழும்: அந்த மலையின் உயரம் என்ன? செங்குத்தாய் இருந்ததா? அகழி வட்ட வடிவமா, நீள்வட்ட வடிவமா? மதிள் சுவர் ஏறுவதற்கு தேவையான கயிற்றின் நீளம் என்ன? குதிரை போன வேகம் என்ன? என்றெல்லாம். கதை சொல்லுபவர் இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் தர மாட்டார். “உனக்கு கதை வேணுமா வேணாமா?” என்ற மிரட்டலோடு கேள்விகள் அடங்கி விடும்.
இன்று என்னை மீண்டும் அந்த சிறுவனாக்கியவர் முனைவர் பிரபாகரன். அவருடைய கதைகள் கணிதத்துடன் பின்னிப் பிணைந்து முன்னேறுகின்றன. கோணம் மீட்ட கோமகன் வடிவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுவும் சாகச கதைதான். மலை, அரண்மனை எல்லாம் உண்டு. சிக்கல்களினின்று வெளிவர தேவையானது கோணங்கள் பற்றிய அறிவு. செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், எல்லாம் என்ன என்று அறிந்திருப்பதோடு, ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து இரு கரங்கள் இயங்குகையில் கோணங்கள் எவ்வாறு மாறுகின்றன என்ற புரிதலும் தேவைப்படுகிறது. கதையில் சந்திக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுடைய பெயர்கள், பேச்சு எல்லாமே மாணவர்களுக்கு சுவையாக இருக்கும். இறுதியில் உள்ள கணித உரையை ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஆசிரியரிடம் ஒரு குற்றச்சாட்டு உண்டென்றால், அது கோணமணி என்ற சுவாரசியமான வில்லனை உருவாக்கி விட்டு அவனை சந்திக்காமல் நம்மை ஏமாற்றி விட்டதுதான்!
கலை வடிவங்களையும் கணிதத்தையும் இணைப்பது மிகவும் தேவையானது. அப்பணியை மிகுந்த அக்கறையுடனும் படைப்பாற்றலுடனும் செய்து வரும் முனைவர் பிரபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முனைவர் பிரபாகரன் இன்னும் பலப்பல கணித கதைகளை உருவாக்கி மாணவர் உள்ளங்களை கணிதத்தின் பால் ஈர்க்க வேண்டும்.
முனைவர் ஆர். ராமானுஜம் பேராசிரியர்
கணித அறிவியல் நிறுவனம்
சென்னை,தமிழ்நாடு
முனைவர்.இரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பணி புரிந்து வருகிறார்.
கணிதத்தினை கதைகள் மூலம் நடத்துவதில் வல்லவர்.சிறந்த இந்தியன் விருது, மனிதநேய மாமணி விருது, சுவாமி விவேகானந்தர் விருது,கவிதென்றல் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் பல்கலைக் கழகமானியக் குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பண்டைய தமிழர்களின் கணித திறன்கள், இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் பொறியியல் கல்வி அமல்படுத்துவதில், இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கணிதம் இரண்டாம் பருவத்திற்காக மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் கணித நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தமிழினை ஒரு அறிவியல் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பு இயக்கத்தினை நடத்தி வருகின்றார்.
தமிழ் வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதவியல் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் பொருட்டு கணிதவாணி என்னும் மாத இதழினை நடத்திவருகிறார்.