Home / eBooks / Kongu Nattu Koilgal
Kongu Nattu Koilgal eBook Online

Kongu Nattu Koilgal (கொங்கு நாட்டுக் கோயில்கள்)

About Kongu Nattu Koilgal :

பல நல்ல உள்ளங்களை இணைத்து 'இளைய பாரதத்தினாய் வா... வா... வா...' என்ற முழக்கத்தோடு சிறப்பாக இயங்கிவரும் 'இலக்கியச்சாரல்' என்ற அமைப்பின் தலைவர் 'உழவுக்கவிஞர்' உமையவன் கள ஆய்வின் மூலம் அரிதின் முயன்று எழுதிய 'கொங்கு நாட்டுக் கோயில்கள்' என்ற பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட வியக்க வைக்கும் நூலைப் படித்து மகிழ்ந்தேன். இது கவிஞரின் 11ஆம் நூல் என்பது சிறப்புச் செய்தியாகும்.

எல்லோராலும் நன்கு அறியப்பட்ட சிவன்மலை, சென்னிமலைக் கோயில், ஓரளவு அறியப்பட்ட அன்னூர், பண்ணாரி, குருநாத சுவாமி கோயில்களோடு மிகவும் வெளிச்சத்திற்கு வராத மல்லியம்மன், வனபத்ரகாளி, கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோயில்கள் பற்றிய செய்திகள் சேகரித்து வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.

ஒவ்வொரு தலைப்பிலும் அக்கோயிலின் மிக சிறப்பான செய்தியைத் தந்திருப்பது வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் நண்முயற்சியாகும். எடுத்துக்காட்டாக 'பறவை வடிவ', 'தாலிக்குத் தங்கம் தரும்' போன்றவைகளைக் கூறலாம்.

கோயில்களின் இருப்பிடம், தலவரலாறு, அமைப்பு, சன்னதிகள், பூசை முறை, தல விருட்சம், சிறப்புகள் இவைகள் முறைப்படி நன்கு விரிவாக விளங்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. கோயில்களில் நடைபெற்ற அற்புதங்களைக் கூறியிருப்பது அத்தலத்தின் பெருமையை விளக்குவதாக உள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு பற்றிய முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பது போற்றத்தக்கது.

பாதையற்ற துருவத்தில் வாழும் மலைமக்கள் நிலை நம் நெஞ்சை உருக்குகிறது. இந்நூல் வாயிலாக அவர்கட்கு நல்லகாலம் பிறக்கலாம்.

'கொங்கு நாட்டுக் கோயில்கள்' மிகச் சிறந்த ஆலய வழிகாட்டி நூல். இதுபோல் தொடர்ந்து பன்னூல்கள் படைத்து சமயப்பணி செய்ய உமையவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்புடன்

செ. இராசு.

About Umayavan :

இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.

தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.

சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Rent Now
Write A Review