Home / eBooks / Kudiyarasu Thalaivar K.R.Narayanan
Kudiyarasu Thalaivar K.R.Narayanan eBook Online

Kudiyarasu Thalaivar K.R.Narayanan (குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்)

About Kudiyarasu Thalaivar K.R.Narayanan :

பாரத நாட்டின் மிக உன்னத பதவி குடியரசுத் தலைவர் பதவி ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர் அதிக அதிகாரங்கள் படைத்தவராகத் தோன்றினாலும் உண்மையில் அவர் பாராளுமன்றத்தின் அறுதிப்பெரும் பான்மை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவரே என்பதும் நாம் அறிந்ததே. என்றாலும், நாடு நெருக்கடியான காலகட்டங்களைச் சந்திக்கும் போது குடியரசுத் தலைவர் தமது தனித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாட்டை வழி நடத்திச்செல்கிறார் என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும்.

இந்தச் சூழ்நிலையில்தான் இந்தியத் திருநாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக மேன்மை மிகு நாராயணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்தான் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்று ‘யூகங்கள்’ தோன்றிய போதே, பத்திரிகைகள் இவரைப்பற்றிப் பத்தி பத்தியாக எழுதத் தொடங்கின. பதவிக்கு வரப்போகின்றவர்களைப் பற்றி ‘ஆஹா’ ‘ஓஹோ’ என்று புகழாரம் சூட்டுவது நமது இயல்பாயிற்றே! அப்படித்தான் இந்தச் செய்திகளும் என்று நான் முதலில் நினைத்தேன் ஆனால், பின்னர் தொடர்ந்து, அனைத்துச் செய்தித்தாள்களும் நாராயணனைப் பற்றி வெளியிட்ட செய்திகள், தகவல்கள் எல்லாம் நெஞ்சத்தைத் தொடும் வண்ணம் இருந்தன. அதிலும் சில செய்திகள் நெஞ்சைத் தொட்டது மட்டுமல்ல... சுட்டன... தைத்தன.

நாராயணன் அவர்கள் வாழ்க்கையில் பட்ட அவலங்கள், அல்லல்கள் என்னைச் சிந்திக்கவைத்தன.

முதல் தோல்வியிலேயே முகத்தை மூடிக்கொண்டு மூலையில் முடங்கிவிடும் முதுகெலும்பற்ற இந்திய நாட்டு இளைஞர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை அவசியம் உணர வேண்டும் உணர வைக்க வேண்டும் என்ற உந்துதல் என் மனத்தில் எழுந்தது.

அதன் பின்னர் நான் ஆர்வத்தோடு, அனைத்துத் தமிழ், ஆங்கில நாளேடுகளைப் படிக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றிய செய்திகளைத் தனியே ஒழுங்குபடுத்தி... சேர்க்கத் தொடங்கினேன்.

வார, திங்கள் இதழ்கள் எல்லாவற்றிலிருந்தும், தகவல்களைத் தொகுத்தேன். பின்னர் அவற்றை ஒன்றோடொன்று பொருத்திப் படித்துப் பார்த்து, உண்மைகளைச் சரிபார்த்து உறுதி செய்துகொண்டேன்.

முன்னேறத் துடிக்கும் பல நாராயணன்கள் நம்மில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்களின் இந்த வாழ்க்கை வரலாறு, அவர்களின் சோர்ந்த உள்ளங்களைத் தட்டி எழுப்பும். வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியானது தான் என்று அவர்கட்கு அறிவுறுத்தும்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலம் என் நினைப்பும், எழுத்துமாக நாராயணனே நிறைந்து நின்றார். வேறு பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, முழுமையாக இப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

About M. Kamalavelan :

மா. கமலவேலன்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.மா.கமலவேலன் 15 ஜனவரி 1943 அன்று பிறந்தவர். தந்தை பெயர் திரு.தா.சொ.மாணிக்கவாசகன். தாயார் பெயர் திருமதி.சூரியவடிவு. மனைவியின் பெயர் திருமதி.முத்துலட்சுமி.

இவர் தனது “அந்தோணியின் ஆட்டுக்குட்டி” என்ற சிறுவர் நாவலுக்காக 2010 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். முதல் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர் என்ற பெருமையினை திரு.மா.கமலவேலன் அவர்கள் பெறுகிறார். இவர் 1961 ஆம் ஆண்டிலிருந்து சிறார்களுக்காக எழுதி வருபவர். இவர் “புதுமை” என்ற தலைப்பில் எழுதிய முதல் சிறார் சிறுகதை “கண்ணன்” பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து கண்ணன், “அரும்பு”, “கோகுலம்”, “பாலபாரதி”, “பாலர் மலர்”, “தினமணி சிறுவர்மணி” போன்ற சிறார் இதழ்களில் பல்வேறு சிறார் படைப்புகளைத் தந்தவர். சிறார் இலக்கியத்தில் சிறுகதை, நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என பல தளங்களில் இயங்கி வருபவர். இவர் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் படைப்புகளை வழங்கி உள்ளார். இன்றும் அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் தொடர்நது ஒலிபரப்பாகி வருகின்றன. இதுவரை மொத்தம் 80 நூல்களை எழுதியுள்ளார். இதில் 22 சிறார் நூல்கள் ஆகும். “அந்தோணியின் ஆட்டுக்குட்டி”, “நேசிக்கும் நெஞ்சங்கள்”, “தெளிவு பிறந்தது”, “தன்னம்பிக்கை தந்த பரிசு”, “ஜப்பான்நாட்டுக் கதைகள்”, “குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத்தலைவர்” முதலான தலைப்புகளில் பல சிறார் நூல்களை எழுதியவர். இவர் எழுதிய சிறார் நூல்களை பழனியப்பா பிரதர்ஸ், தென்றல் நிலையம், மணிவாசகர் பதிப்பகம், என்.சி.பி.எச், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் போன்ற பதிப்பகங்கள் பதிப்பித்துள்ளன.

சுமார் 70 ஆண்டுகளாக சிறுவர் நாடகங்களில் ஒரு நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெருமை உடையவர். அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி மற்றும் மதுரை போன்றவை இவருடைய சிறுவர்களுக்கான நாடகங்களை 1970 முதல் இன்று வரை தொடர்ந்து ஒலிபரப்பி வருகின்றன. இவர் எழுதிய சிறுவர்களுக்கான நாடகங்கள் புகழ் பெற்ற “கண்ணன்” இதழில் 1965 முதல் 1971 வரை தொடர்நது பிரசுரமாகி வந்துள்ளன. மேலும் “கோகுலம்” இதழிலும் இவர் பலப்பல சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பாவமா ? சாபமா ?”, “எங்கப்பாவா கஞ்சன்”, “வாடாமலர்” முதலான நாடகங்கள் கோகுலம் இதழில் பிரசுரமானவை. அசோகன் பதிப்பகத்தார் 1985 ல் இவர் எழுதிய நாடகங்களைத் தொகுத்து “உறவுப்பாலம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளனர். இந்த நூலில் உறவுப்பாலம், வேடிக்கை மனிதர்கள், தொழில் ஒன்று துவக்க வேண்டும், ஒளியை நோக்கி ஒரு கிராமம், குணங்கள் சூழ்நிலைகள் பாதிப்புகள் என ஐந்து நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடக நூலினை பள்ளிக் கல்வித் துறையால் கரும்பலகைத் திட்டத்தில் 11000 படிகள் வாங்கப்பட்டு தமிழ்நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவருடைய சிறார் இலக்கியப் படைப்புகள் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளன. இவருடைய படைப்புகளுக்காக கோவை லில்லிதேவசிகாமணி விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் விருது என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவொளி இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய அழ.வள்ளியப்பா சிறப்பு விருது பெற்றுள்ளார்.

இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து ஐந்து பேர்கள் எம்.ஃபில் பட்டமும் இரண்டு பேர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்கள். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இரண்டிலும் இவர் எழுதிய “அழுக்குப்படாத அழகு” என்ற நாடக நூல் பாடமாக அமைந்துள்ளது.

இவர் எழுதியுள்ள கே.ஆர்.நாராயணன் வாழ்க்கை வரலாறு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தோணியின் ஆட்டுக்குட்டி மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வாழ்ந்து வருகிறார். கைப்பேசி எண் 9942173875

Rent Now
Write A Review

Same Author Books