Home / eBooks / Latchiya Paravaigal
Latchiya Paravaigal eBook Online

Latchiya Paravaigal (லட்சியப் பறவைகள்)

About Latchiya Paravaigal :

இந்த நாவலுக்கு "லட்சியப் பறவைகள்" என்ற பெயர் ரொம்பவும் பொருத்தமாக அமைந்து விட்டது என்று சொல்வேன். ஒரு சமூக நாவலுக்கான கச்சிதமான தலைப்பு. இதில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியங்களைக் கொண்டவர்களாய்த் தங்களை அமைத்துக் கொண்டு இடைவிடாது, சுணக்கமின்றிச் செயல்பட்டு மேலெழுகிறார்கள்.

முதியோர் இல்லம் நடத்தும் தேவகி, சிறந்த திரைப்பட இயக்குநராக, தரமான திரைப்படங்களைத் தயாரிப்பவனாக, மேலெழுந்து வர வேண்டும் என்று தன்னைக் கடுமையான முயற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் பிரபு, ஒழுக்கமும், நேர்மையும், மற்றவருக்காக உண்மையாக உழைப்பதும்தான் தன்னை முன்னிறுத்தும் என்கிற மேன்மையான நடத்தையும், செயல்பாடும் உள்ளவனாக வரும் பாலன், அந்த தேவகிக்கும், இந்த பாலனுக்கும் தந்தையாக அமைந்திருக்கக் கூடியவர்களின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பில் வந்த தொழில் முன்னேற்றம் என இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக நகர்த்திச் செல்வதும், தொடர்ந்து முன்னேறுவதுமான நடவடிக்கைகளை உள்ளடக்கியவர்களாக இருத்தல், படிக்கும் வாசக மனதை உற்சாகத்திலும், ஊக்கத்திலும், கொண்டு செலுத்தும் என்பது நிச்சயம்.

முதியோர்களின் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வதும், அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பணியாளர்களின் வாழ்வியலைக் கருணையோடு தரிசிப்பதும் இந்நாதவலில் ஊடாடும் இன்னொரு தனிச்சிறப்பு.

பல சமூக நாவல்கள் ஒரு குடும்பம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்னைகள், அதில் தோன்றும் சிக்கல்கள், அதனால் தோன்றும் சுணக்கங்கள், அதன்பின்னான முனைப்பான செயல்பாடுகள், அந்தச் செயல்பாடுகளின் மூலமாகக் கிடைக்கும் வெற்றிகள் அல்லது எதிர்பாராத தோல்விகள் என்று பயணித்து, இறுதியில் இரண்டில் ஒன்றிலான முடிவினை எட்டி தங்கள் கதைகளை முடித்துக் கொள்ளும் விதமாய் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த நாவலை நான் எழுதத் துவங்கும்போதே, கடைசியில் "சுபம்" என்கின்ற தீர்மானத்தோடேதான் ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக ஆக்கி, ஊக்கமான செயல்பாடும், சோர்வடையாத மனமும், எதிர்ப்படும் சிக்கல்களைத் துணிந்து எதிர்கொண்டு தீர்க்கும் மனோதிடமும் கொண்ட கதாபாத்திரங்களாய்த்தான் அமைக்க வேண்டும், அம்மாதிரிக் கதாபாத்திரங்களூடே நம்பிக்கையும், நகைச்சுவையும், கலா ரசனையும், மிளிர வேண்டும் என்று நினைத்தேதான் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டும், அதன் ரசனையைக் கூட்டிக் கூட்டிச் சுவை சேர்த்தும், பக்கங்களைக் கடந்து சென்றேன். நல்ல சிந்தனையே இந்நாவலின் அடிப்படை.

ஏறக்குறைய நான் நினைத்தவிதமாகவே, வாசக மனங்களின் ரசனையை எடை போட்டு, விறுவிறுப்பும், ஆழமும் கொண்டதாகவே இந்நாவலை அமைத்திருக்கிறேன். இரண்டு நண்பர்களின், இரண்டு குடும்பங்களின் கதைகள் அடுத்தடுத்துக் காட்சிப்படுத்தப்பட்டு நடைபோடுகிறது இந்நாவல். இருவேறு விதமான குடும்பக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறை அனுபவங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கடந்து செல்வது ஸ்வாரஸ்யம் மிக்கதாகவே வாசகர்களுக்கு அமையும்.

ஒரு குடும்பத்தின் கதை என்றில்லாமல், செய்யும் தொழிலில் பாகஸ்தர்களாக இருந்து, பிரிந்த இரு வேறு பெரியவர்களின் குடும்பங்களின் கதையாகவும், ஒன்றன்பின் ஒன்றாய் அவர்களின் செயல்பாடுகளை விவரிப்பதாயும், பெற்றெடுத்த பிள்ளைகளின் நேர்மையான லட்சியங்களை உள்ளடக்கியதாகவும், அந்த லட்சியங்கள் காலத்தால் கனிந்து மெருகேறும்போது, ஒரு அனுபவ முதிர்ச்சியின் அடையாளமாய், காலம் தந்த படிப்பினையின் சாரமாய், மேம்பட்ட செயல்களின் வெளிச்சமாக நாவலின் முடிவு ஒருங்கிணைந்து அமைந்திருப்பதும், ஒரு சமூக நாவலுக்கே உரிய நியாயமான கண்ணியத்தைக் காப்பாற்றி, அதன் மேன்மையை உச்சியில் கொண்டு நிறுத்திச் சிறப்புச் செய்து விடுகிறது என்பதுமே இந்த நாவலுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவேன். இதுவே இந்தச் சீரிய சமூக நாவலின் மூலமாய் நான் வாசகர்களுக்குத் தரும் அனுபவபூர்வமான, நம்பிக்கையான, செய்தி. தரமான வாசகர்களை ஏமாற்றாத விறுவிறுப்பான வாசிப்பனுபவம் இந்த நாவலின் மூலமாய் நிச்சயம் கிட்டும் என்பது உறுதி.

அன்பன்,
உஷாதீபன்.

About Ushadeepan :

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, முரண் நகை(மின்னூல்), நிலைத்தல், ஆகிய 14 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால் விலங்கு ஆகிய நான்கு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற ஒரு சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம் என்பதான உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், படித்தேன் எழுதுகிறேன், உறங்காக் கடல் என்ற இரு வாசிப்பு இலக்கியம் குறித்த கட்டுரைத் தொகுப்பும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் தொடர்ந்து மாணவ, மாணவிகளால் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

2016 ல் உஷாதீபன் குறுநாவல்கள் – சென்னை நிவேதிதா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பதிப்பகமான “காகிதம் பதிப்பகம்” வெளியீடாக இவரது “செய்வினை-செயப்பாட்டுவினை” சிறுகதைத் தொகுதி (2016) வெளிவந்துள்ளதை மனமுவந்து அவர்களோடு கைகோர்த்ததாகப் பெருமையோடு முன் வைக்கிறார். சென்னை கவிதா பப்ளிகேஷனின் வெளியீடுகளாக “லட்சியப் பறவைகள்” என்ற சமூக நாவலும், “நின்று ஒளிரும் சுடர்கள்” என்ற திரைச் சித்திரமும் 2016 க்கான தனது படைப்புக்களின் மற்றும் இரண்டு முக்கிய வெளியீடுகள் என்று தெரிவிக்கிறார். அமேஸான் கி-ண்டிலில் இவரது “முரண் நகை” என்ற சிறுகதைத் தொகுப்பு 2018 வெளியீடு இ.புக்காக வெளிவந்து விற்பனையில் உள்ளது.

குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை விவாத நோக்கில், உள்மன வியாபகங்களோடு சுவைபட வழங்குவது இவரது கலை வெளிப்பாடு. சிறுகதைகளில் தனக்கென்று படிந்துபோன சரளமான நடையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவரின் தடம் நினைவு கூறத்தக்கது.

Rent Now
Write A Review

Same Author Books