எனது 32 வருட நாடகம், சினிமா அனுபவத்தில் முதன் முறையாக சென்ற ஆண்டு ஒரு கதை இலாகாவை ஏற்படுத்தினேன். அந்த இலாகாவில் ஒரே பெண்மணி, திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள்தான்.
பெண்களிடம் சாதாரணமாக ஒரு மென்மை இருக்கும். அந்த மென்மை இவர்களிடம் இருந்தாலும், கதை என்று வரும்போது ஒரு முரட்டுத்தனமான பிடிவாதம் இவர்களிடம் இருந்தது. சினிமாவில் என்னைப் பொறுத்தவரை Compromise! Compromise! Compromise!
ஆனால் இவர்கள் தன்னுடைய எண்ணத்தில், கற்பனை போக்கில், சிந்தனை ஓட்டத்தில், Compromise! என்ற வார்த்தையையே நெருங்க விட மாட்டார்கள். அந்தக் கொள்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நானும் அதே அணுகுமுறையை 32 வருடங்களுக்கு முன்னமேயே கையாண்டு இருந்தால், வேறு கோணத்தில் ஜொலித்து இருப்பேனோ என்று நினைக்கத் தோன்றியது. எனக்கு ஒரு சந்தேகம்! சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய 'பெண் இயக்குநர்கள்' இயக்கி இருக்கிறார்கள். அதுவும் சொற்ப எண்ணிக்கையில்! அதே போல விரல்விட்டு எண்ணக்கூடிய ‘பெண் கதாசிரியர்கள்' எழுதி இருக்கிறார்கள். அதுவும் சொற்ப எண்ணிக்கையில்தான். துரதிருஷ்டவசமாக அந்த அணுகு முறை தொலக்காட்சித் தொடர்களிலும் தொடர்கிறது.
மணத்தை எடுத்துக் கொண்டு, இலையைத் தூக்கி எறிவது போல, பெண்களிடம் மூலக்கதையை வாங்கிக் கொண்டு அவர்களை ஓரம் கட்டி விடுகிறார்கள்.
அந்த நிலை மாறினால், பத்மினி பட்டாபிராமனைப் போன்றோர் பரிமளிப்பது நிச்சயம். அதற்கு இந்நூலிலுள்ள கதைகளே சாட்சி!
அவர்கள் வாழ, வளர, வளமே பெற என் பிரார்த்தனைகள்.
அன்புடன்,
விசு
பத்மினி பட்டாபிராமன் குறிப்புக்கள்
சென்னை தொலைக்காட்சியில் 14 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி மற்றும் செய்தி அறிவிப்பாளராக ஏராளமான பேட்டிகள், நிகழ்ச்சித் தொகுப்புக்கள் வழங்கியிருக்கிறார். அகில இந்திய வானொலி எஃப். எம்மில் 2 வருடங்கள் செய்திகள் வாசித்திருக்கிறார். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, அமுதசுரபி, குங்குமம், கலைமகள், மஞ்சரி, இலக்கியப் பீடம், லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர், பெண்மணி, சாவி, மங்கை, ராஜம், தாய், தமிழரசி போன்ற பல பத்திரிகைகளில் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், தொடர்ந்து எழுதி வருகிறார்.
மஞ்சரி, ஆன்மீகம் இதழ்களில் இவர் எழுதிய பயணம் மற்றும் கோயில்கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கின்றன.
கல்கியில் 16 பக்க இணைப்பு புத்தகத்தை இரண்டு முறைகள் தயாரித்திருக்கிறார். மங்கையர் மலரிலும் “இணைப்பு” புத்தகங்கள் எழுதி வருகிறார்.
அகில இந்திய வானொலியின் நாடக விழாக்களில் இவர் எழுதிய நாடகங்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒலிபரப்பாகியிருக்கின்றன.
இவரது எழுத்தில், பொதிகை தொலைக்காட்சியில், ஆர்.எம்.கே.வி நிறுவனம் வழங்கிய தொடர் “ரசிகப்ரியா” என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சி. இரண்டு வருடங்கள் ஒளிபரப்பானது.
மங்கையர் மலரில் பல வருடங்களாக மருத்துவம், உடல் நலம்,தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
அமுதசுரபி குறுநாவல் போட்டி, கல்கி குறுநாவல் போட்டி, சுந்தரம் ஃஃபைனான்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு, ஆனந்த விகடன் பொன்விழா கதைப் போட்டி, குமுதம் சிறுகதைப் போட்டி, கல்கி சிறுகதைப் போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தமிழரசி பத்திரிகையில் அமரர் எம்.ஜி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி என பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.“மாமரத்து வீடுகள்” ,திருமதி சிவசங்கரி அவர்களாலும், “புது வெளிச்சம்” திரு. நல்லி குப்புசாமி அவர்களாலும் வெளியிடப்பட்டு பெரும் பாராட்டு பெற்றவை.
கம்ப்யூட்டர் அனிமேஷன் கிராஃபிக்ஸ்மற்றும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பான , “டிஜிட்டல் வாழ்க்கை” புத்தகத்தை, இயக்குனர் திரு.வசந்த் வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 2002 ம் ஆண்டு முதல் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் கற்றுத்தந்தவர். அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார்
இவரது கணவர் பட்டாபிராமன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஏற்றுமதி பிரிவில் உயர் அதிகாரியாக பணி புரிந்துவிட்டு தற்சமயம் பேராசியராக இருக்கிறார்.
Rent Now