Home / eBooks / Madha Sirasetham
Madha Sirasetham eBook Online

Madha Sirasetham (மத சிரசேதம்)

About Madha Sirasetham :

மயிலிறகுக்குள் சுடு நெருப்பு.

மைமகள் சுடுநெருப்பாய்த் தன்னை உருமாற்றிக் கொள்ள எண்ணம் காட்டும் அணுப்பாய்ச்சல் மதச் சிரசேதம்.

தட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு, இறக்கை ஒவ்வொன்றாகப் பிய்த்து துன்புறுத்தி இன்பம் காண்பது போல, மதம் இன்று சிலர் கைகளின் கொடூர விளையாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்தின் குறியீட்டில் நலமானவை பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதன் கண்ட மதங்கள் இன்று மேனி தொலைத்து, மெய் தொலைத்து, சீழ்ப்பிடித்து கலவர பீதிகளின் பக்கங்களாக மாறி நிற்கின்றன. புரட்சி விதைகளை அறநெறியில் சுமந்த மதங்கள் தன் இலக்கைத் தாண்டி குறுக்கு வழிப் புதருக்குள் சிக்கிக் கொண்டன.

வில்லிலிருந்து கிளம்பிய அம்பு, குறி தவறி அப்பாவியின் நெஞ்சைத் துளைத்தது போல, மதத்தின் ஒவ்வொரு அசைவுகளும் விரும்பத்தகாத விரியன் பாம்புகளாக உள்ளன.

நெருப்பு பிளம்பென சூட்டில் மிதந்து கொண்டிருந்த புவிப் பந்து இயற்கையின் ஒவ்வொரு முத்தத்திலும் தன்னைத் தொலைத்து குளிர்ச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

இயற்கைக் காதலியின் முத்தத்தில் குளிர் நிலை அடைந்த புவிக் காதலன் இறையை மிஞ்சிட நிலம் எனும் உருவகம் கண்டான். பெளதீகக் காதலில் நிலம் மனிதன் வாழும் வீடானது.

நிலத்தில் உயிரினங்களின் தோற்றம் மனிதனின் பரிமாணம் போன்றவை விரிவாகச் சொல்ல மதச் சிரச்சேதம் களம் அல்ல. பரிமாணப்பட்டோ, படைக்கப்பட்டோ மனித இனம் மண்ணில் முத்திரையானது. அதுவும் அரச முத்திரை.

மனித இனத்தின் வளர்ச்சிப் பரிமாணத்தில் மதமும், சமுதாயமும் பெரும் ஆளுமையைத் தனதாக்கிக் கொண்டன.

மனிதனின் பயத்தில் தொடங்கிய மதம் இன்று மனிதனுக்கு அச்சமாகவே மாறி நிற்கிறது. பூவிடம் தேனை அருந்தி எழில் நடனம் புரியும் வண்டினம் போல, மனிதனின் நம்பிக்கைத் தேனை உறிஞ்சி எழில் நடனம் போடுகின்ற மதங்கள், அகிலத்தின் மாற்றச் சக்கரத்தில் எழில் என்பதைத் தொலைத்து கொடூரம் என்ற நிலையில் முகம் பதித்து விட்டன. இனி மதச் சிரச்சேதம்தான் புதுமை சிந்தனைக்குள் மதத்தை இழுத்து வரும்.

இறையியல் எனும் தத்துவக் கோட்பாட்டில் அன்பைத்தான் முதன்மைச் சின்னமாக மதங்கள் கொண்டு வந்தன. அன்பு சிவனாகவும், அன்பு நபியாகவும், அன்பு புத்தனாகவும், அன்பு இயேசுவாகவும் காட்டப்பட்டன. காட்டப்பட்ட மெல்லியக் கோடுகள் சிலரின் தன்னலத்தினால் வல்லினக் கோடுகளாக பயங்கரத்தைப் பறைசாற்றும் குருதிக் குறியீடுகளாக மாறின.

அன்பைக் குறித்து மதங்கள் மக்கள் மனதில் பல அடையாளங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. விவிலியத்தில் இயேசுவின் முகம் அன்பின் நீரூற்று என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

கொல்கொதா மலை என்பது தண் டனைகள் வழங்கப்படும் கொலைக்களம். சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாய் இயேசுவைக் கொல்கொதா மலைக்குத் தண்டனை நிறைவேற்ற யூதர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

காவலாளிகள் அடித்துத் துவைத்ததில் இயேசுவின் மேனி எல்லாம் குருதி வெள்ளம். தாகம் வாட்டியெடுக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா? என இயேசுவ் பரிதவிக்கிறார். கருணை என்ன என்று அறியாத காட்டுமிராண்டி மதவாதிகள் எச்சமான கழிவு நீரை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற தத்துவத்தின் படி தன்னைக் கொடூரமாகத் தாக்கியவர்களுக்காக இயேசு பரிதாபப்பட்டார். அன்புதான் உண்மையான மதம் என்பதை இயேசுவின் செயல் காட்டியது. அன்பைப் பரிசாக அளிக்க கிறித்தவம் புதுப் பிறப்பைப் பூண்டது. மனித குலம் நன்னெறி தத்துவத்தில் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என மதத் தோற்றவாளர்கள் முடிவு செய்து பயணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் பயணம் வெற்றியைத் தந்ததா? என வினா எழுப்பினால், மதங்களுக்குள் புதைந்து கிடக்கும் மர்மம் போல, வினாவும் மர்மமாகவே காணாமல் போகும்.

மதங்களின் பெயரில் சிலர் புறத் தோற்றத்தின் கண்ணோட்டத்தில் தங்களை இழந்து, வணிகத்தனங்களை மூளையின் செயல் ஊக்கிகளாக மாற்றிக் கொண்டார்கள்.

மதச் சிரச்சேதம் உண்மையான பாதையை உணர்த்த முயல்கிறது. மதங்களின் முகப் பொலிவை மக்கள் அறிய வேண்டும் என்பதுதான் இச்சூழலில் சொல்லப்படும் கருத்துக்களில் புதைந்து கிடக்கும் உண்மை.

யாரையும் புண்படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். ஆனால், புண்படாமல் மனித மனம் பண்பட முடியாது என்பதையும் நான் அறிவேன். அதனால், உண்மையைச் சொல்லும் போது தவறி யார் மனதாவது காயம் அடைந்தால் மன்னிக்கக் கோரமாட்டேன். எங்கோ அவர்கள் மீதும் தவறுகள் உண்டு என்பதை அந்தக் கணை ஒருவேளை சுட்டிக் காட்டியிருக்கலாம். கமுக்கக் கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகச் சேகரிக்கக் கிளம்பியிருக்கிறேன்.

- ம. சுவீட்லின்

About M. Sweetlin :

எழுத்துலகில் புதிய அறிமுகமாக கால் பதித்து இருக்கும் இவர், மதசிரசேதம் என்ற அற்புதமான நூலின் மூலம் வியப்புக்குறிக்குள் தன் இருப்பை பதிவு செய்து கொண்டுள்ளார். கிறித்தவ மதத்தின் உண்மை கோட்பாடுகளை துணிந்து இன்னொரு களமாக படைத்துள்ளார்.

இவர் கைத்தடி பதிப்பகத்தின் முதன்மை பதிப்பாளராக இருக்கிறார். இவர் எழுதிய நீ புனிதானனால் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது .பெண்ணிய கோட்பாடுகளின் மீது தனி கவனம் செலுத்தும் இவருக்கு வலம்புரி ஜான் விருது கிடைத்து உள்ளது. மதசிரசேதம் ஒரு கருத்தியலின் திசை அம்பு.... உங்கள் விழிகளுக்கு அவரின் எழுத்துக்கள் பூத்தூவி, அணுவை பிரசவிக்கும்.

Rent Now
Write A Review

Same Author Books