Home / eBooks / Magaperu Magathuvam
Magaperu Magathuvam eBook Online

Magaperu Magathuvam (மகப்பேறு மகத்துவம்)

About Magaperu Magathuvam :

1979-ம் வருடம், டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கருவுற்ற காலத்திலிருந்து கைகளில் அவளை ஏந்திக் கொள்ளும் வரை எனக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது? என் குழந்தை ஆணா? பெண்ணா? அது எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது? சிறப்பு உணவு வகைகளோ, முன்னெச்சரிக்கை மருந்து மாத்திரைகளோ சாப்பிட வேண்டுமா? அந்தந்த மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி முறைப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறதா? இப்படி எத்தனையோ கேள்விகளைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை... சிந்திக்க வேண்டும் என்று சுயமான அறிவும் இல்லை. சொந்த பந்தங்களும் அறிவுறுத்தவில்லை. மெல்ல நட என்றார்கள்; பளு தூக்காதே என்றார்கள். நன்றாகச் சாப்பிடு என்றார்கள். சுகப் பிரசவத்தில் நல்லபடியாகக் குழந்தை பிறக்கும் என்றார்கள். நானும் அவற்றையே, அவற்றை மட்டுமே செய்தேன்.

2005ம் வருடம்.

என் பெண்ணின் முதல் பிரசவத்திற்காக அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டேன். அவளுடைய ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் போய்ச் சேர்ந்தேன். ''உனக்கே ஒன்றும் தெரியாது. நீ போய் அமெரிக்காவில் என்ன பிரசவம் பார்த்து கிழிக்கப் போகிறாய்?'' என்று கேலி பேசினார்கள்.

காலங்கள்தான் எப்படி மாறிவிட்டன? இன்றைய இளம் பெண்கள், ஆண்கள், தம்பதிகள்... கர்ப்பம், பிரசவம், பிள்ளை வளர்ப்பு பற்றி உலகளாவிய விவரங்களைத் தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்!

கர்ப்பம், பிரசவம், பிள்ளை வளர்ப்புக்கான விஞ்ஞானப் பூர்வமான வகுப்புக்கள் அனைத்து பிரபல மருத்துவமனைகளாலும் நடத்தப்படுகின்றன. கணவனும், மனைவியுமாக, கர்ப்பம் தரித்தவுடனேயே அதி அக்கறையாக வகுப்புக்களில் சேர்ந்து அனைத்தும் வெளிப்படையாக, விளக்க வீடியோக்களுடனும், செயற்கை உருவங்களுடனும் கற்றுக் கொள்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை மருந்துகள், வைட்டமின்கள், தடுப்பூசிகள், மருத்துவமனைத் தேர்வுகள், மருத்துவர்களின் தேர்வு, பிரசவிக்க விருப்பப்படும் முறைகள், குழந்தை பிறந்த பின் குழந் தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது, பவுடர் பால் கொடுப்பது, திட - திரவ உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது, தேவையான தடுப்பூசிகள், குழந்தை பாதுகாப்பு, அதற்கான சட்ட திட்டங்கள், உரிமைகள் என்று அனைத்தும் 'Parenting' வகுப்புகளில் அக்கு வேறு ஆணி வேறாகக் கற்றுத் தரப்பட்டு விடுகின்றன. நான் ஆச்சர்யத்தில் மூழ்கித் தான் போனேன். என் பெண் உள்பட...

எதற்கும் பதட்டமடையவில்லை!

வேண்டாத ஆர்ப்பாட்டங்கள் செய்யவில்லை!

மருத்துவமனைகள் அற்புதம் என்றால் மருத்துவர்களும், உதவியாளர்களும் அதைவிட அற்புதம். சிரித்த முகங்களுடன், உல்லாசமாய், பிரசவம்

பார்த்தார்கள். அலங்கோலங்கள் இல்லை! அருவெறுப்புக்கள் இல்லை!

2010ம் ஆண்டு

என் பெண்ணின் இரண்டாவது பிரசவம்! மீண்டும் அமெரிக்கா!

வயிற்றில் ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற பரபரப்பு, பதட்டம் எதுவுமில்லாமல்... அனைத்து வேலைகளையும் அநாயாசமாகச் செய்து கொண்டிருந்தாள் பெண். போதாக் குறைக்கு ஐந்து வயது முதல் குழந்தையின் பொறுப்பும் இப்போது!

அந்தக் குழந்தைக்கே ஏறக்குறைய எல்லா விஷயங்களும் விளக்கப்பட்டிருந்தன. அம்மாவின் தொப்பைக்குள் இருக்கும் பாப்பா எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கும் என்று விவரமாக ஐந்து வயதுக் குழந்தை பேசுவதைக் கேட்க வியப்பாக இருந்தது.

இவையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கருவுறுதல், கர்ப்பம் சுமத்தல், குழந்தை பெறுதல், குழந்தை வளர்த்தல் எல்லாவற்றையும் ஏகப்பட்ட உறவினர்கள் உடன் இருந்தும், அல்லது கூப்பிடு தூரத்தில் இருந்தும் கைதட்டினால் பிரசவத்திற்கு இலவசம் என்று அறிவித்துக் கொண்டும் ஆட்டோக்களும், இதர வசதிகளும் இருக்கின்ற சூழ்நிலையிலேயே குழந்தைப் பெறுதலைப் 'பெரும் பாக்கியம்' என்று உணராமல், 'பெரும் பாரம்' என்று கருதிக் கொண்டும், அப்படியே கருத்தரித்து விட்டாலும்.. பத்து மாத காலமும் ஏதோ நோயாளியைப் போல் நகர்த்தி விடாமல், தனக்குள் தன் குழந்தை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஆனந்தமாய் அனுபவித்துக் கொண்டு, ஆரோக்கியமான குழந்தையை ரம்யமான சூழலில், அமைதியான மனநிலையில் இங்கிருக்கும் பெண்களும் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்தப் புத்தகத்தில் நான் பல்வேறு மருத்துவ புத்தகங்கள், மருத்துவக் கையேடுகள், கருவளர்ச்சி, பிரசவத்தின் நிலைகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான தேவைகள் சம்பந்தப்பட்ட செய்திகளை பல்வேறு மின்வலைப் பக்கங்களிலிருந்து படித்தும் தொகுத்து, நிறைவாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.

துல்லியமற்ற விஷயங்கள் இடம் பெற்றிருந்தால். அதற்கான மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்... நான் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவள் அல்ல. டாக்டர்... ஆஃப் பிலாஸபிதான்! படியுங்கள்! படித்துப் பயன்பெறுங்கள்!

About Dr. Shyama Swaminathan :

சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.

Rent Now
Write A Review

Same Author Books