Home / eBooks / Mallikavin Veedu
Mallikavin Veedu eBook Online

Mallikavin Veedu (மல்லிகாவின் வீடு)

About Mallikavin Veedu :

குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்களுக்கான சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் நான் இயங்கினாலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது, என் மனதுக்குள் விவரிக்க இயலாத மகிழ்ச்சி நிலவுகிறது. காரணம், இதைப் படிக்கும் குழந்தைகள் நிச்சயம் இந்தக் கதைகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி நடக்க முற்படுவார்கள் அல்லது தங்களின் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்குவார்கள் என்பதுதான்!

அழ. வள்ளியப்பா, டாக்டர் பூவண்ணன், செல்ல கணபதி, ரேவதி, இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கிருங்கை சேதுபதி உள்ளிட்ட சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் பலரும், புதுப்புது உத்திகள், புதிய கதைக் களங்களுடன், தரமான கதைகள் பலவற்றைத் தந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரின் நோக்கமும் நிச்சயம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். விசித்திர மாயாவி, பறக்கும் பாய், பேசும் விலங்குகள் என்று நடக்காத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனையால் நடத்திக் காட்டும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலரின் கதைகளை நாம் படித்திருப்போம்.

அவையெல்லாம் நமக்குள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியதை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டோம். இன்றைய சூழ்நிலையில் மாயாவிக் கதைகளைவிட மரம் நடுவதன் அவசியம் பற்றிய கதைகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கதைகளையும், நல்லொழுக்கக் கதைகளையும், நவீனத் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை உணர்த்தும் கதைகளையும் சிறுவர்கள் மனத்தில் பதியும்படி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம். கதை சொல்லும் பாட்டிகளும், கதை சொல்லிகளும் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், சிறந்த கதைகள் மூலம் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை குழந்தைகள் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப் பட்டவை. இதில் உலாவரும் கதாபாத்திரங்களில் பலர், ரத்தமும், சதையுமாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கதைக் களங்களும், அதை மெருகேற்ற நான் கையாண்ட உத்தியும் மட்டுமே கற்பனை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் வகையில் வடிவமைத்திருக்கிறேன். கதை படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்காக அமையாமல், பொது அறிவை வளர்த்துக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். கதைகள் மூலம் பசுமையை விதைக்க நான் முற்பட்டிருக்கிறேன். தூய்மை பாரதத்தை உருவாக்க விளைந்திருக்கிறேன். சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இதைப் படிக்கும் குழந்தைகளின் சிந்தனையில் நாட்டுப்பற்று, சமூகச் சிந்தனை, வறியோருக்கு உதவும் குணம், சக மனிதர்களை நேசிக்கும் பண்பு வளர வேண்டும் என்பதே என் விருப்பம். இவை நிச்சயம் குழந்தைகள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

இந்தப் புத்தகத்துக்கு அழகானதொரு அணிந்துரையை அளித்திருக்கும் எழுத்தாளர் கிருங்கை சேதுபதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கதைகளுக்கேற்ப, பொருத்தமான, அழகிய ஓவியங்களை வரைந்து தந்திருக்கும் ஓவியர் செந்தமிழ்ச்செல்வனுக்குப் பாராட்டுகள்.

மிக்க அன்புடன்,
ஜி. மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books