Home / eBooks / Manam Enum Vanam
Manam Enum Vanam eBook Online

Manam Enum Vanam (மனம் எனும் வனம்)

About Manam Enum Vanam :

ஊசிகள் செய்ய அல்ல, ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான் என்று என் சிறுகதைகள் குறித்ததொரு பிரகடனத்தை முன்னர் வெளியிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை சிறுகதைகளில் நுட்பத்தைவிட அது ஏற்படுத்தும் தாக்கம் முக்கியம்

கவிதைகளைப் பொறுத்தவரை என் நிலை இதற்கு நேர் எதிரானது. அவை ஈட்டிகள் அல்ல. மலைப் பள்ளத்தாக்கில் உதிர்ந்து, காற்றில் சுழன்று இறங்கும் மலர் இதழ் எழுப்பும் ஒலி. அந்த மெல்லிய சப்தம் உங்கள் காதுகளை எட்டாமலே போகலாம். ஆனாலும் அவை என் அகமொழி.

கவிதை இதற்கு நேரதிர் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அரசியல் மேடைகளின் அலங்காரத்தையும், உரத்த குரலையும் அது வரித்துக் கொண்டிருந்தது. எழு,விழி, கொடு,பறி, மறு, எரி,சுடு என அது ஆணைகள் இட்டுக் கொண்டிருந்தது.காதல் கவிதைகள் கூட இரைச்சலாக இருந்தன. மலரின் மெல்லிது காமம் என்பதை ஒலிபெருக்கி வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாப்பிலக்கணத்தைப் பின்பற்றி எழுதப்படுவதாகச் சொல்லிக் கொண்டாலும், வடிவச் சிறப்பின் காரணமாக இல்லாமல், மொழியின் செழுமை காரணமாக அவை இயங்கின.

நான் இவை இரண்டிலிருந்தும் விடுதலை பெற விரும்பினேன். அதற்கு நானறிந்த வழி இதன் நேர் எதிர் திசையில் பயணிப்பதுதான்.

சிறுகதைகள் தமிழின் எல்லைகளை விரிவுபடுத்தின. ஆனால் கவிதைகள் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. சங்கம் தொட்டு, சமகாலம் வரை பொங்கிப் பெருகும் அந்த ஜீவ நதியிலிருந்து ஒரு கை அள்ளிப் பருகிய எவரும் இதற்குச் சான்றளிக்க முடியும்.

இந்தப் பெருமிதமும், செழுமையும் தந்த கவிமனம்தான் என்னைக் கவிதைகள் எழுத உந்தின. ஐரோப்பிய-அமெரிக்க இலக்கிய வாசிப்பின் தாக்கத்தால் இங்கே புதுக்கவிதை இயக்கமாக வேகம் கொண்ட 'எழுத்து' இதழில் என் கவிதைப் பயணம் தொடங்கிய போதும், ஐரோப்பியக் கோட்பாடுகளால் அல்ல, தமிழ்க் கவிதை மரபால் வசீகரிக்கப்பட்டே நான் என் கவிதைகளை எழுதுகிறேன். அவற்றில் பின் நவீனத்துவ இருண்மைகளைக் காண இயலாது. மரபின் ஒளிப்புள்ளிகள் தென்படுமேயானால் அது இயல்பானது.

என் அகமொழியை வாசிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? இதோ இந்த முன்னிரவில், என் ஜன்னலுக்கு வெளியே பொலிந்து கொண்டிருக்கும் நிலவு, உங்கள் வீட்டு முற்றத்தில், ஜன்னலில், தோட்டத்தில், பால்கனியில், வீதியில்,மொட்டைமாடியில் ஒளியூட்டிக் கொண்டிருக்கக் கூடும். இடமல்ல, நிலவுதான் முக்கியம். கவிதைகள் அல்ல, கவிமனம்தான் முக்கியம்.

கிழிந்த கூரையின் வழியே நிலவை ரசிக்கும் பாஷோவின் கவி மனம் நமக்கும் வாய்த்துவிட்டால் அதைவிட ஆனந்தம் வேறேது?

மாலன்

About Maalan :

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாதசுந்தரம் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள்/ விமர்சகர்களாலும், பிரபஞ்சன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம் போன்ற சமகால எழுத்தாளர்களாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற அடுத்த தலைமுறையினராலும் ஒரு சேரப் பாராட்டப்படும் மாலன் (நாராயணன்) இலக்கிய உலகிலும் இதழியல் உலகிலும் நன்கறியப்பட்டவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பட்டப்படிப்பும், அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

20 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில பரிசுகள் வென்றிருக்கின்றன. சமகால இலக்கியம் குறித்த வகுப்பறைகளில் இவரது படைப்புக்கள் விவாதிக்கப்படுகின்றன. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு 1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் என்ற பரிசளித்து பாராட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இவரது படைப்புலகம் பற்றிய ஒருநாள் கருத்தரங்கை நிகழ்த்தியது.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளிலும் பிரன்ச், சீனம், மலாய் ஆகிய உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதை ஒன்றை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா குறும்படமாகத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எமர்ஜென்சிக் காலத்தை விமர்சிக்கும் இவரது கவிதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள டஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி பதிப்பித்த ‘அவசரநிலைக்காலக் குரல்கள்'(Voices of Emergency- an anthology of protest poetry) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது வேறு சில கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில், சாகித்ய அகாதெமி இலக்கிய இதழான Indian Literature இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களின் எழுத்துக்களை ‘புலம் பெயர் இலக்கியம்’ என 1994ஆம் ஆண்டே வகைப்படுத்தி தினமணிக் கதிரில் அதற்கென சிறப்பிதழ் வெளியிட்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அதனைத் தொடர்ந்து அதனைக் குறித்துப் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புரை ஆற்றியவர். 2011ல் சிங்கப்பூரிலும் 2014ல் கோயம்புத்தூரிலும் இந்தப் பொருள் குறித்த சர்வதேச மாநாடுகளை நட்த்துவதில் முக்கியப் பங்களித்தவர். 2015 ஆம ஆண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளார்களின் படைப்புக்களைத் தேர்ந்து தொகுத்து சாகித்ய அகாதெமி மூலம் நூலாக வெளியிட்டவர் சிங்கப்பூர் அரசு அளிக்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, தங்க முனைப் பேனா விருது, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளிக்கும் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் விருது போன்ற சர்வதேச விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராகப் பணியாற்றியவர்.

சிங்கப்பூரின் எழுத்தாளர் வாரம், மலேசியாவில் நடை பெற்ற இந்திய விழா, சாகித்ய அகாதெமியின் எழுத்துக்களின் திருவிழா போன்ற பல சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டவர். இலக்கியத்தை வளர்த்தெடுக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சாகித்ய அகாதெமி அமைப்பில் தமிழ் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கிறார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழக ஆளுநரால் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.

தமிழகத்தின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே, தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சன் செய்திக் குழுமத்தின் செய்திப் பிரிவுத் தலைவராக இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை வழிநடத்தியதன் காரணாமாக தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அண்மைக்காலம் வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநராக கடமை ஆற்றியவர்.

யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழான திசைகள் மின்னிதழை நிறுவியவர். இப்போது அது மின்பதிப்பு, மின் சொல், மின் செய்தி மின் ஆவணங்கள் ஆகியவை கொண்ட ஓர் மின் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.

Rent Now
Write A Review