செழிப்போடும் செல்வாக்கோடும் வளர்ந்தவள்தான் நம் கதாநாயகி. திடீரென்று அவள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு உயிரிழப்பால் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானாள்.
யாரை வெறுத்தாளோ அவனே அவளுக்கு பலவிதத்திலும் உதவிகள் செய்தான். அவன்தான் நம் கதையின் கதாநாயகன். அவனின் அருகாமை அவள் இழந்த நிம்மதியை திரும்பவும் பெற்றுத்தந்தது. அதை புரிந்துகொண்டு நேசிக்க தொடங்கியது அவளின் மனம்.
ஆனால் அடுத்தடுத்து அவன் செய்த செயல்களால் அவளே அவனை அடியோடு வெறுக்கவும் தொடங்கினாள். அவளின் அந்த வெறுப்பு தான் அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.
இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. முழு நாவலையும் படித்துவிட்டு பதிவிடுங்கள் அன்பு உள்ளங்களே!!!
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.
தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்
பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வாசிப்பை நேசிப்போம்.
அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..