பெங்களூருவில் ஸாப்ட்வேர் எஞ்சினீயராக இருக்கும் இளைஞன், தன் பாட்டியக் காண கிராமத்திற்குச் செல்கிறான். மரணப் படுக்கையில் இருந்த பாட்டி, படிக்காத கிராமத்துப் பெண்ணான அவனது முறைப் பெண்ணின் கைகளைப் பற்றி அவன் கையோடு இணைத்து வைத்து விட்டு மரணிக்கிறாள். கிராமத்து உறவுக்காரர்கள் அந்த ஜோடிகளுக்கு திருமணம் முடித்தே ஆக வேண்டும் எனத் தீவிரம் காட்டுகிறார்கள்.
இந்தப் பிரச்சினையை அவன் பெங்களூரிலுள்ள தன் காதலிக்குத் தெரிவிக்க, அவள் சக நண்பர்களோடு கிராமத்திற்கு வருகிறாள்.
பல பிரச்சினைகளைச் சந்தித்து, இறுதியில் அவர்கள் இருவரும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதைக் கூறும் கதை.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் விதத்தில் கதையோட்டம் முழு வேகத்தோடு செல்வது, நிச்சயம் வாசகர்களைக் கவரும்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now