'மந்திர புஷ்பம்' அதே சேலம் மாவட்ட கிராமங்களையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும், முற்றிலும் வேறான சூழ் நிலை ஒன்றை நம் கண் முன் விரிய வைக்கிறது.
சித்த சுவாதீனமில்லாத நர்மதாவுக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்கிறான் காசி. அவனுக்கு வித்தை ஏதும் சொல்லித் தராமல், தன் வீட்டு வேலைக்காரன் போலாக்கிவிட்டு உயிர் துறக்கிறார் சேஷாத்ரி இருந்தாலும் மன்த்தை நெருடவைக்கும்- நெகிழ வைக்கும் பாத்திரமாக இருக்கிறார் இவர்.
வைதீக வாழ்வு எவ்வளவு பின்னடைந்து போயுள்ளது என்னும் ஆதங்கத்தை இந்தக் கதையில் மகரிஷி துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
உற்றுழி உதவவேண்டிய உறவுகள் எப்படி அவசியமான தருணங்களில் உதறி ஒதுங்குகின்றன என்பது உருக்கமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்தக் கதையில்.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Rent Now