கற்பனை என்பது நிஜத்தின் நிழல். எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த நிஜத்தின் சாயல் எங்கோ ஓர் இடத்தில் தென்படும். சுய அனுபவம் அல்லது எப்போதோ படித்த பத்திரிகைச் செய்தியும் கற்பனைக்கு வித்தாவதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடந்ததாகச் சொல்லப்பட்ட சம்பவத்தின் சுருக்கம் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தது. 'சாந்திபால்சர்மா' என்ற மருந்து வியாபாரி அவருடைய அலுவலகத்தில் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஒரு குழந்தை இதைப் பற்றிப் பேசத் துவங்கியது. தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து சாந்திபால் சர்மாவின் மனைவியை அடையாளம் காட்டியதுடன், தான்தான் சாந்திபால் என்றும், தான் சுடப்பட்ட இடம், நேரம் ஆகியவற்றை சரியாகச் சொன்னது, தன் தம்பிதான் தன்னைச் சுட்டுக் கொன்றான் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது.
குற்றவாளி பிடிபட்டுத் தண்டிக்கப்பட்டதும், குழந்தை பழைய நினைவுகளை மறந்துவிட்டது! ‘Truth is Stranger than Fiction' என்றுதான் எனக்குத் தோன்றியது அதைப் படித்தபொழுது, அவ்வளவுதான். என் கதாநாயகன் காற்றாய் வரக் காரணம் கிடைத்து விட்டது.
இந்தக் கதையைப் படித்த பிறகு 'இப்படியும் நடக்குமா?' என்கிற கேள்வி எழுமானால் அதற்கான பதில் இங்கே உள்ளது. இந்தப் புதினத்தை வெளியிட முன்வந்துள்ள ஆனந்தாயீ எண்டர்பிரைசுக்கு என் நன்றி.
இங்ஙனம்,
லக்ஷ்மி ரமணன்
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Rent Now