Home / eBooks / Maya Maan
Maya Maan eBook Online

Maya Maan (மாயமான்)

About Maya Maan :

விரும்பிச் செய்யும் விருந்தோம்பற்பண்பும், விரிவான பயணப் பட்டறிவுகளையும் கொண்டவர் திருமதி லக்ஷ்மி ரமணன், தன் அன்புக் கணவரின் அலுவல் பணி காரணமாகப் பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் காணும் வாய்ப்புப் பெற்றவர். அமைதி மிக்கவராயினும் எதையும் எவரையும் ஆழ்ந்து உணர்ந்து பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். உள்ளார்ந்த உணர்வுகளையும், உலகளாவிய அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் பக்குவம் கொண்டவர். மனித நேயமும் குறிப்பாக மகளிர் நேயமும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகள் நம்மை அவரது எழுத்துக்களுடன் இரண்டறக் கலந்துவிடச் செய்து விடுகின்றன.

இயல்பும் எளிமையும் இவரது எழுத்துக்களின் தனித் தன்மைகள். கதை மாந்தர்களை அப்படியே கற்பார் கண்முன் நிறுத்தும் திறம் கொண்டவை. கதை மாந்தர்களுடன் நம்மையும் சேர்த்து உலவவிடுதலும் உரையாட விடுதலும் இவரது தனித்திறம். கதைப் போக்கினை உரைக்கும் முறையிலும், உணர்த்தும் வகையிலும் இடையிடையே அமைந்திருக்கும் உரையாடல் உத்திகள் சிறிதும் செயற்கைத்தன்மை இல்லாதவை. நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தந்த இவரது படைப்புத் திறனுக்கும், ஆர்வத்திற்குமான இன்னொரு அழகிய அடையாளம் "மாயமான்."

"மாயமான்" உலகியல் சார்ந்த உண்மைகளை இயல்பாக எடுத்துரைக்கிறது. எதையும் - எவரையும் உற்றுப் பார்ப்பதும் உணர்ந்து பார்ப்பதும் ஒரு படைப்பாளரிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்புகள். தன் அமைதியான அணுகுமுறைகளால் திருமதி லக்ஷ்மி ரமணன் இவ்விரு தகுதிகளுடன் பதிவு செய்து பாராட்டுக்குரியவராகிறார். இவரது எழுத்துக்களில் வெற்று ஆரவாரங்களில்லை. வீணான - வேண்டாத வெளிப்பூச்சுகள் இல்லை. போலிப் புனைவுகளும், பொருந்தாத போக்குகளும் இல்லை. சுற்றி வளைத்துச் சொல்லி, சோர்வு தட்டும் போக்கும் இல்லை.

"வாழ்க்கை என்பது பிடிக்குள் அகப்படாமல் நழுவும் பாதரசத் துளியைப் போன்றது. சில சமயம் நாம் நினைக்கிறபடி வாழ்க்கை அமையாதது இருக்கட்டும். பல விசித்திரத் திருப்பங்கள் ஏற்பட்டுத் திசைமாறிப் போகிறது" என அமையும் சிந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. நடைமுறை வாழ்க்கையின் நலன்களையும் நளினங்களையும் எளிய சொற்களால் எடுத்துக் காட்டியிருக்கும் - எழுதிக் காட்டியிருக்கும் திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகள் தன்னிறைவு தரும் தரமான படைப்புகள் என்பதில் ஐயமில்லை.

பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் களமாகவும், இலக்கிய ஆர்வலர்களின் ஆறுதல் களமாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றன; இனிக்கின்றன. தோழமையுணர்வும் தொண்டுணர்வும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகளால் இவர் சிறக்கவும், இவரால் இவரது படைப்புகள் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,
நா. ஜெயப்பிரகாஷ்

About Lakshmi Ramanan :

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books