Home / eBooks / Meengal Urangum Kulam
Meengal Urangum Kulam eBook Online

Meengal Urangum Kulam (மீன்கள் உறங்கும் குளம்)

About Meengal Urangum Kulam :

'சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை' என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதைகளுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. 'எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு' என்கிற கவிதையில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், 'நெரிசல் மிகுந்த சாலையில்/ ஊர்வலம் போகிறது வீடு/ முகவரி மாற்றம்' என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா!

- இந்து தமிழ்

கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி “ஹைக்கூ'வுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை; அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில், பிருந்தா சாரதி எழுதிய இந்த ‘ஹைக்கூ' கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன."

"மணல் வீடு கட்டி/விளையாடுகிறது/அகதியின் குழந்தை”, “இரு நாட்டுக் கொடிகளையும்/ஒரே மாதிரி அசைக்கிறது/ எல்லையில் வீசும் காற்று” என்பன போன்ற சுவையான கவிதைகள்.

- தினத்தந்தி

தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடான 'மீன்கள் உறங்கும் குளம்' பிருந்தா சாரதியின் ஹைகூ கவிதை களின் தொகுப்பாகும். 'மீன்கள் உறங்கும் குளம்' அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பரிசு, தமிழ் நாடு அறிவியல் இயக்கப் பரிசு, கவிதை உறவு பரிசு எனப் பல பரிசுகளைப் பெற்றது. எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பழனி பாரதி ஆகியோரின் அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. இயற்கை நேசம் , காட்சிப் படிமம் வழியே பிரபஞ்ச உணர்வு பெறுதல், எளிமை ஆகிய ஹைகூ இலக்கணங்களை இயல்பாகப் பெற்றிருக்கும் இந்நூல் தமிழ் ஹைகூ நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.

About Brinda Sarathi :

பிருந்தா சாரதி எனும் புனைப்பெயரில் எழுதிவரும் நா.சுப்பிரமணியன் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் சுப.நாராயணன், ருக்மணி. மதுரை மாட்டம் மேலூர் அருகேயுள்ள சண்முகநாதபுரம் கிராமம் இவரது பூர்வீகம்.

கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இயற்பியல் இளம் அறிவியல் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும் பெற்றவர். கம்பன் கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதல் பரிசு பெற்றவர்.

'கல்கி' பொன்விழா கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர். 1992ஆம் ஆண்டு இவரது முதல் கவிதை நூலான 'நடைவண்டி வெளியானது.

நடிகர் நாசர் இயக்கிய 'அவதாரம்', 'தேவதை', இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்' ஆகிய படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். கவிஞர் வைரமுத்து இயக்கிய 'கவிதை பாருங்கள்' என்ற கவிதைகளைக் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடரில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

2003ஆம் ஆண்டு 'தித்திக்குதே' என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், இயக்குநர் என்.லிங்குசாமியின் 'ஆனந்தம்', 'பையா', 'வேட்டை', 'அஞ்சான்' முதலிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டு வெளியிட்ட 'TAMIL POETRY TODAY' எனும் புதுக்கவிதை தொகை நூலில் இவரது 'ஊமை' என்ற கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இவரது ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' கவிதைத் தொகுதி 2016ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதைப் பெற்றது. அவரது மற்ற கவிதை நூல்கள் 'பறவையின் நிழல்', 'எண்ணும் எழுத்தும்' மற்றும் ''இருளும் ஒளியும்'.

Rent Now
Write A Review

Same Author Books