Home / eBooks / Meenottam
Meenottam eBook Online

Meenottam (மீனோட்டம்)

About Meenottam :

மீன்கள் நதிகளில் ஓடுகின்றன.

நதிகள் கடலுக்கு ஓடுகின்றன.

கடல்கள்—பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே!

யுகக்கணக்கில் இதுவரை ஓடிய மீன்கள் எத்தனையோ?

பறவைகளுக்கு, சிறு மீன் பெருமீனுக்கு, தூண்டிலுக்கு, வலைக்கு. மனிதனுக்கு இரையாகியும், இயற்கையாகவும் மாண்டவை எத்தனையோ? கற்பனைக்கு அடங்கா. எண்ணுவதே வெட்டி வேலை, விடு.

அவைகள் ஓடிய ஜலம் நதிகளிலும் கடல்களிலும் எவ்வளவோ புரண்டு மாறியாச்சு.

ஆனால் மீன்கள் இன்னமும் ஓடிக்கொண்டு தானிருக்கின்றன.

ஜலம், நதியிலும் கடலிலும் பாய்ந்துகொண்டு தானிருக்கிறது.

ஓயாத இந்த உயிரோட்டத்துக்கு சமீபகாலமாய் நம்முரண்கள் யாவுக்கும் ஒரே சமாதானமாய் நடமாடிக் கொண்டிருக்கிறதே ஒரு வியாக்யானம்—generation gap அதற்குக் கிடையாது.

இந்தப்பக்கங்களில், எங்கேனும் மீன் உன்னைக் கடித்தால் கவ்வினால்—நான் உன்னைத் தொட்டு விட்டேன். குருடன் சிற்பத்தைத் தடவித் தெரிந்து கொள்வதுபோல், உன்னை அடையாளம் கண்டு கொள்கிறேன். நினைப்பதே என்னை என்னவோ பண்ணுகிறது.

இப்படித்தான்—அன்று, கூடத்தில் நின்றபடி ஏதோ வேலையாயிருந்தேன். திடீரென, அறையிலிருந்து கிட்டப்பாவின் குரல் புறப்பட்டது.

'எட்டாப் பழமடியோ—ஓஓஓ"

அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி, பூமியையே பட்டை உரித்துக்கொண்டு, அபட்டு பாணம் நாதபிந்துக்களை உதிர்த்துக்கொண்டு, வான்மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.

என்னுள் ஏதோ பாம்புக்குத் தூக்கம் கலைந்தது. சீறல் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து புறப்பட்டு, 'கர்ர்ர்'ரென்று உச்சி மண்டைக்கு ஏறிற்று. கை கால் பரபரக்கின்றன. உடல், இல்லை, பூமி கிடு கிடு

நல்லவேளை, சேகர் பக்கத்திலிருந்தான். என் நிலை கண்டு என்னைப் பிடித்துக் கொண்டான். என்னை மெதுவாய் நடத்திச்சென்று, ரேடியோ பக்கத்தில், சாய்வு நாற்காலியில் உட்கார்த்தினான். என் தலை சாய்ந்தது. இமைகள் மூடிக் கொண்டன.

"எட்டாப் பழமடியோ தெவிட்டாத தேனடியோ

மட்டிலா ஆனந்தமே கிளியே

மால் மருகன் தந்தசுகம்"

இப்படியே, இப்பவே சாவு கிட்டிவிட்டால்

இதைவிட சுகம் உண்டோ? அம்மாடி!

"கட்டுக்குழி படர்ந்த......"

என் அடிவயிறைச் சுருட்டிக் கொண்டு

நடுவிலேயே நறுக்குத் தெறித்து

அப்படியே நிற்கும் ஒரு பிர்க்கா

அந்தரத்தில் வளைத்த நட்சத்ரவில்.

"கருமுகில் காட்டுக்குள்ளே

"விட்டுப்பிரிந்தானடி கிளியே

வேதனைதான் பொறுக்குதில்லை"

கூடத்தில் கண்ணன் சேகரிடம் கிசுகிசுப்பது காது கேட்கிறது.

"என்னடா அப்பா ஒரு மாதிரியாயிருக்கா? மூஞ்சி வெளிறிட்டிருக்கு, அழறா! என்ன உடம்பு?"

சேகர் குரல்: (அதில் சற்று அலுப்பு தொனிக்கிறதோ?) "என்ன, as usual தான். அன்னிக்கு 'ஜனனி நினுவினா' இன்னிக்கு இன்னொண்ணு. நமக்கு "மாஞ்சோலைக்கிளிதானோ, மான்தானோ" போச்சு.

அவர்கள் தாய், அரிவாமணையில் பச்சை மிளகாயைத் 'தறுக் தறுக்'கென்று நறுக்கிக்கொண்டே வயஸாச்சு உடம்புக்காகல்லேன்னா அந்தப் பாட்டெல்லாம் கேட்கப்படாது, குழந்தைகள் வழி ரேடியோவை விட்டுடனும்"

இதுதானே generation gap?

நண்ப, நாம் சந்தித்து ரொம்ப நாளாச்சு.

About La. Sa. Ramamirtham :

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Rent Now
Write A Review

Same Author Books