Home / eBooks / Melidangal
Melidangal eBook Online

Melidangal (மேலிடங்கள்)

About Melidangal :

நாவல் எழுதுவதை விட, சிறுகதை எழுதுவது கடினம். ஒரு சிறு சம்பவம், அதில் ஒரு சிறிய கருத்து, அதனால் பிறக்கும் உணர்ச்சி இவையெல்லாம் சிறுகதை என்ற சிறிய வடிவத்தில் அடங்கியிருப்பதோடு, சொல்லும் உத்தி, மொழியின் வேகம் இரண்டினாலும் அழகு பெறுகிறது. ஒரு சிறுகதையில் வரும் பாத்திரம் நம்மோடு உறவாட வேண்டும். அந்தப் பாத்திரத்தின் உணர்ச்சிகள், எண்ணங்கள் நம்முடைய உணர்ச்சிகளாகவும், நம்முடைய எண்ணங்களாகவும் தோன்ற வேண்டும்.

கதாநாயகன், கதாநாயகி, வீரம், காதல், புறம், அகம்... இவை எதுவும் இல்லாமல் ஒரு சம்பவம் நம் நெஞ்சைத் தொடுமானால் அதுதான் சிறந்த சிறுகதை. சுப்ர.பாலனின் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நமது நெஞ்சைக் கனியச் செய்கிறார்கள். அல்லது கவலைப்பட வைக்கிறார்கள். மனம் நெகிழச் செய்கிறார்கள். சிரிக்கவும் வைக்கிறார்கள்.

கனகாம்பரத்தின் நிறத்தையும் அழகையும் அனுபவிக்கும் ஆசிரியர், சரயூ பூப்பறிப்பதை நம் கண்முன் நிறுத்துகிறார். கல்யாணப் பருவத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிற மகளின் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற அந்தத் தந்தையின் தாபம், தாயாருடைய யதார்த்தமான நம்பிக்கை, பால்ய நண்பர் தன் மகனுடன் வரும்போது துளிர்விடும் கற்பனைகள் - இவையெல்லாம் தினசரி நாம் பார்த்துப் பழகுகிற மக்களை எதிரே நிறுத்துகின்றன. சரயூவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்றா இல்லையா என்று நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

முன் நெற்றியில் ஒரு காயம், மழை விழும் நேரம் என்ற இரண்டு கதைகளும் முழுவதுமே கற்பனையானாலும் நம்மைத் திடுக்கிடச் செய்கின்றன. தான் வசிக்கும் இந்தச் சிறிய உலக உருண்டைக்கு மனிதன் செய்யும் அபசாரம் எங்கு போய் முடியலாம் என்று ஆசிரியர் கற்பனையில் காண்கிறார். நமது பேரக் குழந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் வாழப் போகும் இந்த உலகத்தை இந்த நூற்றாண்டில் ரொம்பவும் மாசுபடுத்தி விட்டோம் என்பதையும் அதன் விளைவு என்ன ஆகலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். கற்பனை சிறகடித்துக் கொண்டு பறந்தாலும் பயமாக இருக்கிறது.

தன்னுடைய அவல வாழ்க்கை இன்னதென்றே உணராமல் வளையவரும் சிறுவன் ஜிட்டு, நினைவுகளையும் கனவுகளையும் சேர்த்துத் தண்ணீருடன் விழுங்கும் ரங்கராஜன், கடைக்கருகே பழத்தோலைத் தின்று வாழும் ஆட்டிடம் கருணை காட்டும் சின்னையா, ரோஜாச்செடி ரங்கையா, ரதசாரத்தியம் செய்யப் பிறந்திருக்கும் பெண் குழந்தை இவர்கள் நம் நினைவில் தங்கிவிடுகிறார்கள். ஆசிரியர் வாழ்க்கையை ரசிப்பவர். இயற்கையை ரசிப்பவர். வாழ்க்கையின் அவலங்களையும், நிறைகளையும் குறைகளையும் ஊன்றிப் பார்ப்பவர்.

குழந்தை தன் குண்டு விழியை உருட்டிப் பார்ப்பதையும்,. படகு மாதிரி வாகாய் அழகாய் வளைந்திருக்கும் வாகை மரத்தின் காய்ந்த பழ ஓட்டையும், மின்சார அதிர்ச்சியாய்த் தொட்டாச்சுருங்கி இலைகளைச் சுருக்கி இழுத்துக் கொள்வதையும், சிறுவன் ஷூ பாலிஷ் போடும் நேர்த்தியையும், பார்வதியின் மன உளைச்சலையும்கூட ரசனையும் அனுதாபமும் சேர நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

'அர்த்தமற்ற வாழ்க்கை' என்று கருதக்கூடிய சில நிலைகளிலும் ஆழமான பொருளைத் தேடும் முயற்சியில் சுப்ர.பாலன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

- ஆனந்தி

About Subra Balan :

திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.

விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.

Rent Now
Write A Review

Same Author Books