Home / eBooks / Menaka Part 2
Menaka Part 2 eBook Online

Menaka Part 2 (மேனகா (இரண்டாம் பாகம்))

About Menaka Part 2 :

பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையம் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.

அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ‘திகம்பர சாமியார்’ இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.

‘இவ்வளவு வருடங்கள் ஆகி விட்டதே! போர் அடிக்காதா?’ என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன்றாக உள்ளது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் இப்படிப்பட்ட நாவல்களை எழுதியதால் ஏராளமான நற்சாட்சிப் பத்திரங்களையும், தங்க மெடல்களையும் பெற்று உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இந்த நாவல்களைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டும், போற்ற வேண்டும், நாங்களும் நிறைய புத்தகங்களை விற்க வேண்டும். இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? இந்தப் புத்தகங்களை வாங்கும் அனைவருமே புத்திசாலிகள்தான்.

About Vaduvoor K. Duraiswamy Iyangar :

வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் 'மனோ ரஞ்சனி' (19) என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர்.

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திரு மண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை.மு.கோ., எஸ்.எஸ். வாசன் வந்து போவர்.

மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன். வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவமானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்!

இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின.

திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.

வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

தமிழ் இலக்கிய வரலாறு

Rent Now
Write A Review

Same Author Books