முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது.
காலந்தோறும் கவிதையின் வடிவமும் செயல்பாடும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அது சார்ந்த இலக்கணம் அமைப்பு இவையும்கூட. கவிதைக்குத் திட்டவட்டமான வரையறை எதுவுமில்லை என நினைக்கிறேன். இல்லாத அல்லது மாறிக்கொண்டே இருக்கும் வரையறைகள்தான் கவிதை மீது தீராத வசீகரத்தை ஏற்படுத்துகின்றன.
வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள். இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன.
நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை.
1971இல் மதுரையில் பிறந்து, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசித்து வருகிறார்.
கதா, இலக்கியச் சிந்தனை, திருப்பூர் தமிழ்ச்சங்கம், சிற்பி கவிதைப் பரிசு, ஏலாதி, இந்தியா டுடே சிகரம், நஞ்சன் கூடு, திருமலாம்பாள் சாஷ்வதி விருது, அங்கம்மாள் முத்துச்சாமி அறக்கட்டளை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rent Now