வெளி உலகின் நடப்புகளால், உள்மனதில் உண்டாகும் பாதிப்புகளே, கதையாகவும், கவிதையாகவும், கலையாகவும் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும்போது அவற்றின் முகங்கள் மாறுபடும். சில சிந்திக்க வைக்கும், சில சிரிக்க வைக்கும்... சில சீற்றம் கொள்ளச் செய்யும். சில சீர்திருத்தம் செய்யும். எழுத்தாளர் ரேவதி பாலுவின் எழுத்துக்கள் இவையெல்லாவற்றையுமே நம்மில் செய்யக்கூடிய வித்தகம் கொண்டவை.
கடந்த 13 ஆண்டுகளாக நான் ராஜம் மகளிர் இதழின் பொறுப்பேற்று பணிபுரிய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அவரும், அவரது எழுத்துக்களும் என் மனதிற்கு மிகவும் பிடித்தமானவை... நெருக்கமானவை.
ஒரு மாதத்திற்கு சராசரியாக முப்பது முதல் நாற்பது சிறுகதைகளை படித்துத் தேர்வு செய்கின்ற நான், ரேவதியின் சிறுகதைகள் தபாலில் வந்தால், ஒத்திப் போடாமல் உடன் படிப்பேன் என்பதும், இன்றுவரை அவரது சிறுகதைகளில் ஒன்றையும் நான் தகுதியில்லை என்று திருப்பி அனுப்பியதில்லை என்பதும், அவரது எழுத்திற்கு அவர் ஈட்டிய பல்வேறு புகழ் மொழிகளில் ஒரு நிஜ மொழி! ஆரவாரமோ, அலட்டலோ அவரிடமும் இல்லை... அவரது எழுத்துக்களிலும் இருப்பதில்லை.
யதார்த்தமும் இயல்பான சரளமும், எளிமையான கலைத்தன்மையும் அவரது படைப்புகளில் நிறைந்திருக்கும். தொலைபேசித் துறையில் பணியாற்றிக்கொண்டே, எஞ்சிய பொழுதுகளை எழுத்திற்குச் செலவழிக்கும் ரேவதி, ஒரு நல்ல மனசிற்குச் சொந்தக்காரர். பழகும்போது, மற்றவரது உடல், மனநலன் குறித்த அவரது அக்கறை இயற்கையாகக் கனிந்து வருவதை நான் உணர்ந்திருக்கிறேன்.
தெளிந்த, அன்பான மனதில் இருந்து ஊற்றெடுக்கும் சீரிய சிந்தனைகள், இந்தச் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்டக் கூடியவை.
ரேவதியின் எழுத்துக்களும் அப்படித்தான். உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின் எழுத்தினிலே ஒளியுண்டாகும். என் வார்த்தைகள் உண்மையென்று இச்சிறுகதைத் தொகுப்பை படிக்கும் போது, நீங்களும் உணர்வீர்கள்.
மேலும் பல இறவாத புகழுடைய புது நூல்கள், பலநூல்கள் ரேவதி எழுத வேண்டும். மேன்மேலும், நிறைந்த புகழ்பெற வேண்டும் என்று நெஞ்சு நிறைந்த அன்புடன் வாழ்த்துகின்றேன். நல்வாழ்த்துக்கள்.
சந்திரா ராஜசேகர்,
இணையாசிரியர் - ராஜம் & பேசும்படம்.
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.
பரிசுகள்:
1) இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கிறார்.
2) ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகையின் வைரவிழாப் போட்டியில் இவருடைய நகைச்சுவை ஓரங்க நாடகம் முதல் பரிசு வென்றிருக்கிறது.
3) கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
4) கலைமகள் 'குறுநாவல்' போட்டியில் இரண்டாவது பரிசு.
5) 'இலக்கிய பீடம்' மாத இதழ் வருடந்தோறும் நடத்தும் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
6) மங்கையர் மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
7) நெய்வேலி புத்தக கண்காட்சியில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது.