முல்லாவின் பெயர் நஸ்ருதீன். செல்லமாய் முல்லா. முல்லா என்றால் அறிவாளி என்று வைத்துக் கொள்ளலாம். இவர் துருக்கி நாட்டில், எஸ்கிசெர் என்கிற ஊரில் பிறந்தார். துருக்கி, கிரீஸ், ஈரான், மத்திய ஆசியா போன்ற நாடுகளில் முல்லா மிகவும் பிரபலம்.
இவரின் பிறந்த நாள் துருக்கி நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளின் போது அவரது சமாதிக்கு முன் மக்கள் ஒன்றாக கூடி, அவரது கதைகளை நாடகமாக நடித்து, சிரித்து மகிழ்கிறார்கள்.
ரஷ்யாவில் முதலாளித்ததுவத்தை இவரது கதைகளின் ஊடாக கிண்டல் செய்கிற விதத்தில் திரைப்படம் எடுத்து, முல்லாவிற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள்.
பிரிட்டன் முல்லாவின் கதைகளை கார்ட்டூன் திரைப்படமாக தயாரித்திருக்கிறது.
ஆசியா முழுவதும் முல்லா பரவலாக இன்றும் அறியப்பட்டிருக்கிறார். முல்லா ஒரு அறிவுஜீவி... அடிமுட்டாளின் கோணத்திலிருந்து தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை செயல்படுத்துபவர். நாணயத்தின் இரண்டு பக்கமுமாய் இயங்குபவர். மேலோட்டமாக பார்ப்பதற்கு அவரின் செயல்கள் முட்டாள்தனமாக தோற்றமளிக்கும். ஆனால், அவரின் அதிபுத்திசாலித்தனமும், மாற்றி யோசிக்கிற ‘லேட்டரல் திங்கிங்’ என்கிற உத்தியுமே அவரை அவ்வாறு இயக்குகிறது என்பதை அவரின் கதைக்குள் ஆழமாய் பயணிக்கிறபோது உணர்ந்து கொள்ள முடியும். அவர் சமூகத்தின் பொது மனநிலையிலிருக்கிற பலதரப்பட்ட குணவியல்புகளை வெளிப்படுத்துபவராகவும், அப்படியான சுயநல பார்வையின் எதிர்நிலைப்பாட்டையும் ஒரே சமயத்தில் அவரே எடுப்பார். அந்த மேஜிக் தான் முல்லா. சமூகத்தில் உள்ள சிறுமைகளை வெளிப்படுத்தி, எள்ளி நகையாடக் கூடியவராக இருக்கிறார். யாரும் யோசிக்காத கோணங்களில் யோசிக்க கற்றுத் தருபவராய் இருக்கிறார்.
அற்புதமான அந்த கருவூலத்தை, இன்றைய பதின் பருவத்தினரும், இளைஞர்களும் விரும்பிப் படிக்கிற விதத்தில் எளிய, நவீன நடையில், அவரின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, இந்த தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறேன். முல்லாவிற்குள் ஒரு முறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான அவரின் வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக் கொண்டு சென்று விடுவார்.
நட்புடன், தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now