Home / eBooks / Naan Krishna Devarayan - Part - 2
Naan Krishna Devarayan - Part - 2 eBook Online

Naan Krishna Devarayan - Part - 2 (நான் கிருஷ்ண தேவராயன் பாகம் - 2)

About Naan Krishna Devarayan - Part - 2 :

ஆறுகளில் புதுப்புனல் வரும் நாட்களில் மக்கள் உணர்ச்சிப் பெருக்கிலே திளைப்பார்கள். புது நோக்குடனே புதுப்பொலிவுடனே அனைத்தையும் கண்டு மகிழ்வார்கள். புதுப்புனலிலே பாய்ந்து விளையாடுவார்கள். புதுப்புனலை அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். எனினும் அவ்வெள்ளம் இரு கரைக்குள் பெருக்கெடுத்து ஓடும் போதுதான் எழிலாய் இருக்கும். கரையை அழித்துக் கொண்டு பாய்ந்தால் ஊருக்கும் மக்களுக்கும் மரஞ்செடிகொடிகளுக்கும் அழிவுதான். அதுபோல் கவிதையை, கதையை எழுதும் ஆசிரியனிடம் மக்கள் புதுமையை எதிர்பார்க்கிறார்கள். அப்புதுமைப் படைப்புகளில் உணர்ச்சிப் பெருக்கைக் காண்கிறார்கள்.

மக்களின் உணர்ச்சிகளை நன்கு உணர்ந்து எண்ணிலா எழுத்துக்களைப் படைத்துள்ள முதுபெரும் எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்கள், 'நான், கிருஷ்ண தேவராயன்' என்னும் இந்நவீனத்தைப் படைத்துள்ளார்கள்.

இந்திய வரலாற்றில் ஒப்பரும் மேதைகளில் சிறந்த அரசன் கிருஷ்ணதேவராயர். தோல்வி என்பதையே அறிந்திராத தீரன். சமயத்துக்கும், கலைக்கும், அரசியல் பண்புக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இம்மாமன்னன் செய்துள்ள பணி மகத்தானது. அவனது புகழைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் அவனது சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவனைப்பற்றி வெளிநாட்டார்கள் வியந்து எழுதிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவனது உருவச்சிலையும் அவனது தேவியர் திருமலாம்பா, சின்னாதேவி ஆகியோர் சிலைகளும் திருப்பதி கோயிலில் இன்றும் உள்ளன. ஹம்பி, காளத்தி, காஞ்சிபுரம், தில்லை ஆகிய இடங்களில் அவன் கட்டிய கோபுரங்கள் அவனது வானளாவும் புகழை இயம்பி இன்றும் நம்மிடையே திகழ்கின்றன. அம்மாமன்னனது வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை உருவாக்கியுள்ளார் ரா. கி. ர. அவர்கள்.

இது ஒரு நாவல் தான். ஆனால் இதுகாறும் வந்திராத ஒரு புதுமை அமைப்பிலே தோன்றியுள்ள நாவல் இது. மாமன்னன் கிருஷ்ணதேவராயனே தனது கதையை சொல்வதுபோல் அமைத்திருக்கிறார். ஆதலின் இது புதுமையிற் புதுமை.

கிருஷ்ண தேவராயனின் ஆட்சிக்காலம் ஈடு இணையற்ற காலம். அவரது ஆட்சியில் சிறந்த அமைச்சர்கள் திகழ்ந்தனர். கவிஞர்கள் திகழ்ந்தனர். நாட்டியக் கலைஞர்களும் கட்டிட கலைஞர்களும் விளங்கினர். வெளிநாட்டோர் வந்தனர். அத்தனை பேருடைய பாராட்டுதலையும் பெற்ற அரசன் கிருஷ்ண தேவராயர். அவரது பாத்திரத்தை ஒரு குறையின்றி நாவலில் வடிப்பது என்பது எளியது அல்ல. அதிலும் தானே தன் வரலாற்றை கூறுவதுபோலப் படைப்பது மிக மிகக் கடினம். ரா. கி. ர. இப்புதிய மரபில் ஒரு மகத்தான வெற்றியை நிறுவிக் காட்டியுள்ளார்.

அம்மன்னன் காலத்தில் வாழ்ந்த மேதைகள் அத்தனை பேரும் இக்கதையில் உயிரோடு நம் முன் தோன்றுகிறார்கள். அவரவர் இடம் பெறும் இடமும், பெறும் பங்கும் அவரவர் குணத்துக்கும் சிறப்புக்கும் ஏற்ப அமைந்துள்ளன. அக்காலத்துப் பழக்கவழக்கங்களும் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன. மன்னனின் தாய், அப்பாஜி, அரிதாசர் தெனாலி ராமகிருஷ்ணகவி என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். இந்நாவலில் புனைந்துரைப் பாத்திரங்கள் எனக் கூறுவதே கடினம். ஆதலின், இது ஒரு வரலாற்று நூல் என்றே கூறவேண்டும். ஆனால் வரலாற்று நூல்கள் சுவையின்றிக் காணப்படும். இது சுவை நிறைந்த வரலாற்று நூல்.

கிருஷ்ணதேவராயரைப் பற்றி இனித் தமிழில் இந்நூலைத்தான் ஆதாரமாகக் காட்டுவார்கள் என்று கூறுகிற அளவுக்குச் சிறந்த நூல். இதை நான் ஒரு புதிய இலக்கியமாகக் கருதுகிறேன். ஆசிரியர் இந்நூல் ஒரு இலக்கியமாகத் திகழவேண்டும் என்பதற்காக எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தேடிச் சேகரித்துத் தொகுத்துள்ளார் எனக் காணும்போது வியப்பாக உள்ளது. அராபியக் குதிரைகள் வந்தமை, காகிதம் முதன் முதலில் வந்தமை, போர்த்துக்கீசியர் வருகை, படையெடுப்புகள், மன்னனுக்கு நாட்டியத்தின் பாலிருந்த ஈடுபாடு, வெளிநாட்டோர் குறிப்பிட்டுள்ளது எனப் பல வரலாற்றுச் செய்திகள் மிக அழகாக இடம்பெற்றுள்ளன. புதியதோர் இலக்கியத்தைத் தந்துள்ள ஆசிரியரின் ஆற்றலைப் போற்றுகிறேன்.

புதுமை, புரட்சி என்ற தலைப்பில் நினைத்ததை எல்லாம் கரைகடந்து எழுதுவது எழிலற்று, பயனற்று, காவையற்று, சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்கும். ஆதலின் அதைத் தவிர்த்து, புதுமை என்னும் "நோக்கிலே" என வருங்கால எழுத்தாளர்கட்கு வகுத்துள்ள பழமையில் புதுமை இது. ஆசிரியர் தமிழுக்குச் செய்துள்ள பெரும் தொண்டு என்பதில் ஐயமில்லை. ரா. கி. ரங்கராஜன் அவர்கள் நீடு வாழ்ந்து இது போன்ற பல புதிய பாணிகளைத் தமிழுக்கு அளிக்க இறையருளை இறைஞ்சுகிறேன்.

இரா. நாகசாமி

About Ra. Ki. Rangarajan :

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Rent Now
Write A Review

Same Author Books