ஐந்து வருடங்களுக்கு முன் நான் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது முன்பின் தெரியாத இடத்திற்கு வந்தது போல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததன் காரணமே இங்குதான் நான் சிறு பிராயத்திலிருந்து வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்தேன் என்பதும் அதனாலேயே ஆசைப்பட்டு நிலம் வாங்கி வீடு கட்டினோம் என்பதும்தான். ஆனால் நான் வளர்ந்த, எனக்குப் பரிச்சயமான அமைதியான நகரம் காணாமல் போயிருந்தது. அதன் பொறுமைமிக்க நாகரீகம் மறைந்துவிட்டது. விசாலமான தெருக்களுக்குப் பெயர் போன நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிற்று. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் யுவதிகள், ஜீன்ஸும் ஷர்ட்டுமாக எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்கவோ இரு சக்கர வாகனங்களிலோ கார்களிலோ பறந்தார்கள். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் வேளையிலும் தெரு நடுவில் இருப்பது போல வாகன இரைச்சல் கேட்டது. நான் நொந்து போனேன். மாறிப்போன பெங்களுர் எனக்கு மிரட்சியைத் தந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வானளாவிய மரங்களும், வீடுகளுக்குள் இருந்த பூச்செடிகளும் பருவம் தவறாமல் பூத்துக் குலுங்கின. அது ஒன்றே என்னை மகிழ்வித்த விஷயம். நான் இந்தியாவில் பல நகரங்களில் வசித்திருக்கிறேன். இந்த அளவுக்கு எந்த நகரமும் தடம் புரண்டு போனதாகத் தோன்றவில்லை.
ஆனால் நகரங்கள் மாறுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளாலேயே மாற்றம் ஏற்படுகிறது. அரசியல், வர்த்தகம் ஆகிய துறைகள் முக்கிய பங்கேற்கின்றன. வாழ்க்கை முறையையும் பண்பாடுகளையும் மாற்றுகின்றன. அது நன்மைக்கா தீமைக்கா என்பது மக்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது.
மிக சாதுவான (ஒருகாலத்தில்) கன்னடியர்கள் நீருக்கும் மொழிக்கும் நிலத்துக்கும் இன்று திடீர் திடீரென்று வெறியில் வெடிக்கையில் எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போதுதான் நகரங்களின் வரலாறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றின சிந்தனை என்னுள் தீவிரமாக எழுந்தது. அதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று.
மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் மனித மனத்தின் பேராசையும் அகந்தையும் சக ஜீவிகளிடம் இருக்கும் அக்கறையின்மையுமே காரணம் என்றாலும் நமது நகரங்கள் வளர்வதற்கும் அழிவதற்கும் பிரச்சினைகள் உருவாவதற்கும் பொறுப்பற்ற, இங்கிதமற்ற அரசியலும் பரந்த தொலைநோக்கற்ற நிர்வாக அமைப்புமே காரணம் என்று தோன்றுகிறது. மக்கள் தம்மைத் தாமே சுய புத்தியுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், இது மிக ஆபத்தான நிலவரம் என்கிற தவிப்பு சிந்திக்கும் எல்லா இந்தியப் பிரஜைக்கும் இருக்கும். பெங்களூரிலிருந்து ஆரம்பித்து நான் வாழ்ந்த சில நகரங்களின் மாற்றங்களை, மக்களின் பிரச்சினைகளை, அதன் காரணங்களை ஆராயும் முயற்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
- வாஸந்தி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Rent Now