Ranimaindhan
எனது நினைவுகளை நான் எழுத வேண்டும் என்று என் நண்பர்கள் பல காலமாக என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஜப்பானில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களில் மூத்தவன் என்ற முறையிலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் அந்தப் போர் சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை அந்நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவன், நேரில் பார்த்தவன் என்ற முறையிலும் அவற்றை எழுத்தில் வடித்து வைப்பது பின்னால் வருகிறவர்கள் உண்மை நிலையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த நூலை நான் எழுதியதே ஒரு விபத்தினால்தான். அதுவும் உண்மையான விபத்து. இதுவரை பல புத்தகங்களில் வாசகர்கள் படித்திருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத வகையில் விலகிப்போய் இந்தப் புத்தகம் பல சம்பவங்களை விசாரிக்கிறது. எனது கணிப்புகளைப் படித்துவிட்டுப் பலர் புருவங்களை உயர்த்தக் கூடும். பாரபட்சமான அரசியல் விளம்பரங்களையும், பிரசாரங்களையும் நம்பிப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.
கு. ராதாகிருஷ்ணன், 15.10.1944 ல் பிறந்தார். பி.காம்., சி.ஏ.ஐ.ஐ.பி., படித்துள்ளார். ராணிமைந்தன் எனும் புனை பெயரில் பல கதைகள் எழுதியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையில் அக்டோபர் 1965 முதல் மார்ச் 1997 வரை - 32 ஆண்டுகள் பனியாற்றினார். பின் லண்டன் பி.பி.சியின் தமிழ் வானொலிப் பிரிவான 'தமிழோசை சேவையில் சென்னை அலுவலகத்தில் நேயர் நல்லுறவு அதிகாரியாக ஏப்ரல் 1997 முதல் அக்டோபர் 2004 வரை - 7 ஆண்டுகள் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகி வரும் 'தமிழ் முழக்கம் பண்பலை வானொலிக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலிருந்து வாரம் தோறும் செய்தி வாசித்துள்ளார்.
அமெரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்ரீலங்கா, ஆகிய வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.
திரு. சாவி அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'தினமணி கதிர்', 'குங்குமம்', 'சாவி' இதழ்களில் 1975 முதல் 2000 வரை மூவாயிரத்திற்கு மேற்பட்ட பேட்டிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் - தினமணி கதிரில் வாரந்தோறும் அக்கரைச் சீமை என்ற தலைப்பில் உலக நடப்புகள் பற்றிய தகவல் தொகுப்பை 180 வாரங்களுக்கு எழுதியுள்ளார்.
சாவி அவர்களின் மறைவிற்குப் பிறகு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஈடுபாடு பல்துறை பெருமக்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.
சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருது (2002), சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'தமிழ் வாகைச் செம்மல் விருது (2003), ஃபிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'நூல் வேந்தர் விருது (2006), அகில இந்திய சமூக நல அமைப்பு, புதுச்சேரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2009), அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களின் 85ஆம் பிறந்த நாள் மங்கல விழாவில் சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய சான்றோர் விருது (2010), தமிழக அரசின் 'கலைமாமணி' விருது (2011), சென்னை தேவன் அறக்கட்டளை வழங்கிய தேவன் நினைவுப் பதக்கம் (2011), சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்குரிய சேக்கிழார் விருது (2016), 'ராம்கோ ராஜா' - நன்னெறி வாழ்க்கை நூல் 2017ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இலக்கிய சிந்தனை அமைப்பு வழங்கிய பாராட்டு (2018), சென்னை கம்பன் கழகம் வழங்கிய திருமதி சி.எம்.பிரேமகுமாரி ,நினைவுப்பரிசு (2018) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.