பதினெட்டுப் புராணங்கள் பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஆக்னேய புராணம், கந்த புராணம், பௌஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் எனப்படும்.
இவற்றோடு, பதினெட்டு உப புராணங்களும் உள்ளன. அவை: சனத் குமாரியம், நரசிம்மம், நந்தியம், சிவரகசியம், தௌர்வாசம், நாரதீயம், கபிலம், மானவம், வருணம், தேவி பாகவதம், வசிஷ்டம், கல்வி, காணபதம், ஹம்சம், சாம்பம், ஸௌரம், பராசரம், பார்க்கவசம் என்பனவாகும்.
பதினெண் புராணத்தில் சிவ புராணத்திற்கு பதில் வாயு புராணத்தைச் சேர்த்துக் கொள்வதும் வழக்கத்தில் உண்டு.
புராணம் என்பது என்ன? அது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும். வேதத்தில் சொல்லப்படுபவை, கட்டளையாக, ஏவலாக, ‘இது, இப்படித்தான்’ என்ற வகையில் சொல்லப்பட்டிருக்கும். புராணங்களோ இலகுவான முறையில் சுலபமாகப் புரியும் வகையில் எளிய கதைகள் மூலம் கருத்துகளை விளக்குகின்றன. புராணங்களை பாமரருக்குச் சொல்லப்பட்ட ஞானக் கருவூலங்கள் என்றே சொல்லலாம். சத்தியத்தையே பேசவேண்டும் என்று அரிச்சந்திர புராணம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. இதை, ‘சத்யம் வத' என்கிறது வேதம்.
ராமாயண காவியத்தில், ‘பித்ரு தேவோபவ’' என்பதில் ஆரம்பித்து - அதாவது தந்தையையே தெய்வமாகக் கொள், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை - எத்தனை எத்தனையோ அரிய கருத்துகளை எளிதாகப் புரிந்து கொண்டு, அந்த நற்பண்புகளைப் பின்பற்றவும் முடிகிறது.
அதனால்தான் வேதங்கள் சொல்லும் தத்துவங்களை புராணங்கள் நமக்கு எளிமையாகப் புரிய வைக்கின்றன எனலாம்.
ஏதேனும் பிரச்னை காரணமாக மனக்கலக்கம் கொண்டவர்களை ‘சுந்தர காண்டம்’ படிக்குமாறு பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். ராமாயண இதிகாசத்தில், அனுமன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே திகழும் சுந்தர காண்டம், படிப்போருக்கு மனோதைரியம், உறுதியான புத்தி, பயமற்ற தன்மை, வாக்கு மேன்மை போன்ற பல நற்குணங்களை அருளவல்லது. அதைப் போன்றதுதான் நாரத புராணமும். நல்லொழுக்கம், வாய்மை, தூய்மையான பக்தி என்று நன்னெறி வாழ்வியலை அருளக்கூடியது.
பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான நாரதர் புராணம், எளிமையாக, சம்பவக் கோர்வையாக, உங்கள் மேலான சிந்தனைக்கும், பாதுகாத்தலுக்கும் இங்கே வழங்கப்படுகிறது.
நாரதர் என்றாலே கலகத்தை மூட்டி விடுபவர் என்றும், ஆனாலும் அவர் கலகமாக ஆரம்பிப்பதெல்லாம் நன்மையாகத்தான் முடியும் என்றும் பரவலாக அறியப்பட்ட விஷயங்கள். நன்மையாக முடியவேண்டியவற்றை ஏன் கலகமாக ஆரம்பிக்க வேண்டும்? அதுவும் ஒரு சுவாரஸ்யத்துக்காகத்தான். அப்போதுதான் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்கள், நன்மையான முடிவை தெளிவாக, மனதில் ஆழமாகப் பதியுமாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காகத்தான். இப்படி நாரதரை இப்போதைய மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை ஊர்ஜிதப்படுத்தவும் செய்த பெருமை ஆன்மிக எழுத்தாளர்களையும், பத்திரிகைகள், நாடகம், சினிமா போன்ற ஊடகங்களையுமே சாரும்.
-பிரபுசங்கர்
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now